1925 - ஜூன் 4
கடந்த, 1881 ஏப்ரல் 2ம் தேதி, திருச்சி, வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயர் - - காமாட்சியம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார், வ.வே.சுப்ரமணிய ஐயர்.
பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றவர், அங்கு இந்திய சுதந்திர போராட்ட வீரராக உருவெடுத்தார்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறில் வ.வே.சு. ஐயர் தனியொரு அத்தியாயம். காந்தியின் அமைதிப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்த காலத்தில்தான், ஐயர் துப்பாக்கிகளின் தோழன் ஆனார்.
ஆங்கிலேய அரசு, இவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தது. தப்பித்து, புதுச்சேரி வந்தார்.புதுச்சேரியில், சுதந்திரப் போராட்ட வீரர்களை உருவாக்கினார்;
சாகசங்களின் செல்லப்பிள்ளை ஆனார்.
இன்றைக்குச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட வாஞ்சிநாதனுக்கு, அன்றைக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குச் சொல்லிக்கொடுத்து ஆஷ் கொலைக்கு அஸ்திவாரம் அமைத்தார்.
ஆளைப் பார்த்தால் நம்பவே முடியாது. அப்படியொரு ஆசாரசீலர். அமைதி தவழும் முகம். பார்வையில் தீட்சண்யம். கட்டுக் குடுமியும் கை நிறையப் புத்தகங்களும் ஒற்றை வேட்டியும் உருவிய தாடியுமாக ஐயர் நடந்துவந்தால் காவி மட்டுமே மிஸ்ஸிங்; மற்றபடி துறவியேதான் என்று சொல்லிவிடலாம். சாவர்க்கர் மற்றும் பலர் இவரை ரிஷி என்றே செல்லமாக அழைப்பர்.
ஆனால் இந்தியாவின் சுதந்தரத்துக்கு ஆயுதப் புரட்சி ஒன்றே தீர்வு என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. லண்டனில் படிக்கப் போன காலத்தில் வீர சாவர்க்கர் உருவாக்கி, உருவேற்றி வைத்த நம்பிக்கை அது.
சாவர்க்கர் கைதானபிறகு, ஐயர் லண்டனிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்த விதம், கற்பனைகூடச் செய்யமுடியாதது. சாகசம் என்கிற சொல்லுக்கு அர்த்தம் சொல்லும் சரித்திரம் அது.
ஐயரின் இன்னொரு முகம் இலக்கியம் சார்ந்தது. கம்பரில் தோய்ந்தவர்.
தமிழுக்குச் சிறுகதை என்கிற வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்.
தமிழுக்குச் சிறுகதை என்கிற வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்.
கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'குளத்தங்கரை அரசமரம்' என்ற பெயரில், முதல் சிறுகதையை வெளியிட்டார்.
பின்னாளில் தம் தீவிரப் பாதையை விடுத்து, திருநெல்வேலி சேரன்மாதேவியில் குருகுலம் அமைத்து அமைதியில் தோய்ந்தது ஓர் அழகிய மாற்றம்.
பாபநாசம் அருவியில் தவறி விழுந்த, தன் மகளைக் காப்பாற்ற முனைந்தபோது, வ.வே.சு., எதிர்பாராத வகையில் இறந்தார். அந்த நாள் இன்று!
No comments:
Post a Comment