Friday, April 2, 2021

கரூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்- தலைமைச்செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்.

 கரூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை தேர்தல் இல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ய உத்தரவிட்டு தலைமைச்செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

கரூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்- தலைமைச்செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
மலர்விழி


















தமிழகத்தில் தேர்தல் நேரங்களில் பணப்பட்டுவாடா மூலம் அரசியல் கட்சிகள் ஓட்டுகளை அள்ளும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது இந்திய அளவில் தமிழகத்திற்கு கெட்ட பெயரை ஈட்டித்தந்துள்ளது.

எனவே இந்த தேர்தலில் இந்த நடவடிக்கைகளை ஒடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இதற்காக 2 சிறப்பு செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்தது.

அவர்கள் வெவ்வேறு வகைகளில் தகவலை சேகரித்து, பணப்பட்டுவாடாவை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும்படை, கண்காணிப்புக்குழு ஆகியவற்றுடன் நேரடி தொடர்பில் உள்ளனர்.

பணப்பட்டுவாடா புகார்கள், அதில் அதிகாரிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் தேர்தல் விதி மீறல்கள், அது தொடர்பான புகார்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகியவற்றை தீவிரமாக பரிசீலிக்கின்றனர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றில் பாகுபாடு பார்ப்பது, இந்த பாகுபாட்டின் அடிப்படையில் புகார்களை விசாரிப்பது என்பது உள்ளிட்டவற்றை தேர்தல் கண்காணிப்பாளர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் தரும் ரகசிய தகவல்களை சரிபார்த்து உண்மையைக் கண்டறிந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கிறது. தேர்தல் பார்வையாளர்களின் கருத்துகளை தேர்தல் ஆணையம் உறுதியாக நம்புகிறது. எனவே பாரபட்சம் பார்க்காமல் அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் 23-ந்தேதி கோவை மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் தேர்தல் பணியில் இருந்து நீக்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து திருச்சி அருகே 1 கோடி ரூபாய் கைப்பற்ற விவகாரத்தில் திருச்சி கலெக்டர் எஸ்.சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு பி.ராஜன், சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தேர்தல் இல்லாத பணிகளுக்கு மாற்றப்பட்டனர்.

அதோடு, போலீஸ் உயர் அதிகாரி இடைக்கால பணிநீக்கம், இடமாற்றம் போன்ற தொடர் நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி மீது பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதிக அளவில் புகார் செய்யப்படும் மாவட்டமாக கரூர் விளங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் நேற்று சில அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேய் மாலிக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கரூர் மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி, தேர்தல் அல்லாத பணிக்காக மாநில தலைமையகத்திற்கு மாற்றப்பட வேண்டும். கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரியாக பிரசாந்த் வடநேரே நியமிக்கப்பட வேண்டும்.

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாநில தலைமையிடத்தில் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட வேண்டும். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஷசாங் சாய் நியமிக்கப்பட வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு டி.ஜெயச்சந்திரன், காலியாக உள்ள கோவை தலைமையக துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட வேண்டும். இவர்களை இடமாற்றம் செய்யும் உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை 2-ந்தேதி (இன்று) பிற்பகல் 1 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...