26 ஆவது குருமகாசந்நிதானத்தின் குருபூஜை விழா மலரில் "உன்னை நினைந்தே கழியும் என் ஆவி" எனும் பகுதியில் 27 ஆவது குருமணிகள் தமது குருநாதருடன் நடந்த உரையாடல்களையும் அனுபவச் செய்திகளையும் சுவைபட படைத்தருளியுள்ளார்கள்.
அதிலிருந்து ஓர் சிறிய பகுதி...
மகா சந்நிதானம் இரவு நேரங்களில் நிர்வாகம் சம்பந்தமாகவும், தேவஸ்தான சிப்பந்தி சம்பந்தமாகவும் பல விஷயங்களைச் சொல்லுவார்கள். நமக்கு வெறுப்பு விருப்புக்களை வெளி தெரியப்படுத்தக்கூடாது. அப்படித் தெரிந்துவிட்டால் அதனைக் காட்டியே நம்மிடம் சாதிக்க நினைப்பார்கள் அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்றார்கள். நிர்வாகம் என்று சொல்லியவுடன்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்.
என்ற குறளை எடுத்துக் கூறினேன். படித்ததோடு நின்றுவிடாதே, அனுபவத்திற்குக் கொண்டுவரணு
என்றார்கள்.
பரிபூரணம் அடைவதற்கு 10 நாட்கள் முன்பாகத் தம்முடைய இருக்கைக்குப் பின்னே நாற்காலி, மேஜை போடச் சொல்லி நீ இங்கேயே வந்து அமர்ந்து நிர்வாகத்தைப் பார் என்று கூறினார்கள். பின்பு இருக்கைப் போட்டு நாற்காலி வசதியாக இருக்கா? மேஜை பெரியதாக வேண்டுமா? மின் விசிறி சரியாக காற்று வருகிறதா? நேரே போடணுமா? சுவற்றில் சுழலும் மின் விசிறியாக இருக்கலாமா? என ஒவ்வொரு மணி நேரமும் வந்து வந்து நின்று பார்த்துவிட்டு, பணியாளரிடம் உத்திரவிடுவார்கள்.
உத்திரவுப்படியே நேரம் காலம் எல்லாம் பார்த்து வந்து அமர்ந்தோம். மறுநாள் முதலாக காலையும் மாலையும் பார்க்கும்பொழுதெல்லாம் உன் சுதந்திரத்தைப் பறிக்கிறேன் என்று சொல்கிறார்களே! உனக்கு எப்படி? என்றார்கள். நாம் சற்றுக் கோபமாகவும், கலக்கமாகவும், எவன் சொன்னது? என்று கேட்டுவிட்டு உலகம் ஆயிரம் சொல்லும் என்னிடம், இளைய சந்நிதானமாக நியமித்து இத்தனை நாட்கள் ஆகியும் நிர்வாகம் சந்நிதானம் கொடுக்கலையே! என்கிறார்கள். சந்நிதானம் கொடுத்தால் வேறு மாதிரிப் பேசுவார்கள்.
இது உலக இயற்கை. சந்நிதானத்தின் திருவுளம் மட்டும்தான் நம்மை நெறிப்படுத்துகிறது. புன்னெறி அதனில் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்துகொண்டிருக்கிறது; மக்களுக்குப் பொழுது போகலைன்னா அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவதே இன்பம். இதை நாம் காதில் வாங்கக் கூடாது என்றேன். சிரித்துக்கொண்டே மீண்டும் மீண்டும் காலை மாலை அந்த இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம் சௌகரியமா இருக்கா? எனக் கேட்டுக் கொண்டே இருக்கும், அப்படியொரு தாயுள்ளம் ஆனால் நம்மைச் சேரவிடமாட்டார்கள், ஜாக்கிரதை எனச் சொல்லிக்கொண்டே இருந்தது.
தாம் சீகாழி கட்டளை விசாரணையாக இருந்தபொழுது தம்மிடம் கை விளக்கு எடுக்கும் பணி பார்ப்பவன் ஒருவன் இருந்தான். சரியான நேரத்திற்கு வந்து தம்முடைய வேலையில் குறையில்லாது செய்பவன். ஒருநாள் கோயில் சென்றதும் விளக்கை வைத்துக்கொண்டு தூங்கிவிட்டான். தாம் தரிசனம் முடித்து வந்த பின்னர் அவன் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். வேறு பணியாளர் மூலம் கை விளக்கு எடுத்துக்கொண்டு கட்டளை மடம் வந்துவிட்டதாகவும் மறுநாள் அந்த நபரிடம் ஏய்! என்ன வந்த மாதிரி இல்லையே? என்று கேட்டதாகவும் அதற்கு அப்பணியாளன் எல்லோரும் பிறந்த மாதிரியேவா இருக்காங்க சாமி என்று கூறினான் அவன் அப்படிப் பேசியது தவறுதான். ஆனாலும் நாம் அதை ஒரு வாக்கியமாக எடுத்துக்கொண்டோம்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
என்ற குறளுக்கு ஒப்ப உரையாக நாம் கண்டோம். பிறந்தபோது உடையணிவதிலிருந்து பிறரின் உதவியோடே காரியங்கள் ஆற்ற வேண்டியிருக்கிறது. வயது ஆக ஆக எல்லா நிலையிலும் வளர்ச்சி பெறுகிறான். இவ்வுண்மையைக் கைவிளக்கு எடுப்பானிடம் நாம் அறிந்தோம். இப்படித்தான் எல்லாச் சிப்பந்திகளும் வேலை கிடைக்கிற வரைக்குமோ அல்லது ஏதேனும் கையொப்பம் ஆகும் வரைக்குமோ நாம் சொல்வது சரியென்பார்கள். அதை மறுத்தால் நம்மைச் சரியில்லையெனப் பேசுவார்கள் இதுதான் நிர்வாகம் என்று பேசிக்கொண்டிருந்தது.
அதுபோது என்னிடம் பணிவிடை செய்கின்ற பையன் வந்தான்.கையில் கட்டு போட்டிருந்தான் என்னடா கையிலே கட்டு? போலீஸ் அடித்ததா? என்று கேட்டது. நாம் உடனே, அவன் வீட்டு முன்பு வண்டியோடு விழுந்துவிட்டதாகச் சொன்னான் என்றேன். உடனே சிரித்துக்கொண்டது.
திரும்பவும் இரண்டு நாள் கழித்து மீண்டும், போலீஸ் அடித்ததா? என்றது. அன்றும், நாம் அவன் அப்படித்தான் சொன்னான் என்று மீண்டும் கூறினோம்.
நாம் அவனிடம், என்ன விஷயம்? உண்மையைச் சொல் போலீஸ் அடித்தாரா? என்றோம். இல்லை
நாங்க நான்குபேர் குருமூர்த்தம் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம் அந்த நேரம் போலீஸ் ரோந்து வந்தார்கள். ரோட்டு ஓரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பையன்களை அடித்து விரட்டிவிட்டு, எங்களை நீங்கள் யார்? என்றார்கள். நாங்கள் மடத்தில் வேலை பார்க்கிறோம் என்றோம். இத்தனை மணிக்கு மேலே இங்கு ஏன் உட்கார்ந்திருக்கிறீர்கள்? எனக் கேட்டுவிட்டு என் போனை வாங்கி, அதிலிருந்தே சூப்பிரண்டிடம் மடத்துப் பையன்களா? எனக் கேட்டுவிட்டு, உங்கள் வீட்டுக்குப் போங்க என எச்சரித்து விட்டு சென்றுவிட்டார்கள் - என்றே திரும்பவும் கூறினான். நாமும் நம்பித்தான் உண்மையென நினைத்தேன்.
தீபாவளி சமீபம் முதல் நாள் இரவு 8 மணிக்குப் படுக்கையில் அமர்ந்துகொண்டு, நம்மை அழைப்பதாகச் சந்நிதானம் பணிவிடை வந்து தெரிவித்தான். நாம் உடனடியாக சென்றோம். சிறுகாட்டூர் திருக்கோயிலைத் தேவஸ்தானத்தோடு இணைக்க வேண்டும், இருபத்தெட்டு ஆகமம் போன்றே போற்ற வேண்டும், ஒரு கோடி முதலீடு செய்ய வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தது. அப்போது பக்கத்தில் அமரவைத்துத் தீபாவளிப் பட்சணங்கள் சீடர்கள் வீட்டிலிருந்து வந்ததைத் தாமும் உண்டு. நம்மையும் உண்ணவைத்தார்கள்.
உங்கள் தாயார் செய்கிற மாதிரியில்லைதான! எனக் கேட்டுச் சிரித்தார்கள். அந்த மகாராசி போயிட்டாள். தாயார் ஊர் சிறுவாரப்பூர். சந்நிதானத்தின் குலதெய்வம் அருள்பாலிக்கும் ஊர் சிறுவாரப்பூர் ஆகும். அந்த நேரம் எம் பணிவிடை வந்தான். மீண்டும் அவனிடம் போலீஸ் அடித்த அடியா இந்த கட்டு எனக் கேட்டது. மௌனமாக இருந்தான். என்னாப்பா? என நம்மைப் பார்த்தது. நாம் அவனிடம் சொல்லுடா? எனக் கூறி மீண்டும் கேட்டேன். மௌனமாக இருந்தான். மீண்டும் கேட்டேன் போலீஸ் அடித்ததா என்று சாமி என மட்டும் பதில் சொன்னான். உடனே, சந்நிதானம் முன்பாகவே, நம்மிடம் பணிவிடையாக இருந்துகொண்டு, நம்மிடம் உண்மையாக இல்லாமல் இருக்கிறான். நாளை எந்த நிகழ்வுக்கும் தயாராகிவிடுவான் எனக் கோபமாகப் பேசினேன். கோபப்படாதே! என நம்மைச் சமாதானப்படுத்தினார்கள்.
வள்ளுவர் யார்க்கு ஒற்று வைக்க வேண்டும் என்று கூறும் பொழுது, முதலில் தன்னிடம் பணியாற்று பணியாள், அடுத்து சுற்றத்தார், மூன்றாவதாகத்தான் எதிரிக்கு வைக்க வேண்டும் என்றார்
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
என்றார். நாம் சற்று இதில் வெளுத்ததெல்லாம் பால் என நினைத்துவிட்டோம்.
மகா சந்நிதானத்திற்கு
கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி புண்ணியத்தின் பாலதே
என்ற நீதிநெறி விளக்கத்திற்குப் பொருளானவர்கள்.
முன்பு உன் வாழ்வில் நடந்த பல சூழ்நிலைகளால்தான் நாம் உம்மைக் கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறோம். உன் சுதந்திரம் பறிக்கப்படவில்லையே என்றது மீண்டும். நமக்குக் கண்கள் குளமாயின. எமக்கு ஏதேனும் துயரம்வரின் கேட்பார் யார் உளர்? மூவுலகுக்கு அன்னையும் அத்தனுமாவார் அவர்களே!
No comments:
Post a Comment