தமிழக நிதியமைச்சர் தியாகராஜன், சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார். அடுத்த நாள் ஊடகங்களில், தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க, தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த கருத்துகளில் உள்ள சாரம் என்ன என்பதைப் பார்த்தால், ஆழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, 'முதல்வர் ஸ்டாலினை விட, எனக்கு தான் மூளை அதிகம்' எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர, வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை.
தியாகராஜன்:
ஜி.எஸ்.டி., கவுன்சிலில் ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு என நிர்ணயித்துள்ளது தவறு. மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வாக்குகள் அளிக்கப்பட வேண்டும்.
உண்மை நிலவரம்:
ஜி.எஸ்.டி., கவுன்சில் உருவாக்கப்பட்ட வரலாற்றைப் பார்த்தாலே இதற்கு பதில் கிடைக்கும். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் தான், ஜி.எஸ்.டி.,க்கு அடித்தளம் இடப்பட்டது.மேற்கு வங்க நிதியமைச்சர் அசிம் தாஸ்குப்தா, கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி என்று பல மூத்த நிதி அமைச்சர்களின் கைவண்ணத்தில் தான், ஜி.எஸ்.டி., சட்டமும் அதன் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது.
அரசியலமைப்பு 101வது திருத்தச் சட்டம் தான், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு அங்கீகாரமும் வாக்கும் வழங்குகிறது. மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்குகள் வழங்கப்பட வேண்டும் என்பது, அர்த்தமற்ற வாதம். ஜி.எஸ்.டி.,யைப் பொறுத்தவரை, மாநிலம் என்பது தான் அடிப்படை அலகு. அங்கேதான் நிர்வாக ரீதியாக ஓர் அரசு நடைபெறுகிறது. அதுதான் மாநில அளவிலான வரி விதிப்பு முறையை உருவாக்கவும், நிர்வாகம் செய்யவும் முடியும்.
மாவட்ட அளவிலோ, எம்.பி., தொகுதி அளவிலோ, தனித்தனி அரசாங்கமா நடைபெறுகிறது? வரிவிதிப்பு முறையா இருக்கிறது? இந்த அடிப்படையை, தியாகராஜன் புரிந்து கொள்ளவில்லை.
தியாகராஜன்:
சிறிய மாநில நிதி அமைச்சரை அதிக நேரமும், பெரிய மாநில நிதி அமைச்சரை குறைந்த நேரமும் பேச அனுமதிக்கின்றனர்.
உண்மை நிலவரம்:
ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், அதற்கான நிகழ்ச்சி நிரலோடு நடத்தப்படுவது. ஒவ்வொரு கூட்டத்திலும் என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும், முடிவெடுக்கப்பட வேண்டும் என்பது நிகழ்ச்சி நிரலில் தெளிவாக இருக்கும்.மாநில அமைச்சர்கள் அவற்றைப் பற்றி, தத்தம் கருத்துகளை, ஆலோசனைகளை, மறுப்புகளை, திருத்தங்களைச் சொல்லலாம். இதில் இவர் கூடுதலான நேரம் பேசலாம், மற்றொருவர் குறைவான நேரம் பேசலாம் என்றெல்லாம் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை.
சமீபத்திய ஜி.எஸ்.டி., சந்திப்புகள் அனைத்தும், எட்டு மணிநேரம் நடைபெறுகின்றன. இதில் சிறிய மாநிலம், பெரிய மாநிலம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கருத்து இருந்தால், சொல்வதற்கான முழு வாய்ப்பு உள்ள இடம் அது.
தியாகராஜன்:
தமிழகம் போன்ற பெரிய மாநிலங்கள், அதிகளவு வரிப்பணத்தை விட்டு தருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் சிறிய மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது.
உண்மை நிலவரம்:
இதில் விட்டுத் தருவதற்கான பேச்சுக்கே இடம் இல்லை.ஜி.எஸ்.டி., வருவாய் என்பது, உற்பத்தி சார்ந்ததல்ல; அது நுகர்வு சார்ந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் எந்த நாடுகளில் எல்லாம் ஜி.எஸ்.டி., அமலில் உள்ளதோ, அங்கெல்லாம் இதுதான் அடிப்படை.
நாம் ஐயாயிரம் கார்களை உற்பத்தி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஆயிரம் கார்கள் தான், இங்கே தமிழகத்தில் விற்பனை ஆகும். மீதுமுள்ள 4,000 கார்கள், வேறு மாநிலங்களில் விற்பனை ஆகும். ஜி.எஸ்.டி., வரி என்பது, இறுதி விற்பனை நடக்கும் இடத்தில் வசூலிக்கப்படுவது. அதனால் எந்த மாநிலத்தில் நுகர்வு அதிகமாக இருக்கிறதோ, அங்கே வரிப்பணம் அதிகம் கிடைக்கும்.
தியாகராஜன்:
ஜி.எஸ்.டி., கவுன்சில் 'ரப்பர் ஸ்டாம்ப்'பாக இருக்கிறது.
உண்மை நிலவரம்:
செயல்படாத ஓர் அமைப்பு, தனிக் கருத்துச் சொல்ல இயலாத அமைப்பை தான், 'ரப்பர் ஸ்டாம்ப்' என்போம். இதுவரை 43 ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்கள் நடந்துள்ளன.பல்வேறு மாநில நிதி அமைச்சர்களும், இதர அமைச்சர்களும் பல்வேறு விஷயங்களில், கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர். அவற்றை கவுன்சில் கணக்கில் எடுத்து, தன் கருத்துகளையும், திசையையும் மாற்றியமைத்து இருக்கிறது.
தியாகராஜன், தன் கருத்துகளை புரட்சிகரமாகச் சொல்கிறோம் என்ற நினைப்பில், இதுநாள் வரை இந்த கவுன்சிலின் மேம்பாட்டுக்காக போராடி வந்துள்ள அத்தனை மாநில நிதி அமைச்சர்களின் பங்களிப்பையும், ஒற்றை வார்த்தையில் மறுதலித்து விட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது.இந்த 43வது கூட்டத்திலேயே, நம் நிதியமைச்சரது தகவல் போதாத தன்மையை, கோவா மாநில பிரதிநிதியான மவின் காடின்ஹோ, 'டிவிட்டரில்' கடுமையாக விமர்சித்துள்ளார்.
சின்ன மாநிலம் என்ற காரணத்தால், கோவாவின் கருத்துகளை எடுத்து வைக்க விடாமல் தடுத்தார் என்று தெரிவித்துள்ளார் மவின் காடின்ஹோ.'புது காபியின் புது மணம் அதிக நேரம் நீடிக்காது; அந்த மணத்தைப் போன்ற தன்மையுடன் இருந்தால், வெகு சீக்கிரத்தில் மவுசு இழக்க நேரிடும்' என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
No comments:
Post a Comment