தமிழக அரசின் முக்கிய முகமாக ஸ்டாலின் மருமகன் சபரீசனை டெல்லிக்கு அனுப்பலாமா என்ற பேச்சுகள் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் மனசாட்சியாக அறியப்பட்ட மறைந்த முரசொலி மாறன் திமுகவின் டெல்லி அரசியலில் முக்கியப் பங்காற்றினார். அவருக்கு அடுத்து பலர் திமுகவின் சார்பில் டெல்லியில் முகாமிட்டிருந்தாலும் அவரது இடத்தை இதுவரை யாராலும் நிரப்பவியலவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திமுக, டெல்லியில் ஒரு பவர் செண்டரை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அதற்காக கலைஞர் கருணாநிதியின் பாணியில் ஸ்டாலினின் நிழலாக வலம் வரும் அவரது மருமகன் சபரீசனை டெல்லி அனுப்ப பேச்சுவார்த்தைகள் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவை பொறுத்தவரை ராஜ்யசபாவுக்கு செல்லப் போவது யார் என்ற ரேஸ் ஓடிக் கொண்டுள்ளது. அதில், ஓபிஎஸ்-க்கு டஃப் கொடுத்த தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த பதவிக்காக திமுகவில் பலரும் காய் நகர்த்திக் கொண்டிருக்க ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு அந்த பதவியை கொடுக்கலாமா என்று சில பேச்சுகளும் ஓடியுள்ளது.
ஆனால், ஏற்கனவே வாரிசு அரசியலில் சிக்கித் தவித்து வரும் திமுகவுக்கு இது கூடுதல் தலைவலியை கொடுக்கும் என்பதாலும், பத்தோடு பதினொன்றாக டெல்லிக்கு செல்வதையும் சபரீசன் விரும்பவில்லை என தெரிகிறது. இருப்பினும், கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்தோடு டெல்லியில் இருந்தால் தமிழக நலனுக்கான இன்னும் வீரியமாக செயல்படலாம் என்பதோடு, ராஜ்யசபா, லோக்சபா எம்பிகளை விட சில வகைகளில் கூடுதல் அதிகாரம் பெற்ற தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை பெறலாம் என்ற யோசனையிலும் சபரீசன் தரப்பு உள்ளதாம்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அதிமுகவின் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இருந்தபோது, அது வெறும் அலங்காரப் பதவியாக செயல்படாமலேயே இருந்தது. ஆனால், தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருக்கும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியால், பிரதமரையோ, அமைச்சர்களையோ உடனடியாக சந்தித்து தமிழகத்தின் நலன்களுக்கான கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
அத்துடன், இந்த பதவி தமிழக அரசின் செயல்பாடுகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கும் அதிகாரம் பெற்ற இப்பதவியை சபரீசனுக்கு கொடுத்தால் டெல்லியில் ஸ்டாலினின் முகமாக அவர் இருப்பார் என்ற ஆலோசனைகள் சூடுபிடித்துள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோர் இந்த பதவியை தனக்கு கேட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின. அப்போதே அந்த தகவலை திமுக வட்டாரத்தில் மறுத்திருந்தனர். ஆனால், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பதவியை சபரீசனுக்கு கொடுக்கலாம் என்று பி.கே. ரெக்கமண்ட் செய்ததாகவும் கூறப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment