விருதுநகர் அரசு மருத்துவமனை டீனாக சுகந்தி ராஜகுமாரி, மே 19ல் பொறுப்பேற்றார். அன்று கலெக்டர் அலுவலகத்தில் காணொலி மூலம் சுகாதாரத்துறை செயலர் தலைமையில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டத்தில் டீன் கலந்து கொள்ளவில்லை.இதுகுறித்து விளக்கம் கேட்டு கலெக்டர் கண்ணன், டீன் சுகந்தி ராஜகுமாரிக்கு நோட்டீஸ் அனுப்பினார்
.அதில் ''மே 19 மதியம் 3:00 மணிக்கு கொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் தலைமையில் காணொலி கூட்டம் நடந்தது. இதில் நீங்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் அரசு செயலாளர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக தெரிவிக்க அலைபேசியில் அறிவுறுத்தியும் வரவில்லை. மாலை 5:00 மணிக்கு டீனின் கணவர் ஐசக் மோகன்லால் கலெக்டரின் அலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மதுரை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் என்றும், கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் டீன் இல்லை. இனி வரும் காலங்களில் டீனை கூட்டத்திற்கு அழைக்கும் பட்சத்தில் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும் எனவும் கூறினாராம்.அரசு பணியில் இருக்கும் ஒருவர் தனிநபரை கொண்டு மிரட்டுவது தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதியை மீறிய செயலாகும். பேரிடர் காலத்தில் தடுப்பு பணியில் முக்கிய பங்காற்ற வேண்டிய டீன் பணியில் அலட்சியமாகவும், மேலதிகாரிகளின் உத்தரவை உதாசீனப்படுத்தும் விதத்திலும் செயல்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை ஏன் மேற்கொள்ள கூடாது என்பதற்கான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டிருந்தது.இதையடுத்து மே 21 முதல் அவர் மருத்துவ விடுப்பில் சென்றார்.
இதுதொடர்பாக விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி டீன் சுகந்தி ராஜகுமாரி, அரசு தலைமை செயலாளர் இறையன்புக்கு அனுப்பிய மனுவில், ''விருதுநகர் மருத்துவக்கல்லுாரியில் மே 19ல் பொறுப்பேற்று விட்டு மருத்துவமனைக்கு தேவையான படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன். சுகாதாரத்துறை செயலருடன், கலெக்டருக்கு ஆய்வு கூட்டம் இருந்ததால் மாலையில் மதுரை வீட்டிற்கு சென்றேன்.கலெக்டர் என்னை பார்க்க வேண்டும் என நிலைய மருத்துவ அலுவலர் கூறினார். கலெக்டரிடம் பேசியதற்கு அவர் ஆய்வுக்கூட்டம் குறித்து எதுவும் குறிப்பிடாமல் ஏன் மரியாதை நிமித்தமாக சந்திக்கவில்லை என கேட்டார். இரவு 8:00 மணிக்குள் வந்து சந்திக்குமாறு கேட்டார். அன்று கனமழை பெய்ததால் என்னால் சந்திக்க இயலவில்லை என்றும், நாளை காலை சந்திக்கிறேன் என அனுமதி கேட்டேன். மறுநாள் மருத்துவமனையில் இருந்தபோது கலெக்டரிடம் இருந்து நோட்டீஸ் பெறப்பட்டது.30 ஆண்டாக எந்தவித களங்கமுமில்லாமல் பணியாற்றி வந்த எனக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகள் தற்போது விருப்ப ஓய்வு பெற்று கொள்ளலாம் என நினைக்க வைத்துள்ளது'' என குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி விருதுநகர் டீன் சுகந்திராஜகுமாரி கூறுகையில், ''கலெக்டர் அளித்த நோட்டீசில் தவறான தகவல்கள் உள்ளது. ஆய்வு கூட்டத்திற்கான அழைப்பு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து வரவில்லை. தவறு செய்யாமல் நோட்டீஸ் பெற்றது வேதனையாக உள்ளது'' என்றார்.
கலெக்டர் கண்ணன் கூறுகையில், ''காலை 10:00 மணிக்கு வந்தவர் மதியம் 2:00 மணிக்கு சென்றுவிட்டார். ஆய்வு கூட்டத்துக்கு வர முடியாத காரணம் குறித்து தெரிவிக்கவில்லை. துறைக்கு சம்மந்தமில்லாத வெளி நபர் என்னிடம் பேசி மிரட்டல் விடுக்கிறார். மரியாதை நிமித்தம் என்பதை டீன் தவறாக பயன்படுத்தி வருகிறார்'' என்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் டீன் விடுப்பில் சென்றதால் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் சங்குமணி, விருதுநகர் டீனாக நேற்று மாற்றப்பட்டார்.
No comments:
Post a Comment