Friday, May 28, 2021

தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் தலங்கள்.

 முனிவர்களுக்கு பெருமாள் தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். அப்படி அவர் காட்சி தந்த 8 தலங்கள், தமிழகத்தில் உள்ளன. அவை ‘அஷ்ட நரசிம்மர் தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் தலங்கள்
நரசிம்மர்


















மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக, நரசிம்மர் அவதாரம் திகழ்கிறது. முனிவர்களுக்கு பெருமாள் தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். அப்படி அவர் காட்சி தந்த 8 தலங்கள், தமிழகத்தில் உள்ளன. அவை ‘அஷ்ட நரசிம்மர் தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. அந்த ஆலயங்களை சிறு குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

சிந்தலவாடி

ஹரியாச்சார் என்பவர், கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்து வந்தார். அவர் கனவில் தோன்றிய நரசிம்மர், தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கிடப்பதாகவும், தன் மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார், கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி நரசிம்மர் கூறியிருந்தார். எனவே இருவரும் சேர்ந்து நரசிம்மர் உருவத்தை எடுத்துக் கொண்டு, திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.

திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது, இந்த ஆலயம்.

நாமக்கல்

தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மகாலட்சுமிக்கு உண்டானது. இதையடுத்து அவர் தவம் இருந்து நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்ட தலம் இதுவாகும். நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து திருமாலின் அனுக்கிரகம் பெற்ற சாளக்கிராம கல்லை எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார். சாளக்கிராம கல்லை கீழே வைக்கக்கூடாது என்று யோசித்த ஆஞ்சநேயர், அங்கு தவம் செய்து கொண்டிருந்த திருமகளிடம் அந்த கல்லைக் கொடுத்து விட்டு நீராடச் சென்றார். ஆஞ்சநேயர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராததால், சாளக்கிராமக் கல்லை கீழே வைத்தாள் திருமகள். அந்த கல்லே, மிகப்பெரிய மலையாக உருவானதாகவும், மலை மீது நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும், ஆஞ்சநேயருக்கும் காட்சி அளித்ததாகவும் தல வரலாறு சொல்கிறது. சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன், நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

பூவரசங்குப்பம்

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். ‘தட்சிண அகோபிலம்’ என்ற புராணப்பெயரைக் கொண்டது.

தூணில் இருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில் பல்லவ மன்னர்கள் இங்கு ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். மூலவராக லட்சுமிநரசிம்மர், உற்சவராக பிரகலாதவரதன் அருள்பாலிக்கிறார்கள். தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி என்பதாகும். பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கோவிலில் ஆணுக்குப் பெண் சமம் என்பதை உணர்த்தும் விதமாக, தாயாரின் திருஉருவமும் நரசிம்மரின் உருவத்திற்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் அஷ்ட நரசிம்ம தலங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது, சின்னக்கள்ளிப்பட்டு. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் பூவரசங்குப்பத்தை அடையலாம். அதே போல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள சிறுவந்தாடு சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றாலும், இந்த ஆலயத்தை தரிசிக்க முடியும்.

அந்திலி

மகாவிஷ்ணுவின் வாகனமாக இருப்பவர், கருடன். இவர் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட கருடனுக்கு, மகாவிஷ்ணு தன்னுடைய நரசிம்மர் அவதாரத்தை காட்டிய தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில், தனது வாகனமான கருடனைக் கூட அழைக்காமல் சென்றுவிட்டார், இறைவன். இதனால் வருத்தம் அடைந்த கருடன், இறைவனைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார். இறுதியாக இந்த தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். இதையடுத்து கருடனுக்கு, இறைவன் நரசிம்மராக காட்சி அளித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூர் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில்தான் அந்திலி திருத்தலம் அமைந்துள்ளது.

சிங்கப்பெருமாள் கோவில்

ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இங்குள்ள நரசிம்ம மூர்த்தி, ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘பாடலம்’ என்றால் ‘சிவப்பு’, ‘அத்ரி’ என்றால் ‘மலை’ என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இங்குள்ள நரசிம்மருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை தொங்கவிட்டபடியும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் அருள்பாலிக்கிறார். இந்த நரசிம்ம மூர்த்தியின் உருவம் மிகப்பெரியதாகும்.

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

சோளிங்கர்

சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர் யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் -யோக நரசிம்மர், தாயார்- அமிர்தவல்லி. உற்சவர் பக்தவச்சலம் - சுதாவல்லி. இங்குள்ள நரசிம்மரை வழிபட்டுதான், விஸ்வாமித்திரர் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். நரசிம்மர் வீற்றிருக்கும் பெரிய மலையின் பெயர் ‘கடிகாசலம்.’ இது 1305 படிக்கட்டுகளுடன், 500 அடி உயரம் கொண்டது. யோகநரசிம்மரின் உற்சவ மூர்த்திக்கு, மலையில் இருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

பரிக்கல்

இங்குள்ள கோவிலிலும், பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்ம பெருமானே அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் மீது அதிக பக்தி கொண்டிருந்த விஜயராஜன் என்ற மன்னனால், இங்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் தன்னுடைய குருவான வாமதேவ மகரிஷி உதவியுடன், மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த விஜயராஜன் ஏற்பாடு செய்தான். யாகத்தில் கலந்து கொள்ள பல தேசத்து அரசர்களுக்கும் அழைப்புவிடுத்தான். வேள்வி நடைபெறும் சமயத்தில், பரிகாலன் என்னும் அசுரன் அங்கு வந்தான். இதையறிந்த வாமதேவ மகரிஷி, மன்னனை அருகிலுள்ள புதரில் மறைந்திருக்கச் செய்தார். ஆனால் மன்னனை கண்டுபிடித்துவிட்ட அசுரன், கோடரியால் மன்னனை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்ம’ராக தோன்றி அசுரனை அழித்து, மன்னனுக்கு காட்சி கொடுத்தார் என்கிறது ஆலய தல வரலாறு.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, உளுந்தூர்பேட்டை. இங்கிருந்து வடக்கு நோக்கி சென்றால், இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

சிங்கிரிக்குடி

முனிவர்களின் வேண்டுகோள்படியும், பிரகலாதனுக்காகவும், 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக, நரசிம்ம பெருமாள் காட்சியளித்த தலம் இது. இந்த ஆலயத்தின் திருப்பணிகளை, ராஜராஜ சோழனும், விஜயநகர மன்னர்களும் செய்திருக்கிறார்கள். நரசிம்ம பெருமாள், இரண்யகசிபுவை தன் மடி மீது படுக்க வைத்து வதம் செய்தது மேற்கு திசை நோக்கி என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்யகசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் மற்றும் பெருமாளை தரிசிக்க விரும்பிய மூன்று அசுரர்கள் உள்ளனர். கருவறையின் உள்ளே மூலவரோடு, வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோக நரசிம்மர், பால நரசிம்மர் காட்சி தருகின்றனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது இங்குதான்.

கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில், தவளகுப்பம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து அபிஷேகபாக்கம் செல்லும் பாதையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...