இந்தியாவின் பிரதமரைத் தீர்மானிக்கும் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார் எனக் கோவையில் நடந்த கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசினார்.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத் திமுகவின் செயற்குழுக் கூட்டம், காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் அரங்கில் இன்று (16-ம் தேதி) நடந்தது. இக்கூட்டத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., கோவை மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி முதலில் பேசினார்.
அதைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசும்போது, ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளார். முதல்வர் ஸ்டாலின் ஆளுமையைப் பார்த்து பிரமித்துப் போனேன். படிப்படியாக உழைத்து, கட்சியில் பல்வேறு பதவிகளைப் பெற்று தற்போது திமுகவின் தலைவராக உள்ளார். சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழகம், கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதச்சார்பற்ற அரசுதான் உள்ளது.
எனவே, மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இருந்தால்தான், தமிழகத்துக்குத் தேவையான ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற முடியும். மத்திய அரசில் திமுகவினர் அங்கம் வகித்தபோது, பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டன. அதிமுகவினர் கொங்கு மண்டலத்தில் இனி தங்களால் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்தை, உள்ளாட்சித் தேர்தலில் பெறும் வெற்றியின் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். அதற்காகத்தான் கோவை மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பாச்சா, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பலிக்காது’’ என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்ற ஆர்.கிருஷ்ணன், சி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.சேனாதிபதி, சண்முகசுந்தரம் எம்.பி., மாநில நிர்வாகிகள் மு.கண்ணப்பன், மகேந்திரன் உள்ளிட்டோரும், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment