நாம் எந்த காரியம் செய்யக் கிளம்பினாலும் சகுனம் பார்ப்பது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு ஒரு காரியத்திற்காக செல்லும்போது செய்யலாமா, வேண்டாமா என்பதை சகுனம் மூலமாகவே தெரிந்து கொண்டு விடலாம்.
ஒரு சிலர் புது மனையில் வாஸ்து முகூர்த்தம் செய்வதற்காகவோ, கட்டிடப்பணி தொடங்கவோ போன்ற பல்வேறு பணிகளை செய்வதற்கு செல்லும்போது சகுனங்கள் பார்ப்பது நல்லது என நினைப்பார்.
ஆனால், ஒரு சிலர் அவ்வாறு சகுனங்கள் எதுவும் பார்ப்பதில்லை. சகுனங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா என்பதை விட இன்றைக்கு சகுனங்கள் பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமா என்று கேள்வி எழுப்புவதுண்டு. இத்தகைய கேள்விகள் அனைத்திற்கும் விடை காண்பது அவரவர் மன நிலை தான் காரணமாகும்.
பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் எதையும், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் அனுபவபூர்வமாக ஆராய்ந்த பின்னரே முடிவு செய்துள்ளனர். அவ்வாறு அவர்கள் கூறிய படி எந்த காரியத்திற்கும் செல்லும்போது பார்க்க கூடிய நல்ல சகுனங்கள் மற்றும் தீய சகுனங்கள் குறித்து பார்க்கலாம்.
○ நல்ல சகுனங்கள்...
இலட்சுமிகரமான முகத்துடன் நல்ல அழகான, கருத்த கூந்தலும் கொண்ட கன்னிபெண் அல்லது சுமங்கலிப்பெண் எதிரே வந்தால் அது நல்ல சகுனமாகும்.
பசுக்கள் அல்லது பசுவின் கூட்டங்கள் எதிரில் வந்தால் அது நல்ல சகுனமாகும்.
எதிரே சவ ஊர்வலம் வந்தாலும் மிகுந்த நன்மையாகும்.
தலைக்கு மேல் கருடன் வலப்பக்கத்திலிருந்து இடது பக்கமாக வட்டமிட்டாலும் நல்ல சகுனங்களே.
பச்சை கிளிகள் பறந்து செல்வதைப்பார்ப்பதும், வெள்ளை புறாவை பார்ப்பதும் நல்லது.
வீடு கட்டும் காலிமனைக்கு செல்லும் போது, பல்லி வலப்புறத்திலிருந்து சொன்னால் அங்கு வீடுகட்டி வாழ்பவர்களின் வாழ்க்கை, சிறப்பானதாக இருக்கும்.
பல்லியானது இடது பக்கதிலிருந்து சொன்னால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் மிகுந்த செல்வத்துடன் பிறரை அதிகாரம் செய்யும் அந்தஸ்துடனும் வாழ்வார்கள்.
மனையை அடையும்போது அங்கு வெள்ளைப் பசு அல்லது வெண்ணிறக் காளை மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பது மற்றும் மனையில் வெள்ளைப்புறா மற்றும் வெண்ணிறக் கோழியைப் பார்க்க நேர்ந்தால் மிகவும் நல்ல சகுனமாகும்.
நிறைகுடம் தாங்கிய சுமங்கலி, சலவைத் தொழிலாளி, சிவந்த நிற ஆடைகளை அணிந்த மூதாட்டி ஆகியோரும், யானை, குதிரை போன்றவை எதிரே வந்தாலும் நல்ல சகுனமாகும்.
பால், நெய், நீர், இறைச்சி, தயிர்குடம் போன்றவை எதிர்பட்டாலும் மிகவும் நல்ல சகுனமாகும்.
நாதஸ்வர இசை, கோயில் மணி ஓசை, கல்யாண கோலம், பசு, கன்று சேர்ந்து வருதல், நாய் சந்தோஷமாக விளையாடுதல் போன்றவை நல்ல சகுனமாகும்.
பூஜை பொருட்கள் கொண்டு செல்வது, தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வரும் காட்சி, பூ மாலை கொண்டு வரும் காட்சி நல்ல சகுனமாகும்.
தம்பதிகள் ஜோடியாக எதிரே வருதல், திருமணத்திற்கு பெண்பார்க்கச் செல்லுதல், நிறைகுட தண்ணீர் கொண்டு வருகிற கன்னிபெண், பிரசவம் முடிந்து குழந்தையை கொண்டு வருவது போன்றவை நல்ல சகுனமாகும்.
குழந்தை பிறந்த செய்தி வருதல், அழுக்கு நீக்கியத் துணியை கொண்டு வருதல், திருமணம், பூணூல் கல்யாணம் ஆகியவற்றைக் காண்பது நல்ல சகுனமாகும்.
● தீய சகுனங்கள்....
எதிரே எருமை மாடுகள் வந்தாலும், வியாதியஸ்தர்கள் வந்தாலும் அவையும் தீய சகுனங்களே. காகங்கள் இடமிருந்து வலமாக செல்வதும் தவறு ஆகும்.
வீடு கட்டப்படும் மனையை அடையும்போது எதிரே பூமியை தோண்டும் பொருள்களுடன் நபர்கள் எதிராக வந்தாலோ அல்லது மனையின் அருகில் நின்றாலோ தவறான சகுனமாகும்.
மனையில் நுழையும் போது எறும்புகள் வரிசையில்லாமல் செல்வதைப் பார்க்க நேரிட்டால் அது தீய சகுனமாகும். அன்றைய தினம் கட்டட வேலையை ஆரம்பிக்க கூடாது.
கட்டிடம் கட்டும் காலி மனையிடத்திற்கு சென்றுகொண்டிருக்கும் போது அல்லது மனைக்குள் நுழையும்போது மது அருந்திய மனிதன், பிச்சை எடுக்கும் மனிதன், உடலில் கூன் போன்ற குறைகள் உள்ள மனிதன், கால் நோய் காரணமாக பாதிப்படைந்த மனிதன், கண் பாதிக்கப்பட்ட பார்வையில்லாத மனிதன், சிதைந்த முகத்தை கொண்டவன், சுடுகாடு காக்கும் வெட்டியான், மீன்பிடிக்கும் மனிதன், எண்ணெய் வியாபாரம் செய்பவர் ஆகியோர்களை காண்பது தீய சகுனமாகும்.
அழுக்கான ஆடைகளை அணிந்தவர், செம்பட்டைமுடி கொண்டவர், ஒற்றைக்கண் உடையவர், கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் பெண், கையில் தடி வைத்திருப்பவர் ஆகியோர்களைப் பார்ப்பதும் தீய சகுனங்களாகவே கருதப்படும்.
No comments:
Post a Comment