பல விடை தெரியாத கேள்விகளுக்கு
ஸ்ரீ மான் வேளுக்குடி சுவாமிகள்
மிகவும் தெளிவாக அழுத்தமாக
பதில் அளித்துள்ளார்.
அவசியம் அனைவரும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இதோ ஆன்மீக உபன்யாசகர் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் அவர்களின் பேட்டி.
கேள்வி:சி.ஏ,படித்த நீங்கள் முழு நேர இறை ஊழியர் ஆனது எப்படி?
பதில்:என்னுடைய அப்பா ஒரு உபன்யாசகர்;படித்தது சி.ஏ.வாக இருந்தாலும், நான் பிறந்தது முதல் பார்த்து வளர்ந்தது என் அப்பாவைத் தான்;எனவே,இறைபணி,உபன்யாசம் என்பதெல்லாம் எனக்குப் புதிதில்லை;
என்னை சி ஏ படிக்க வைத்தாலும்,பரம்பரையாக உபன்யாசம் மற்றும் இறைபணியையும் எங்கள் குடும்பம் செய்து வருவது போல,நானும் செய்ய வேண்டும் என்று தான் என்னுடைய அப்பா விரும்பினார்;இதைப் புரிந்துகொண்டு தான் நானும் சி.ஏ,படித்தேன்;
1991 ஆம் ஆண்டு என்னுடைய தந்தையின் மறைவிற்குப் பிறகு நான் முழு நேர உபன்யாசகராக ஆனேன்.என்னுடைய அப்பா உபன்யாசம் செய்த காலத்திலும்,ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை நானும் அவருடன் சேர்ந்து உபன்யாசம் செய்திருக்கிறேன்;
கேள்வி:உத்திராயண காலத்தில் இறப்பவர்கள் மோட்சம் அடைந்து பெருமாள் திருவடிகளுக்குச் சென்றுவிடுவார்கள்;இவர்களைத் திதி அன்று கூப்பிட்டால் எப்படி வருவார்கள்?
பதில்:உங்கள் கேள்வியின் பொருள், உத்திராயண காலத்தில் இறந்தால் மட்டுமே மோட்சம் கிடைக்கும் என்பது போல் இருக்கின்றது;ஆனால்,உண்மையில் யாராக இருந்தாலும் அவரவர் பாவ புண்ணியங்களின் படி மட்டுமே மோட்சத்தை அடைய முடியும்;
இதில் ஆண்,பெண்,பிராமணர்கள்-மற்றவர்கள்,வயதானவர்கள்-குழந்தைகள்,பணம் படைத்தவர்கள்-இல்லாதவர்கள் என்ற எந்த வேறுபாடும் கிடையாது;சாஸ்திரங்களின் படி,இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து,மோட்சம் வேண்டும் என்று கேட்டால்,அவர்கள் எப்படி இருக்கின்றார்களோ,அப்படியே மோட்சம் அடைவார்கள்;
முக்தி அடைந்து சிவன் அல்லது பெருமாள் திருவடிகளைச் சேர்ந்தவர்கள்,நாம் கொடுக்கும் திதியின் பொழுது வரமாட்டார்கள்;உண்மையில் முக்தி அடைந்தவர்கள்,இறந்த நொடிப்பொழுதில் இறைவனடி சேர்ந்து விடுவார்கள்:
கேள்வி:அப்படியென்றால்,இறந்தவுடன் செய்யும் 13 நாள் காரியங்களை யாருக்காகச் செய்கின்றோம்?
பதில்:இறந்தவருடைய கர்மவினையினால் அவர் மோட்சம் அடைய முடியாத நிலை இருந்தால்,அவரை பித்ரு லோகத்தில் சேர்ப்பதற்கான காரியங்களைத் தான் இந்த 13 நாட்களும் செய்வோம்;அப்படியென்றால்,ஒருவர் கர்மவினையின்படி,மோட்சம் அடைந்துவிட்டால்,நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வீண் தானா என்ற சந்தேகம் ஏற்படலாம்;நாம் செய்யும் காரியங்கள் எதுவுமே வீணாவதில்லை;
மோட்சம் அடைவதற்கான பலவழிகளை சாஸ்திரங்கள் கூறுகின்றன;அது போன்ற ஒரு வழிதான் இறந்தவர்களுக்கான காரியங்களைச் செய்வதும்.இது உங்கள் புண்ணியக் கணக்கில் சேரும்;இது போன்ற பித்ரு காரியங்கள் நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்வதற்கான முதல்படி;
நம்முடைய பித்ருக்கள் அனைவருமே முக்தி அடைந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது;இங்கு,பித்ருக்கள் என்று நான் குறிப்பிடுவது,நம்முடைய முற்பிறவி தந்தையாகவோ,உடன் பிறந்தவர்களாகவோ இருக்கலாம்;இவர்கள் பித்ரு லோகத்தில் மோட்சத்திற்காக காத்திருப்பார்கள்:
நாமும் திதி செய்து,பித்ரு லோகத்தில் இருக்கும் மோட்சம் அடையாத நமது மூதாதையர்களைத் தான் கூப்பிடுவோம்;திதி அன்று அவர்கள் தான் வருவார்கள்;
கேள்வி:பெருமாளையும் தெரியாமல்,சிவனையும் தெரியாமல் இந்த உலகத்தில் பிற மத மக்கள் நிறைய இருக்கின்றார்கள்;அவர்களில் நிறைய நல்லவர்களும் இருப்பார்கள்;அவர்கள் மோட்சம் போவார்களா,இல்லையா?
பதில்:சிவனையும் தெரியாது;பெருமாளையும் தெரியாது என்றால் கைலாசமோ,வைகுண்டமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை;ஒரு இடத்தைப் பற்றி தெரிந்தால் மட்டுமே அங்கு போக வேண்டும் என்று விரும்புவோம்;அந்த இடத்தை பற்றித் தெரியாதவர்கள்,அங்கு போக வேண்டும் என்று எப்படி கேட்பார்கள்?
எனவே,வைகுண்டம்,கைலாசம் பற்றி தெரியாதவர்கள் மோட்சம் போவார்களா என்ற கேள்விக்கே இடம் இல்லை;
கேள்வி:இறந்தவர்களுக்கு காரியங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை என்று கூறுகின்றீர்கள்;இப்படி கர்மா செய்வதற்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரையிலும் கேட்கிறார்கள்;இவ்வளவு பணம் செலவழித்து கர்மா செய்ய முடியாதவர்களுக்கு என்ன வழி?
பதில்:அதிக பணம் செலவழித்து கர்மா செய்ய முடியாதவர்களுக்கு உதவும் வகையில்,சங்கர மடத்தில் குறைந்த செலவில் செய்வதற்கு அனுமதிக்கிறார்கள்:வேறு சில மடங்களிலும் உண்டு;ஆனால்,இப்போது இருக்கும் அளவைப் போல் 10 மடங்கு அளவிற்கு இந்த உதவிகள் நடந்தால் தான் எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்;
முன்பு சிறிய பூஜைகளை நாமே செய்து கொள்ளும் அளவிற்கு,தேவையான சாஸ்திரங்களை தெரிந்து வைத்திருந்தோம்;ஆனால்,இன்றைக்கு எந்த ஒரு பூஜையாக இருந்தாலும்,வெளியில் இருந்து சாஸ்திரிகள் வந்து செய்து கொடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது;எனவே,அதிக பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது;இந்தத் துறைக்கு அதிக நபர்கள் வந்தால் கட்டணம் குறையலாம்;
இதுதவிர,வீட்டில் சிறிய அளவில் செய்ய வேண்டிய பூஜைகளை நாமே தெரிந்து கொள்ள வேண்டும்;பூணூல் போட்டுக் கொள்வது,லட்சுமி பூஜை,வரலட்சுமி விரதம்,விளக்கு பூஜை போன்ற சிறு,சிறு பூஜைகளை நாமே செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்;
கேள்வி:இன்றைய சமுதாயச் சூழலில் கணவன் இருக்கிறவர்கள்,கணவனை இழந்தவர்கள் என்ற வேறுபாடு தெரியாத,ஒரு பொதுவான தோற்றத்தில் தான் பெண்கள் இருக்கிறார்கள்;
இதனால்,கோவில்களுக்குச் செல்லும் போது,அங்கு வித்தியாசம் பார்க்காமல்,தாம்பூலம் முதலான மங்கலப் பொருட்களைக் கொடுக்கிறார்கள்;கணவரை இழந்த பெண்கள் அவற்றை வாங்கிக் கொண்டால்,அதற்கான பாவம் ஏதும் அவர்களைச் சேருமா?
பதில்:கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் பூ,மஞ்சள் போன்ற பொருட்களை கண்டிப்பாக மறுக்க வேண்டிய அவசியமில்லை;இது போன்ற பொருட்கள் கோவில்களில் கொடுக்கப்படும் போது,அவை மங்களகரமான பொருட்கள் என்பதைத் தாண்டி,பவித்ரமான (சுத்தமான) பொருட்கள் என்றாகிவிடும்;
கோவிலில் கொடுக்கப்படும் பவித்ரமான பொருட்களை கல்யாணம் ஆனவர்கள்,ஆகாதவர்கள்,கணவன் இருப்பவர்கள்,இல்லாதவர்கள் என்று எல்லோருமே வாங்கிக் கொள்ளலாம்; கணவன் இல்லாதவர்கள் கோவிலில் கொடுக்கப்படும் திருமாங்கல்யத்தைக் கூட வாங்கிக் கொள்ளலாம்;தவறில்லை;பவித்ரமான அந்த திருமாங்கல்யத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யாருக்காவது கொடுக்கலாம்;
கணவன் இல்லாதவர் என்று அடையாளம் தெரியாததினால் மங்கலப் பொருட்களைக் கொடுப்பதாகக் கூறுகின்றீர்கள்;கணவன் இல்லாதவர் என்று அடையாளம் தெரிந்தாலுமே கோவீலில் அவர்களுக்கு கொடுப்பதில் தவறில்லை;
சனாதன தர்மத்தையும்,சாஸ்திரத்தையும் நன்கு அறிந்தவர்கள் எவருமே கணவனை இழந்த பெண்களை ஒதுக்கி வைக்கமாட்டார்கள்;நம்முடைய தர்ம சாஸ்திரத்தின் படி ஆண்களில் சந்நியாசம் பெற்றவர்களுக்கு இணையானவர்கள் கணவனை இழந்த பெண்கள் எப்படி ஒரு சந்நியாசியைப் பார்த்தவுடன் நமஸ்காரம் செய்து மரியாதையாக அவரை நடத்துகிறோமோ,அதை போல கணவனை இழந்த பெண்களையும் பார்க்க வேண்டும் என்று சனாதன தர்மம் கூறுகிறது;
கேள்வி:ஆனால்,கணவனை இழந்த பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டில் இருந்ததே?
பதில்:சனாதன தர்மத்தில் இருக்கும் கோட்பாடுகள்,தனி மனித விருப்பத்திற்கு எதிரானவை என்ற தவறான புரிதல் இருக்கின்றது;கணவன் இறந்தவுடன் கட்டாயம் உடன்கட்டை ஏறும் வழக்கம் சனாதன தர்மத்தில் இல்லை;அது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது;
சனாதன தர்மத்தில்,கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுவது கட்டாயம் என்று இருந்திருந்தால்,ராமாயணத்தில் தசரத சக்கரவர்த்தி இறந்த பிறகு அவரது மூன்று மனைவிகளும் அவருடன் உடன் கட்டை ஏறி இருப்பார்கள்;கணவன் இறந்தவுடன் அவருடன் சேர்ந்து உடன் கட்டை ஏறினால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்பிய பெண்கள் உடன் கட்டை ஏறினார்கள்;அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பமாகும்;
நம்முடைய எல்லா சாஸ்திர வழிமுறைகளும் தனி மனித விருப்பத்தைப் பொறுத்தே அமைந்திருக்கும்;
கேள்வி:பல்வேறு இடங்களில் உபன்யாசம் செய்யப் போகின்றீர்கள்;பல்வேறு மனிதர்களை சந்திக்கிறீர்கள்.உங்களையே மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்று எதைக் கூறுவீர்கள்?
பதில்:சாமான்யனின் உறுதியான பக்தி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒன்று;இறைவனிடம் சரணாகதி அடைந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது சாஸ்திர சம்பிரதாயங்களைப் படித்தவர்களுக்குத் தெரிய வாய்ப்பு உண்டு;
ஆனால்,இதைப் பற்றி எல்லாம் தெரியாமல் இன்றைக்கு பழனி,ஸ்ரீரங்கம்,திருச்செந்தூர்,திருப்பதி உள்பட பல கோவில்களில்,பெரிய வரிசையில் இறைவனைத் தரிசிப்பதற்காகப் பாமர மக்கள் நிற்கிறார்கள்;சாதாரண மனிதன் இரண்டு அல்லது மூன்று விநாடிகள் திருப்பதி பெருமாளைத் தரிசிப்பதற்கு,எட்டு மணி நேரம் வரிசையில் நிற்கிறான்;நேரம்,பணம்,போக்குவரத்துச்சிக்கல் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி,இப்படி கோவிலுக்கு விஜயம் செய்கிறான் அந்த சாமானியன்;
இப்படி ஒவ்வொரு ஜீவாத்மாவுடனும் அந்த பரமாத்மா வைத்துக் கொண்டு இருக்கும் தொடர்புதன்,இந்த உலகத்தில் மிகவும் ஆச்சரியமானது என்று நினைக்கின்றேன்;
கேள்வி:ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வைணவர்கள் மட்டுமே உயர்வாக நடத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது;இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வைணவர்கள் கைங்கர்யம் செய்வதும்,சிவன் கோவிலில் சைவர்கள் கைங்கர்யம் செய்வதும் வழக்கத்தில் இருக்கின்றது;ஸ்ரீரங்கம் கோவிலைப் பொறுத்தவரை ராமானுஜர் பத்து கொத்து பரிவாரம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்;
இதில் ஓடக்காரர்,தையல்காரர்,செருப்பு தைப்பவர்,பானை செய்பவர்,தெப்பம் கட்டுபவர்,வாத்தியம் வாசிப்பவர்,மருத்துவர்,பாசுரங்கள் பாடுபவர்,நெருப்பு பந்தம் பிடிப்பவர்,அர்ச்சகர் என்று பல்வேறு தரப்பினரும் இருக்கிறார்கள்;இப்போதும் இந்தக் கோவிலில் மேலே சொன்ன அனைவருக்கும் முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது;
இன்றைக்கும் பெருமாளுக்காக செருப்பு தைத்து எடுத்து வந்து சமர்ப்பித்துவிட்டு,ஆண்டு தோறும் மரியாதை பெற்றுக் கொள்கிறார்கள்;அவரவர் எந்த வர்க்கத்தில் பிறந்து தொண்டு செய்கிறார்களோ,அதில் இருந்தே மோட்சம் பெற முடியும்; அர்ச்சகராக பிறந்தால் மட்டுமே மோட்சம் என்பதெல்லாம் இல்லை; துப்புரவுப் பணியாளராக இருந்து மோட்சம் பெறுபவர்களும் உண்டு;
அர்ச்சகர்களாக இருந்தும் மோட்சம் பெறாமல் போனவர்களும் உண்டு;இறைவனுக்கு முன்பு அனைவரும் சமமே!
கேள்வி: அப்படியானால்,மோட்சம் கிடைப்பதும் கிடைக்காததும் பகவான் கையில் மட்டுமே உள்ளது என்பது சரியா?
பதில்:மிகச் சரி;நாம் மோட்சம் பெறுவது அந்தப் பரமாத்மாவின் கையில் மட்டுமே உள்ளது;கிருஷ்ண லீலையில் கோகுலத்தில் மண்பாண்டம் மோட்சம் பெற்ற நிகழ்வு உண்டு;
ஒரு முறை கண்ணனை கோபியர் ஒருவர் வெண்ணையைத் திருடித் தின்றதால் துரத்திக் கொண்டு வந்தார்;அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ததிபாண்டன் என்பவருடைய தயிர் மண்பாண்டத்தினுள் கண்ணன் ஒளிந்து கொண்டார்; கண்ணனைத் தேடி வந்த கோபிகையிடம் ததிபாண்டன், “கண்ணன் இங்கு இல்லை;கண்ணன் எங்குமே இல்லை” என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டார்;கோபிகை சென்ற பிறகு கண்ணன் தன்னை விடுவிக்கச் சொன்னபோது,ததி பாண்டன் தனக்கும்,ஒளிந்து கொள்ள இடம் கொடுத்த மண்பாண்டத்துக்கும் கண்ணன் மோட்சம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்;கண்ணனும் மோட்சம் அருளினார்;
“தூணிலும் இருப்பான்;துரும்பிலும் இருப்பான்” என்று சொன்ன பிரகலாதனுக்கும் மோட்சம்! “கண்ணன் இங்கு இல்லை;கண்ணன் எங்குமே இல்லை” என்று சொன்ன ததிபாண்டனுக்கும் மோட்சம்! எனவே,நம்முடைய பிறவிக்கு மோட்சம் என்பதை கண்ணன் ஒருவனால் மட்டுமே அளிக்க முடியும்;
கேள்வி: சனாதன தர்மம் பிறப்பால் மனிதனைப் பிரித்து வைத்திருப்பதாகத் திராவிட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன;உண்மையில் சனாதன தர்மம் பிறப்பால் மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறதா?
பதில்:நம்முடைய கைகளில் ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருந்தால்,நம்மால் எந்த வேலையையும் சரிவரச் செய்ய முடியாது;அதே போல,மனிதப் பிறப்பில் வேறுபாடு இல்லாமல் இருந்தால், உலகம் இயங்க முடியாது;
200 ஆண்டுகளுக்கு முன்பு தேவைக்காக,மனிதப் பிறப்பில் இருந்த வேறுபாடுகளை உயர்வு தாழ்வு என்று மாற்றி,இவர்களெல்லாம் கோவிலுக்குள் வரக் கூடாது என்று ஒரு சிலர் தவறாக நடந்து கொண்டார்கள்;மனிதப் பிறப்பில் வேறுபாடு இருக்கிறதே தவிர,உயர்வு தாழ்வு கிடையாது;சனாதன தர்மத்தின் படி,யாரும் கோவிலுக்கு போகலாம்;கடவுளை தரிசிக்கலாம்;
எங்கு யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது நியதிக்கு உட்பட்டது;சனாதன தர்மத்தில் சிலரை உயர்த்தியும்,சிலரை தாழ்த்தியும் நடத்துகிறார்கள் என்று சொல்கிறோம்;
அரசாங்கம் நடத்தும் ரயில்வே துறையில் தட்கல்,ப்ரீமியம் தட்கல் என்று இருப்பது எதற்காக?பணம் இருப்பவனுக்கு மட்டுமே அவசரவேலை வருமா? அரசாங்கமே பணம் படைத்தவன்,பணம் இல்லாதவன் என்று ஏன் பிரிவினை ஏற்படுத்துகிறது என்று யாரும் கேள்வி கேட்பதில்லை;தங்களுடைய அரசியல் லாபத்திற்காக சனாதன தர்மத்தைப் பற்றி குறை கூறுகிறார்கள்:
ஒரு வேலைக்கு இந்த தகுதி இருந்தால் தான் சேர்த்துக் கொள்வேன் என்று கூறுவதை discrimination என்று எடுத்துக் கொள்ளக் கூடாது;ஏதாவது ஒரு filtration என்பது எல்லா இடத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது;
உண்மையில் வேதபாடசாலையில் வேதத்தைக் கற்றுக் கொள்ளத் தேர்வை எதிர்கொள்ளத் தான் வேண்டும்;தேர்வு அன்று அந்த மாணவன் சரியாக வேதத்தைச் சொல்லவில்லை என்று எந்த மாணவனையும் வேதபாடசாலை fail செய்வதில்லை;மறுநாள் வந்து வேதத்தைச் சரியாகச் சொல்லி அந்த மாணவனால் தேர்ச்சி பெற முடியும்;
இது போன்ற நடைமுறை,சனாதன தர்மத்தைத் தவிர,வேறு தேர்வு முறைகளில் இருக்கிறதா? கூறுங்கள்;
எந்தத் தேர்வாக இருந்தாலும் 3 மணி நேரத்தில் சரியாகச் செய்யவில்லை என்றால்,அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது;அடுத்த ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ அந்த மாணவன் காத்திருப்பதைத் தவிர,வேறு வழியில்லை;
இந்த விதத்தில்,வேத பாடசாலையில் மாணவர்களைத் தேர்வு செய்யும் முறை சிறந்தது இல்லையா? இது போல இந்த தர்மத்தில் உள்ள எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்;
ஒரு சிலவற்றை ஒரு சிலர் சில காலம் தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட எதிர்வினையை நாம் இன்று அனுபவித்து வருகிறோம்.
ஓம் நமோ நாராயணா.
No comments:
Post a Comment