கவர்னர் சந்தேகம்; அரசாணை தாமதம்
* சித்திரை முதல் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. தி.மு.க., ஆட்சியில், சித்திரை முதல் தேதிக்கு பதிலாக, தை மாதம் முதல் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு கண்டு கொள்ளாமல், தை முதல் தேதியை, தமிழ் புத்தாண்டாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.
கடந்த, 2011ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு, அந்த அரசாணையை ரத்து செய்தது. தமிழ் புத்தாண்டு, சித்திரை முதல் தேதியே கொண்டாடப்படும் என்று அறிவித்து, அரசாணையும் வெளியிட்டது. அதன்படி, பத்து ஆண்டுகளாக, தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகிறது.தற்போது ஆட்சிக்கு வந்துள்ள, தி.மு.க., தங்களின் பழைய ஆணையை நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்தது.
எனவே, கருணாநிதி முதல்வராக இருந்த போது உத்தரவிட்டது போல, தை முதல் தேதியை, தமிழ் புத்தாண்டாக அறிவிக்க முடிவு செய்து, அரசாணை தயார் செய்தனர். அதற்கு முன்னோட்டமாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி, ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள, பொங்கல் பரிசு தொகுப்பு பை மீது, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்டு, அதை வெளியிட்டனர். இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் அதை பொருட்படுத்தாமல், தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க, அரசாணை தயார் செய்து கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், கவர்னர் தரப்பில் இன்னமும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அ.தி.மு.க., ஆட்சியில் நீக்கப்பட்ட போது, அதற்கான காரணத்தை விளக்கி உள்ளனர். இதை அறிந்த கவர்னர், அரசாணை தொடர்பாக சில விளக்கங்களை கேட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், கவர்னர் திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க முடியுமா என்ற சந்தேகம், ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
நிறம் மாறும் அதிகாரிகள்!
* எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அந்த கட்சி தலைமைக்கு துதிபாடுபவர்களாக செய்தித் துறை அதிகாரிகள் மாறி விடுகின்றனர். முன்னர் இலைமறைவு காயாக இருந்தவர்கள், தற்போது வெளிப்படையாக செயல்படுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், அக்கட்சி தலைமை அலுவலகத்தில், முதல்வர் பங்கேற்கும் கூட்டம் எது நடந்தாலும், செய்தித் துறை அதிகாரிகள் ஆஜராகி விடுவர்.
கட்சி கூட்டத்தில், முதல்வர் பங்கேற்ற புகைப்படங்களை, பத்திரிகைகளுக்கு அனுப்புவர். தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், தலைமை செயலகத்தில் இருந்த, அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், தலைமையிடத்துக்கு வந்தனர். இவர்களும் ஏற்கனவே, அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் செய்ததையே தொடர்கின்றனர். அவர்களை மிஞ்சும் வகையில், முதல்வர் பங்கேற்கும் கட்சி நிகழ்ச்சிகளை, அரசு இ - மெயில் முகவரியில் அனுப்புகின்றனர்.
கடந்த வாரம், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. இதில், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசிய உரைகளின் தொகுப்பு, நுாலாக வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தை, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக இ - மெயிலில் இருந்து அனைத்து பத்திரிகைளுக்கும் அனுப்பினர். இது நடுநிலையோடு செயல்படும் அதிகாரிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் கண்டிப்பு; தோட்டம் புதுப்பிப்பு!
* சென்னை ராஜ்பவனில் உள்ள தோட்டம் மற்றும் பூங்கா, தோட்டக்கலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இங்கு விழா நடக்கும் பகுதியில் புல் தரைகள் முறையான பராமரிப்பின்றி இருந்தன. தோட்டங்களில் பூச்செடிகள் மழையால் சேதம் அடைந்திருந்தன. அக்டோபர் மாதம் ஊட்டிக்கு சென்றிருந்த கவர்னர், அங்கு ராஜ்பவன் மற்றும் தோட்டக்கலை பூங்காக்களை பார்வையிட்டார். அதேபோன்று, சென்னை ராஜ்பவனில் உள்ள புல் தரைகள் மற்றும் பூங்காவை மாற்ற விரும்பினார்.
சமீபத்தில் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகளை அழைத்து, 'சென்னை ராஜ்பவன் புல் தரை மற்றும் பூங்காக்களை ஏன் முறையாக பராமரிக்கவில்லை' என்று கேட்டுள்ளார். ஊட்டியில் உள்ள திறமையான ஊழியர்களை அழைத்து வந்து, இப்பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சென்னை ராஜ்பவனில் உள்ள புல் தரை மற்றும் தோட்டங்களை மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
No comments:
Post a Comment