லட்சுமி நாராயணர் என்ற விஷ்ணு பக்தர், அனுதினமும் கும்பகோணம் சாரங்க பாணியைத் தொழுது, பெருமாளுக்கு பணிவிடை செய்தே தன் வாழ்நாளைக் கழித்து வந்தார். உறவினர்கள் என்று சொல்லிக் கொள்ள எவரும் இல்லாத அந்த பக்தர், சாரங்கபாணியையே தன் உறவாக எண்ணி வாழ்க்கையை நடத்தி வந்தார்.
ஒருநாள் லட்சுமி நாராயணர் பரமபதம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்ய சொந்தமோ பந்தமோ இல்லாத நிலை. இறுதியில் சாட்ஷாத், ஸ்ரீசாரங்கபாணியே அச்சடங்குகளை செய்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்!
மறுநாள் காலையில் கோயிலைத் திறக்க வந்தார் அர்ச்சகர். சந்நிதியைத் திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம். கருவறையில் வீற்றிருந்த பெருமாள் ஈர வேட்டியுடனும், மாற்றியுள்ள பூணூலுடனும், தர்ப்பணப் பொருட்களுடனும் இறுதிக் கடன் சடங்குகளை, அதாவது திவசம் கொடுத்த கோலத்தில் காட்சியளித்தார்.
இதனைப் பார்த்த அர்ச்சகர் மெய்சிலிர்த்துப் போனார். இந்த நிகழ்வு நடந்தது ஒரு தீபாவளித் திருநாளில் என்கிறது ஸ்தல புராணம். தனது பக்தனுக்காக தீபாவளி நாளில் திவசம் கொடுத்தவர் ஸ்ரீசாரங்கபாணி.
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தீபாவளி அன்று பகலில் பெருமாள், தன் பக்தன் லட்சுமி நாராயணனுக்காக திவசம் கொடுக்கும் சடங்கு இன்றைக்கும் நடைபெறுகிறது. ஆனால் இந்தச் சடங்கு வைபவத்தைப் பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
தங்கள் முன்னோர்களுக்கு திவசம் கொடுக்க முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து ‘நீத்தார் கடன்’ செய்து முன்னோர்களின் ஆசியைப் பெறலாம். சகல செல்வத்தையும், நற்புத்திரப் பேற்றையும், கல்வியையும், வளமான வாழ்வையும் நமக்கு அனுதினமும் அள்ளித்தரும் கும்பகோணம் சாரங்கபாணியை வணங்கி, நாமும் வளம் பெறலாம்!
தீபாவளித் திருநாளில் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாளை வழிபட்டு, அவர் திவசம் கொடுக்கும் பகல் பொழுதில் நம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையவும், நம் சந்ததியினர் பல்லாண்டு வாழவும் வேண்டிக் கொள்வோம்! வேண்டும் வரம் தந்தருள்வார் ஸ்ரீசாரங்கன்!
நாமும் இந்த நாராயணரை வழிபடுவோம். இறுதியில் பாவத்தில் இருந்து விடுபட்டு பரமபதம் செல்வோம்.
- ஓம் நமோ நாராயணாய நமஹ...
❀❀••••••❀❀❀
#அன்பே சிவம்...!!!
ஓம் நமசிவாய...!!!
ஓம் நமசிவாய...!!!
ஓம் நமோ நாராயணா.!!!
❀❀••••••❀❀❀
❀❀❀••••••❀❀
No comments:
Post a Comment