வேலை வாங்கித் தருவதாக சொல்லி பண மோசடி செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஆனால் வழக்கு நடந்து, நீதிமன்றம் தண்டனையளித்து, 'பிடிவாரண்ட்' ஏதும் பிறப்பிக்கவில்லை. அதற்குள், 'இண்டர்போல் போலீஸ்' சர்வதேச குற்றவாளியை பிடிப்பது போல, 600க்கும் மேற்பட்ட மொபைல் போன் எண்களை கண்காணித்து தேடுவதாக, '70 எம்.எம்.,' படம் காட்டுகின்றனர்.
இதே போன்று தானே, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் நடந்தது.வாங்கியப் பணத்தை திருப்பிக் கொடுத்ததால், அவர் மீதான வழக்கு தள்ளுபடியானது; இது என்ன நியாயம்?பணத்தை திருப்பிக் கொடுத்திருப்பதன் மூலம், செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாகத் தானே அர்த்தம்!வாங்கிய லஞ்ச பணத்தை, பிரச்னையில் சிக்கியதால் திருப்பி கொடுத்தார், செந்தில் பாலாஜி. அதனால் அவருக்கு தண்டனை கிடையாதா?
இவரும் தானே, வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியுள்ளார்!'நேர்மையான ஆட்சி நடத்துகிறோம்' என பெருமை பீற்றும் முதல்வர் ஸ்டாலின், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டாமா?ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு அழைப்பதற்கு, தி.மு.க., அரசு இவ்வளவு, 'பில்டப்' எதற்கு?முதல்வர் ஸ்டாலினிடம் ஒரே ஒரு கேள்வி...குற்றம் ஒன்று தான்; அதென்ன செந்தில் பாலாஜிக்கு ஒரு நியாயம்... ராஜேந்திர பாலாஜிக்கு வேறு நியாயமா?
பிப்., 14ல் தமிழ் புத்தாண்டு!
தி.மு.க., தலைமையிலான தமிழக அரசு, மீண்டும் தை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப் போவது, பொங்கல் பரிசுக்கான மாதிரி துணிப்பையில் வெளியிட்டுள்ள வாசகங்கள் மூலம் தெரிகிறது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர, 365 நாட்கள், ஆறு மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகிறது; இதுவே, தமிழ் ஆண்டின் கால அளவு!ஜாதகப்படி சூரியன், மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது துவங்கும் ஆண்டு, மீன ராசியிலிருந்து வெளியேறும் போது முடிவடைகிறது. எனவே தான், சித்திரை மாதத்தை தமிழ் புத்தாண்டாக கொண்டாடினர், நம் முன்னோர்.எனவே அதை மாற்றுவது பற்றி யோசிப்பது தேவை இல்லாத வேலை. காலகாலமாக பின்பற்றப்படும் நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.மேலும் பெரும்பாலான மக்கள், தமிழ் புத்தாண்டு மாற்றப்படுவதை ஏற்று கொள்ளவில்லை.தமிழறிஞர்கள், தமிழர் வரலாறு தெரிந்தோர், பாரம்பரியமாக
பண்பாடு மற்றும் கலாசாரத்தை பின்பற்றுவோர், தமிழ் புத்தாண்டு மாற்றப்படுவதை ஏற்று கொள்ள மாட்டார்கள்.தமிழ் புத்தாண்டு தேதி ஏன் மாற்றப்படுகிறது என்ற காரணம், விபரம் தெரிந்தோருக்கு தெரியும். இதற்கு பின்னால் உள்ள, 'திராவிட'அரசியல் என்னவென்று தெரியும்.அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு, ஏப்., 14ம் தேதி தற்போது விடுமுறை தினமாக உள்ளது. தை மாதம் 1ம் தேதி ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்காக அரசு விடுமுறை தினமாக உள்ளது.இப்போது, தமிழ் புத்தாண்டை மாற்றினால், ஆண்டிற்கு ஒரு விடுமுறை நாள் குறையும்.இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், தமிழர்கள் வசிக்கும் மற்ற நாடுகளிலும், மாநிலங்களிலும் வசிப்போர், சித்திரை 1ம் தேதி புத்தாண்டு கொண்டாடுவதை தடுக்க முடியாது; அவர்களை வலியுறுத்தவும்
முடியாது.தி.மு.க.,வின் ஆதரவு வேண்டும் என கையேந்தும் கூட்டணி கட்சிகள் மட்டுமே, தமிழ் புத்தாண்டு மாறுவதை ஏற்று, அதற்காக கொடி பிடிப்பர். அது மிகவும் குறைவான சதவீதமே. அவர்களை மட்டும் திருப்திப்படுத்த, தமிழ் புத்தாண்டு தேதியை மாற்ற வேண்டுமா? இப்படி தேதி மாற்றியதை சாதனையாகக் கூறி, ஓட்டு கேட்கவும் முடியாது.எனவே, முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக தமிழ் புத்தாண்டை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து விட்டால். ஜன., 14க்குப் பதிலாக பிப்., 14க்கு மாற்றலாமே...
இதன் மூலம் காதலர்கள், காதலித்து திருமணம் செய்தோரின் மகிழ்ச்சிக்கு காரணமாகலாம்.விடுமுறை தினத்தின் எண்ணிக்கை குறையாததால், அனைவரும் மகிழ் வர். முதல்வர் சிந்திப்பாரா?
கட்சி பேதம் கூடாது!
முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார்.கோவையில் நடந்த விழாவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினரான வானதி சீனிவாசன், முதல்வரின் பணிகளை வெகுவாகப் பாராட்டினார்.சேலத்தில் சமீபத்தில் நடந்த விழாவில், பா.ம.க., சட்டசபை உறுப்பினர்கள் சதாசிவம், அருள் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசினர்.முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்பது, மிகவும் பாராட்டுக்குரியது.முதல்வர் என்பவர், அனைவருக்கும் பொதுவானவர். தொகுதிக்கு நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால், எம்.எல்.ஏ., -- முதல்வர் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.
கட்சி வெவ்வேறாக இருந்தாலும், 'மக்கள் பிரச்னை' என்று வருகிற போது அரசை சார்ந்து தான் பணி நடைபெற வேண்டும் என்பதை, எம்.எல்.ஏ.,க்கள் உணர வேண்டும்.இதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான், பா.ஜ., மற்றும் பா.ம.க., சட்டசபை உறுப்பினர்கள், அரசு விழாவில் பங்கேற்றனர்.கடந்த, 2004ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, நாகப்பட்டினத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அப்போது, மயிலாடுதுறை எம்.பி., மணிசங்கர் அய்யர், மேடையில் ஜெயலலிதாவை கடுமையான விமர்சனம் செய்தார்.
இக்காரணத்தால், அவரது அலுவலகம் சூறையாடப்பட்டது. அதனால் மயிலாடுதுறை, அன்றைய அ.தி.மு.க., அரசால் புறக்கணிக்கப்பட்டது. இதனால், அவரை தேர்ந்தெடுத்த மயிலாடுதுறை தொகுதி மக்களுக்கு தான் பேரிழப்பு. இது கடந்த கால கசப்பான அனுபவம்.முதல்வர் பங்கேற்கும் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை, எம்.எல்.ஏ.,க்கள் தவறவிடக் கூடாது.விருப்பு, வெறுப்புகளை நீக்கி, தொகுதி மக்களின் நன்மை கருதி, மேடை நாகரிகத்திற்கு கிஞ்சிற்றும் களங்கம் விளைவிக்காமல் செயல்பட வேண்டும்.ஆட்சி நிர்வாகத்தில் கட்சி பேதம் கூடாது!
இதற்கு தேசிய கீதம் பாடலாமா?
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 12 பேர், குளிர் கால கூட்டத் தொடரில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.அவர்கள், பார்லிமென்ட் வளாகத்தில் தேசிய கீதம் பாடி போராட்டம் நடத்தினராம். மேலும் அவர்கள், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தால் மட்டுமே, சபை நடவடிக்கை பாதிப்பின்றி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.இதிலிருந்தே இவர்கள், பார்லிமென்ட் அமைதியாக நடக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது தெரிகிறது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், முறைகேட்டில் ஈடுபட்டால், அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத முடியாது.கல்வி நிலையத்தில் அமளியில், அடிதடியில் ஈடுபடும் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்.குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவிப்பர். குற்றத்தில் ஈடுபடும் சிறார், சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
தனியார் நிறுவனத்தில் தவறு செய்யும் ஊழியர், பணியில் இருந்து நீக்கப்படுவார்.இப்படி அனைத்து இடங்களிலும் தவறு செய்வோர், ஏதாவது ஒரு தண்டனையை அனுபவிப்பர்.சாதாரண குற்றங்களில் ஈடுபடும் நபருக்கே தண்டனை கிடைக்கும்போது, இந்நாட்டின் மாண்பை பாதிக்கும் வகையில், பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்களுக்கு தண்டனை ஏதும் வழங்கக் கூடாதா?தங்கள் பொறுப்பு உணர்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அடிப்படை கூட, நம் எம்.பி.,க்களுக்கு தெரியாதா? பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் செய்யும் அமளியால், எந்த ஒரு மசோதாவையும் விவாதிக்க முடியவில்லை; முக்கியமான மசோதாக்கள் நிறைவேறுவது இல்லை. இதனால் நாட்டிற்கு எவ்வளவு இழப்பு...குற்றம் யார் செய்தாலும் தண்டனை உறுதி என்ற நிலை வர வேண்டும். இதை விடுத்து தேசிய கீதம் பாடி போராட்டம் நடத்தினால், செய்த தவறு இல்லை என்று ஆகிவிடுமா?நம் நாட்டில், தேசிய கீதம் எதற்கு பாட வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் போய் விட்டது.
காங்கிரசுக்கு கூட்டணியின் உபயம்!
மன்னருக்கு ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் நபருக்கு, பொற்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. மன்னர் செண்பகப் பாண்டியனையும், தருமியையும் நம்மால் மறக்க முடியுமா? ஆனால் இப்போது எதற்கெல்லாமோ, லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்படுகிறது. மதுரை நகர் பா.ஜ., மாவட்டத் தலைவர் சரவணன், 'காங்., முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவனை தாக்குபவருக்கு, 1 லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கப்படும்' என, ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.அது சரி, எதற்காக இந்த அறிவிப்பு... பின்னணி என்ன? பிரதமர் மோடி, ஹெச்.ராஜா, அண்ணாமலை போன்ற பா.ஜ., தலைவர்களை, இளங்கோவன் கடுமையாக விமர்சிக்கிறாராம்.அதனால் அவர், மதுரையில் கால் வைக்க முடியாது என்றும், அவரைத் தாக்குபவருக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு என்றும் அறிவித்திருக்கிறார், சரவணன்.இது தான் சார், இன்றைக்கு அரசியல்!ஒருவருக்கு ஒருவர் வாய்க்கு வந்தபடி திட்டுவதும், விமர்சிப்பதும், மரியாதை குறைவாகப் பேசுவதும் தான் இன்று, 'அரசியல் நாகரிகம்' என்றாகி விட்டது.வயதில் சிறியவராயினும், அவர் வகிக்கும் பதவிக்கு மரியாதை தர வேண்டும் என்ற கலாசாரம் எல்லாம், கடந்த தலைமுறையோடு தொலைந்து விட்டது.தி.மு.க.,வைச் சேர்ந்த உயர் கல்வி அமைச்சர் நேரு சமீபத்தில், கம்யூ., -- எம்.பி., வெங்கடேசனை ஏக வசனத்தில் பேசியுள்ளார்.கருத்து மோதல் இருக்கலாம்; அதற்காக அடிதடியில் இறங்குவது என்ன பண்பாடு?ஏற்கனவே தமிழகத்தில் ஆடு திருடும் கும்பலே, போலீஸ்காரரை வெட்டும் அளவிற்கு 'ரவுடி ராஜ்யம்' நடக்கிறது.இந்த லட்சணத்தில், ஒருவரை தாக்கினால் பணம் தருகிறேன் என்ற அறிவிப்பு எல்லாம் தேவையா?இதே இளங்கோவன், பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசையை தரக்குறைவாகப் பேசியதை, தமிழகம் இன்னும் மறக்கவில்லை.இளங்கோவன் விமர்சித்தால், பா.ஜ.,வினரும் பதிலுக்கு அவரையும், காங்கிரசையும் விமர்சியுங்கள். அதை விடுத்து, அடிதடி என்று இறங்கினால் நாடு யுத்த பூமியாகும். முட்டாள்தனமான எல்லா விமர்சனங்களுக்கும் பதில் தர வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தரம் கெட்ட மனிதர்களோடு மல்லுகட்டுவது வீண் வேலை.நேரு, காமராஜர், பக்தவத்சலம் காலத்தில் ஆரோக்கிய அரசியல் கண்ட காங்கிரஸ், இன்று நாகரிகத்தை காற்றில் பறக்க விட்டது காலத்தின் கோலம் மட்டுமல்ல; கூட்டணியின்
உபயம் கூட.
கேள்வி ஆகிவிடும்!
'எதிர்காலத்தில் விவாகரத்து மற்றும் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது' என்று, உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்; இது முற்றிலும் உண்மையான கருத்து.'நவீன யுகம்' என்ற போர்வையில், முன்னோர் பின்பற்றிய கலாசாரம் தற்போது அழியும் நிலைக்கு வந்து விட்டது.'ஆன்லைன்' வகுப்பு என்ற தவிர்க்க முடியாத காரணத்தால், பிள்ளைகளின் கைகளில் மொபைல் போன் தவழ்கிறது. இது, நம் பிள்ளைகளின் மனநிலையை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை, சொல்லித் தெரிய
வேண்டியதில்லை.இன்று, குடும்ப விழாவில் கூட மது பரிமாறப்படுவது, நாகரிகம் ஆகிவிட்டது. குரு பக்தி என்பதே ஒழிந்து விட்டது; மாணவரின் அடாவடித்தனத்தை கண்டு ஆசிரியர்கள் அச்சப்படும் காலத்தில் வாழ்கிறோம்.இன்று மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து, குடும்ப உறவுகள் பெரும்பாலும் அறுந்து விட்டன. சாதாரண பிரச்னைக்காக விவாகரத்து கோரி, நீதிமன்றத்திற்கு செல்கின்றனர்.நம் முன்னோர் வகுத்துக் கொடுத்த கலாசாரத்தையும், சகிப்புத்தன்மையையும் நாம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், நம் சந்ததியினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
No comments:
Post a Comment