இன்று ( 24/12/2021) எம்.ஜி.ஆரின் 34 வது நினைவு தினம்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை.,ஒரு நாளும் தளர்வான உடையுடனோ,நடையுடனோ யாருமே பார்த்திருக்கமாட்டார்கள்,அந்த அளவிற்கு தன்னையும் தன்னைச் சுற்றி இருந்தவர்களையும் உற்சாகமாக சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்தார், ஒரு நாள் மேடையில் தளர்ந்தார் மறுநாளே இறந்தார் என்று எம்.ஜி.ஆரின் உதவியாளராக இருந்த கே.மகாலிங்கம் நினைவு கூர்ந்தார்.எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் காலத்தில் இருந்து அவர் முதல்வராக இருந்து இறந்தது வரை அவரது தனி உதவியாளராக இருந்தவர் மகாலிங்கம்.தற்போது சென்னையில் வசிக்கும் மகாலிங்கம் எம்ஜிஆர் பற்றிய பல நினைவுகளை மட்டுமல்ல பல அரிய புகைப்படங்களையும் பொக்கிஷமாக வைத்துள்ளார்.
அவற்றில் ஒன்றுதான் சென்னை கிண்டி கத்திப்பார நேரு சிலை திறப்பு விழாவில் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சிக்கான படமாகும்.
22/12/1987 ம் மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே சோர்வுடன் காணப்பட்டார், எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல்தான் இருந்தார் பிரதமர் வரும் நிகழ்ச்சி என்பதால் அவசியம் போயாகவேண்டும் என்று கூறிவிட்டார்.
குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியனுடனும் தனது பாதுகாப்பு அதிகாரி ஆறுமுகத்துடனும் விழாவிற்கு சென்றார்.நாங்கள் ராமாவரம் தோட்டத்தில் இருந்தோம்.வழக்கமாக பிரதமர் மேடையில் முதல்வர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் ஆனால் எம்.ஜி.ஆரின் உடல் நலனை கருத்தில் கொண்டு அவரது பாதுகாப்பு அதிகாரி சி.எஸ்.ஆறுமுகத்தையும் மேடையில் எம்.ஜி.ஆர் பக்கத்தில் இருப்பதற்கு அன்றைய பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சுப்பிரமணியன் அனுமதித்தார்.
ராஜீவ்காந்தியை பிரமாதமாக வரவேற்று அவருக்கு சால்வை,சந்தனமாலை அணிவித்து நினைவு பரிசு கொடுத்து மகிழ்ந்தார் எம்.ஜி.ஆர்..பிரதமர் ராஜீவ் காந்தியும் மிகுந்த உற்சாகத்துடன் எம்.ஜி.ஆரை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
எம்.ஜி.ஆர்,,பேசவேண்டிய முறை வந்த போது அவர் மைக் முன்பாக வந்தார், ‛மைக்' சரியாக இருந்தாலும் அந்த மைக்குகளை அசைத்து அதை தனக்கு தோதாக மாற்றி வைத்துக் கொண்டு பேசுவது அவரது பழக்கம்.
அன்று அவர் மைக்கை சரி செய்ய கைகளை துாக்க முயன்றார் முடியவில்லை விட்டுவிட்டார் ‛மைக்' சற்று விலகியிருந்தது அப்படியே பேச ஆரம்பித்தார் இதைக்கவனித்த பிரதமர் ராஜீவ் காந்தி எழுந்து அவரே எம்ஜிஆர்., பேசுவதற்கு ஏற்ப மைக்கை சரி செய்தார் இதைப்பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர்.,லேசாக புன்னகைத்தார்.பேசி முடித்த பிறகு மிகவும் தளர்ந்து போய் அமர்ந்தார்.
அதன்பிறகு வீட்டிற்கு வந்து படுத்தவர்தான் மறுநாள் முழுவதும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் டாக்டர்கள் மருத்துவமனைக்கு போகலாம் என்றனர் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் இரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பில் எம்.ஜி.ஆர்,,மீளாத்துாக்கத்தில் ஆழ்ந்தார் மக்கள் மீளாத்துக்கத்தில் ஆழ்ந்தனர்.
அவர் இறந்து 34 வருடமாகிறது ஆனால் இன்றைக்கும் அவர் இறந்த நாளான்று அவரது சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்த திரளான பேர் வருகின்றனர் காரணம் அவர் மீது கொண்ட பாசமும்,பற்றும்தான்.
No comments:
Post a Comment