அப்பாவின் திவசத்துக்காக அம்மா வீட்டுக்கு வந்த போது பட்டமளிப்பு விழாவில் நான் எடுத்துக் கொண்ட புகைப்படம் அப்பா படத்திற்கு அருகில் மாட்டியிருந்தது.
அப்பாவுக்குத் தான் எத்தனை சந்தோஷம்... அப்பாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு "எனக்கு கல்லூரி படிப்பு வேண்டாம் அப்பா...எனக்கு கீழே இன்னும் ஐந்து பேர்கள் இருக்கிறார்கள்.. அவர்களும் படிக்க வேண்டும்..உங்கள் ஒரு சம்பளத்தில் குடும்பச் செலவுக்கே போதுமானதாக இல்லை. . நான் ஏதாவது வேலை தேடி என்னால் முடிந்த அளவில் குடும்பத்துக்கு உதவியாக இருப்பேன்" என்று நான் சொன்னதுக்கு
"இல்லை அம்மா... நீ நன்றாக படித்து டிகிரி வாங்க வேண்டும் என்று என்னுடைய நெடு நாளைய கனவு. மேலும் நம் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக நீ வர வேண்டும் என்கிற ஆசை...எனக்காக நீ படிக்க வேண்டும் அம்மா" என்றார் என் தலையை வருடியபடியே.
பட்டதாரி ஆனவுடன் பட்டமளிப்பில் எடுத்த புகைப்படத்தை தடவி தடவி பார்த்து கொண்டே இருந்தார். முகம் அழுவது போல் இருந்தது.
போட்டித் தேர்வுகள் எழுதி வங்கி ஒன்றில் வேலைக்கான ஆர்டர் வந்தவுடன் அப்பாவின் முகம் புது பொம்மை கிடைத்த குழந்தையின் மகிழ்ச்சியான முகத்தை போல பிரகாசித்தது.
வேலைக்கு சேர்ந்த சில தினங்களில் அப்பா என் அலுவலகம் வந்தார். "கொஞ்சம் காத்திருங்கள் அப்பா..அவசரமான வேலை ஒன்றை முடித்து விட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு வேலையை முடித்து விட்டு வந்தேன்.
அப்பாவின் முகம் களைப்பக இருந்தது. "ஏன் அப்பா உங்களுக்கு இப்படி வேர்க்கிறது" என்றேன்.
"ஒன்றும் இல்லை அம்மா..லிஃப்ட் வேலை செய்யவில்லை..அதான் மாடிப்படி ஏறி வந்தேன்" என்றார்.
"சொல்லுங்கள் அப்பா...நான் உங்களை காக்க வைத்து விட்டேன்"
" இல்லை அம்மா..நீ வேலை செய்யும் போது உன்னை பார்க்க வேண்டும் என்று தோன்றியது .அதான் அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்தேன்"
"பெண் டிகிரி வாங்கியதை கொண்டாடும் அப்பா.. பெண் வேலை செய்யும் அழகை பார்த்து ரசிக்கும் அப்பா..எத்தனை பேருக்கு இப்படி ஒரு அப்பா கிடைப்பார்?" என்று எண்ணி கண்ணீர் வந்தது.
வீட்டுக்கோ, தம்பி, தங்கைகளின் படிப்பு சம்பந்தமோ எதுவானாலும் என்னை கேட்காமல் அவர் செய்ததில்லை.
"உனக்கு வரன் தேடலாம் என்று இருக்கிறேன்"
"என்ன அவசரம் அப்பா? இன்னும் கொஞ்ச வருடம் கழித்து பாருங்கள்.. நான் கொஞ்சம் சம்பாதித்து குடும்பத்துக்கு உதவுகிறேன்"
"இல்லை அம்மா இதுதான் சரியான வயசு" என்று சொல்லி ஆறே மாதங்களில் திருமணத்தை நடத்தி விட்டார். கல்யாணம் செய்வதற்குள் அப்பாவுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அங்கே இங்கே என்று கடன் வாங்கி நடத்தி விட்டார். இனி குடும்பத்தை எப்படி நடத்துவார் என்று நினைக்கையில் மனதில் ஒரு கவலை உண்டானது.
"அப்பாவுக்கு மாதம் ஒரு தொகையை கொடுத்து உதவலாமா? அடுத்த தங்கை படிப்பை முடித்து வேலைக்கு போனதும் நிறுத்தி விடலாம்" என்று அவரிடம் கேட்ட போது "ஏற்கனவே கல்யாண செலவுகளுக்காக அலுவலகத்தில் லோன் போட்டிருக்கிறாய்..இப்போது மாதா மாதம் உதவ முடியாது" என்று பட்டென்று அவர் சொன்னதும் எனக்கு ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது.
பை நிறைய பழங்களும், வெற்றிலை பாக்கு, குங்குமம் மஞ்சள் கிழங்குடனும் கையில் இரண்டு கரும்புகளுடன் அப்பா வந்தது சந்தோஷத்தைக் கொடுத்தாலும் ஏன் இப்படி வேர்க்க விறுவிறுக்க களைப்புடன் வருகிறார் என்று மனதில் ஒரு கவலை உண்டானது.
"ஏன் அப்பா நீங்களே அலைகிறீர்கள். தம்பியிடம் கொடுத்து அனுப்பலாமே. உங்களுக்கு BP அதிகமாக இருக்கிறது என்று அம்மா சொன்னா"
"இருக்கிற வரைக்கும் நான் வருவது தானே முறை " என்றார் அப்பா.
பிரவசத்தின் போது அப்பா இரவு முழுவதும் மருத்துவமனை வாசலிலேயே இருந்தார். குழந்தை பிறந்து விட்டதா என்று கேட்டு கேட்டு தவியா தவித்ததாக அம்மா சொன்னாள்.
குழந்தை பிறந்து என் வீட்டுக்கு கொண்டு விடும் போது "இப்படியா மொட்டை கழுத்தோட குழந்தையை கொண்டு விடுவா.. சின்னதா ஒரு சங்கிலி வாங்கி மாட்டி இருக்கலாமே" என்று அவர் சிடுசிடுக்க
"கல்யாண செலவே அதிகமாகி விட்டது..இப்போது ஆஸ்பத்திரி செலவு வேற...அதான் உடனே வாங்க முடியவில்லை. இன்னும் ஆறு மாதத்தில் வாங்கி போடுகிறேன் மாப்பிள்ளை"
"சரியான தரித்திர குடும்பத்தில் பெண் எடுத்து விட்டோம்" என்று கோபமாக அவர் பேச அப்பா கூனி குறுகி கிளம்பி போனார்.
பிரசவ சமயத்தில் மருத்துவமனை வெளியே தவியாய் தவித்தது... மாப்பிள்ளையிடம் கூனி குறுகி நின்றது என்று எனக்காக அவர் பட்ட வேதனைகளை நினைத்து குமுறி குமிறி அழுதேன்.
"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்...ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம்.. உடனே வா" என்று அம்மா பதற்றமாக கூறியதும் உடனே விரைந்தேன்.
"நிலைமை மோசமாக இருக்கிறது... பார்க்க வேண்டியவர்கள் உடனே பார்த்து விட்டு வரலாம்" என்று மருத்துவர் கூறிய பிறகு அப்பாவை பார்க்க உள்ளே சென்றேன்.
அப்பா கண் மூடி மயக்கத்தில் இருப்பது தெரிந்தது...அப்பாவின் கைகளை மெதுவாக பற்றினேன்...உடலில் ஒரு அசைவு தெரிந்தது...சட்டென்று கண் திறந்து என்னை பார்த்தார்...ஏதோ சொல்ல முயன்றார்...முடியாமல் கண்கள் நிலை குத்த உலகை விட்டு போனார்.
எனக்காக உயிரை பிடித்துக் கொண்டே இருந்து என்னை பார்த்ததும் கண்களை மூடியது கண்டு வேதனை உண்டானது.
அப்பாவின் காரியங்கள் முடிந்ததும் அம்மா ஒரு சங்கிலியை கொடுத்து "பேரனுக்கு போட வேண்டும் என்று ஆசைப்பட்டார்..அதற்குள் இப்படி ஆகி விட்டது" என்று அழுதாள்.
"இதற்குத்தானே என் அப்பாவை உயிருடன் கொன்றீர்கள்...வைத்து கொள்ளுங்கள்" என்று ஆவேசமாக அந்த சங்கிலியை அவர் மேல் விட்டெறிந்தேன்...அவர் மௌனமாக வெளியே சென்றார்.
அப்பா இறந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டது... அதோ அப்பா தூக்க முடியாமல் பையையும் கரும்புகளையும் சுமந்து கொண்டு வருகிறார்... என்னைப் பார்க்க.. எனக்கு சீர் செய்ய.... மங்கலாக அவரின் உருவம் தெரிகிறது..பின் காற்றில் மறைகிறது.
எனக்காகாக தன் வாழ்நாளை தியாகம் செய்த அப்பாவை நினைத்து அவரின் படத்தின் மேல் முகம் வைத்து கதறி கதறி அழுதேன்.
No comments:
Post a Comment