துபாய் செல்ல விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின் வந்த போன் அழைப்பால், அமைச்சர் துரைமுருகன் சோகத்துடன் வீடு திரும்பிய தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணத்தை முடித்து, சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். பின் காலை 9:50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் 'எமிரேட்ஸ்' விமானத்தில் துபாய் செல்ல, காலை 8:30 மணிக்கே துரைமுருகன், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரது பழைய பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டதால், புதிதாக எடுத்து இருந்தார். சிக்கல்தவறுதலாக துபாய் விசாவில், புதிய பாஸ் போர்ட் எண்ணை குறிப்பிடாமல், பழைய எண்ணை குறிப்பிட்டதால், விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது; அதனால், வீட்டுக்கு வந்து விட்டார்.
விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறு சரி செய்யப்பட்டு, பின்னர் விசா பெறப்பட்டது. அன்று மாலை 6:50 மணிக்கு 'ஏர் இந்தியா' விமானத்தில் துபாய் செல்ல, விமான நிலையத்திற்கு வந்தார்.வழக்கமான பரிசோதனைகள் முடிந்து, விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது அவருக்கு வந்த மொபைல் போன் தகவலால், விமான பணியாளர்களை அழைத்து, 'நான் இன்று பயணம் செய்ய விரும்பவில்லை' என கூறி விட்டார்.
மகன் மறுப்பு
இதனால், அவரை விமானத்தில் இருந்து இறக்கி, வீட்டுக்கு அனுப்பினர். அந்த விமானம், 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால், துரைமுருகனுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் துபாய் செல்வதை தவிர்த்து, அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதாக காரணம் கூறப்பட்டது.
இதை, அவரது மகனும், வேலுார் தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் மறுத்துள்ளார். 'என் தந்தை துரைமுருகன் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வீட்டில் இருக்கிறார். 'அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை' என கூறியுள்ளார்.
நடந்தது என்ன?
முதல்வர் துபாய் பயணத்தின்போது, தன்னையும் அழைத்துச் செல்வார் என, துரைமுருகன் பெரிதும் எதிர்பார்த்தார்; அது நடக்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த துரைமுருகனை சரிக்கட்ட, துபாயில் முதல்வர் மேற்கொண்ட பணிகளை துரிதப்படுத்துவதற்காக, அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டது.
ஆனால், முதல்வருக்கு நெருக்கமானவர்கள், துரைமுருகனின் பயணத்தை விரும்பவில்லை. அவர் துபாய் செல்ல தடை போட்டு விட்டனர். அந்த தகவல், மொபைல் போன் வாயிலாக, விமானத்தில் அமர்ந்திருந்த துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால், கடைசி நேரத்தில், உடல் நலக் குறைவு காரணம் காட்டி, விமானத்தில் இறங்கி விட்டார்; அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இது தெரியாமல், அவரது மகன் கதிர்ஆனந்த் உண்மையை உடைத்து விட்டார் என்கிறது, ஆளுங்கட்சி வட்டாரம்.
No comments:
Post a Comment