தமிழக சட்டசபையில், 2022- - 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதன்பின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கடந்த கால சரிவை சரி செய்வது மட்டுமல்ல; அடுத்த, 25 ஆண்டு கால உயர்வை உணர்த்துவதாக, பட்ஜெட் அமைந்து உள்ளது' என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
பிப்ரவரி மாதம், பார்லிமென்டில் பட்ஜெட் சமர்ப்பித்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தான் சமர்ப்பித்த பட்ஜெட், 25 ஆண்டு கால வளர்ச்சியை உள்ளடக்கியது என்று கூறியிருந்தார்.அந்த, 25 ஆண்டு கால வளர்ச்சி என்ற வார்த்தையை மட்டும், ஸ்வீகரித்துக் கொண்டு, தன் தலைமையின் கீழ், தமிழக நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டை, 25 ஆண்டு கால உயர்வுக்கான வழி என்று, புளகாங்கிதம் அடைந்து இருக்கிறார் முதல்வர்.
மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்த போது, வெளிநாடுகளிடமும், உலக வங்கியிடமும் கடன் வாங்கி, நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பின், கடன் வாங்கும் நிலையில் இருந்து மாறி, கடன் கொடுக்கும் நிலைமைக்கு நிர்வாகம் சீராகியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இலங்கைக்கு, 7,500 கோடி ரூபாய், மத்திய அரசு கடன் வழங்கியுள்ளது. ஆனால், ஆட்சியில் அமர்ந்த எட்டு மாதங்களில், பல கோடி ரூபாய் கடன் வாங்கியதுடன், 2022- - 23ம் நிதியாண்டுக்கு, 90 ஆயிரம் கோடி கடன் வாங்க ஒரு திட்டத்தையும் தீட்டி, தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டை, 25 ஆண்டு கால உயர்வுக்கான பட்ஜெட் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.
'அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளும், அதல பாதாளத்துக்கு போய் விட்டன. நிதித் துறை மிக மோசமாக, கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது. 5.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதுடன், நிதியை சூறையாடி விட்டது அ.தி.மு.க., அரசு' என தி.மு.க.,வினர் தான் குற்றஞ் சாட்டி வந்தனர்.
ஆனால், இப்போது அவர்களே கடன் வாங்கும் தவறை செய்கின்றனர். ஒரு அரசியல் கட்சியை குற்றஞ் சாட்டுவதற்கு முன், அப்படி குற்றஞ் சாட்டுவதற்கு தங்களுக்கு அருகதை உண்டா என்று ஒரு முறை அல்ல, ஓராயிரம் முறை யோசித்துப் பார்த்து, குற்றஞ் சாட்ட வேண்டும்.
நுாறு ரூபாய் வருமானம்; 90ரூபாய் செலவினம். மீதி, 10 ரூபாய் சேமிப்பு. அது வாங்கியுள்ள கடனை திரும்பகட்டுவதற்கு என்ற ரீதியில், ஒரு பட்ஜெட்டை சமர்ப்பித்து இருந்தால், ஸ்டாலின் தன்னைத் தானே பாராட்டி கொள்ள வேண்டியது இருந்திருக்காது.
நாட்டு மக்களே புகழ்ந்து தள்ளுவர்.அடுத்த நிதியாண்டில், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டம் தீட்டியிருக்கும் பட்ஜெட், 25 ஆண்டு உயர்வுக்கு வழி காட்டும் பட்ஜெட்டா?எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை வேண்டும். அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு என்பர். அதுபோல, இந்த பட்ஜெட் உள்ளது.
No comments:
Post a Comment