ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணை, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா சிறைக்கு செல்லவே, பழனிசாமி முதல்வரானார். பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, 2017 செப்டம்பர் 25-ல், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சசிகலா உறவினர் இளவரசி, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், முன்னாள் தலைமை செயலர் ராம்மோகன் ராவ், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி, ஜெயலலிதா வீட்டு பணியாளர்கள். ஓட்டுனர்கள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் என, 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, 2018 மார்ச் 12-ம் தேதி, 55 பக்கங்கள் கொண்ட வாக்குமூலத்தை, வழக்கறிஞர் வாயிலாக, ஆணையத்தில் தாக்கல் செய்தார். அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் விதித்த தடையால், ஒன்றரை ஆண்டுகள், ஆணையத்தின் பணிகள் முடங்கியிருந்தன. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, மீண்டும் விசாரணையை துவங்கியது.
கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் ஆஜரான பன்னீர்செல்வம், எட்டரை மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். 'ஜெயலலிதா மரணத்தில், எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சசிகலா மீதும் சந்தேகம் இல்லை. சசிகலா மீதான சந்தேகத்தை போக்கவே நீதி விசாரணை கோரினேன்' என்றார்.இந்நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்தில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. பன்னீர்செல்வத்துடன் விசாரணை நிறைவு பெற்று விட்டதாக, ஆணையம் தெரிவித்தது. சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியனும் தங்களது விசாரணை முடிந்து விட்டதாக தெரிவித்தார்.
இறுதி அறிக்கை
இதுவரை, 12 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்ட, ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம், வரும் ஜூன் 24-ம் தேதி முடிகிறது. ஏப்ரல் 7-ம் தேதியோடு ஆணையத்தின் விசாரணை முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இனியொரு முறை கால நீட்டிப்பு இல்லாமல், ஜூன் 24-ம் தேதிக்குள் ஆணையம், தன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது.புதிய செயலர்ஆறுமுகசாமி ஆணைய செயலராக இருந்த சிவசங்கரன், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். புதிய செயலராக சஷ்டி சுபன்பாபுவை நியமனம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment