‘அவமானங்களே ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும்’. அவமானம் என்பது ஒரு மனிதனுக்குத் தூண்டுகோள்தான்.
மனிதனின் மனம் அவமானங்களைக் கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்.
அதுவே முயற்சியில் வேகத்தைக் கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்.
ஒருவனது அவமானங்கள்தான் அவனைக் கடினமாக உழைக்க வைக்கிறது.
ஒருவனது அவமானங்கள்தான் கடுமையாய் முன்னேற வேண்டும் என்கின்ற வெறியைத் தூண்டுகிறது.
ஒருவனது அவமானம்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்துவிட முடியாது.
செட்டிநாட்டில் இருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன்.
அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
“படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்து இருக்கிறார் கண்ணதாசன்.
அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப் படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவுப் படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார். “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள்.
வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்கவிட்டது…
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவியரசர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.
ஆம் நண்பர்களே
அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கற்றுக் கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது
“உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பழிவாங்கிட அல்ல... தப்பித் தவறிக் கூட அதே தவறை நாம் இன்னொருவருக்குச் செய்து விடக் கூடாது என்பதற்காக.
No comments:
Post a Comment