போக்குவரத்து விதிமீறியோரிடம் இருந்து, 11 நாட்களில் 1.42 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, நிலுவையில் உள்ள அபராத தொகையை வசூலிக்க, 10 இடங்களில், கால்சென்டர்களை, இம்மாதம் 11ல், கமிஷனர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இந்த கால்சென்டர்கள் வாயிலாக, 11 நாட்களில் 2,389 வாகன ஓட்டிகளின் மொபைல் போன் எண்களுக்கு போலீசார் தொடர்பு கொண்டு, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்துங்கள்; தவறினால், வழக்குகள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
இதன் வாயிலாக, 55 ஆயிரத்து, 885 வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு, 1.42 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சதம் கடந்த வாகன ஓட்டிகள்
இதில் அதிநவீன கேமராவின் கண்காணிப்பில் ஒன்பது வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வாகன ஓட்டிகளிடம் இருந்து 1.37 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள், 43 முறையும், 20க்கும் மேற்பட்ட வாகனங்கள், 158 முறையும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. இதன் உரிமையாளர்களிடம் இருந்து, 9 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஒருவர் இரட்டை சதம்
மேலும், 10க்கும் மேற்பட்ட முறை, 263 வாகனங்களும், 2க்கும் மேற்பட்ட முறை, 2,881 வாகனங்களும் போக்குவரத்து விதிகளை மீறி உள்ளன. இதன் வாகன ஓட்டிகளிடம் இருந்து, 19 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதில், ஒரு வாகனம் மட்டும், 223 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளது. அதன் உரிமையாளரிடம் இருந்து மொத்த தொகையையும் அபராதமாக போலீசார் வசூலித்தனர்.
அதிக முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 11 பேர் மீது, 1,393 வழக்குகள் பதிவு செய்து, 1.46 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அத்துடன், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 19.81 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில், பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம், தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனம் மட்டும், தங்களின், 17 வாகனங்களின் விதிமீறல்களுக்கு, 1.20 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி உள்ளது.வாடகை வாகன உரிமையாளர்கள் நிலுவையில் உள்ள அபராத தொகையை, முழுதுமாக செலுத்துவதாக உறுதி அளித்து இருப்பதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
அறிவுறுத்தல்
வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தும் முறையை எளிமைப்படுத்த, மொத்தமாக எஸ்.எம்.எஸ்., அனுப்புவது மற்றும் கட்டணம் செலுத்தும் வசதி மையங்களையும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். வாகன ஓட்டிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, போக்குவரத்து விதிமீறலுக்கான நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தி கொள்ளலாம்.
No comments:
Post a Comment