லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய கோவை போக்குவரத்து இணை ஆணையர், ஊருக்கு ஊர் புரோக்கர்கள் நியமித்து லஞ்சம் வசூலித்தது அம்பலமாகியுள்ளது.
கோவையில் போக்குவரத்து இணை ஆணையராக பணியாற்றிய உமாசக்தி, ஏப்., 23ல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், 28 லட்சம் ரூபாய் லஞ்சப்பணத்துடன் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீதும், முன்னாள் அரசு ஊழியர் செல்வராஜ் என்பவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கோவை, திருப்பூர், நீலகிரி என, மூன்று மாவட்டங்கள் அடங்கிய கோவை சரக போக்குவரத்து துறை செயல்பாடுகளுக்கு பொறுப்பான அதிகாரி உமாசக்தி. இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சப்பணத்தை வசூலித்து, தனக்கும், மேல் அதிகாரிகளுக்கும் கொடுப்பதற்காக, செல்வராஜை, உமாசக்தி நியமித்துள்ளார்.
செல்வராஜ் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு நிலுவையில் உள்ளது. லஞ்சப்பணம் வசூலில் கரை கண்டவர் என்பதால், அவரை தன் வசூலுக்கு உமாசக்தி பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
'ஐந்து மாதங்களாக கோவை, நீலகிரி, திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து நம்பிக்கையான புரோக்கர்கள் கொடுத்து அனுப்பும் மாமூல் பணத்தை, தன் வீட்டில் வைப்பேன்' என்றும், 'உமாசக்தி ஊருக்கு செல்லும் போது தன் வீட்டில் வந்து வாங்கிச் செல்வது வழக்கம்' என்றும், செல்வராஜ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தான் வசூலித்த லஞ்சப்பணத்தின் கணக்கு விபரங்களை, 'வாட்ஸ் ஆப்'பில் உமாசக்திக்கு, செல்வராஜ் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், லஞ்ச வழக்கில் செல்வராஜுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி, கோவை கோர்ட் நேற்று தீர்ப்பளித்து உள்ளது.
சிக்கியது பட்டியல்!
இணை ஆணையர் உமாசக்தியிடம், தான் ஒப்படைத்த லஞ்சப்பணத்துக்கு, செல்வராஜ் கணக்கு எழுதி வைத்துள்ளார். புரோக்கர்கள் யார், யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெறப்பட்டது என்ற விபரத்துடன் இருந்த அந்த பட்டியலை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கோகுல், தெற்கு அலுவலகத்தில் சண்முகம், சூலுாரில் இன்னொரு சண்முகம், ஊட்டியில் சாய் மெர்சி, மேட்டுப்பாளையத்தில் ராஜன், திருப்பூர் வடக்கு, தெற்கில் சதீஷ், ராமசாமி, தாராபுரத்தில் பாபு, உடுமலையில் பாய், பொள்ளாச்சியில் ராஜேஷ், கூடலுாரில் ராஜன், அவிநாசியில் காளை சரவணன், காங்கேயத்தில் தேவா ஆகியோர் லஞ்சம் வசூலித்துக் கொடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment