மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தின் ஞான ரத யாத்திரையை, தமிழக கவர்னர் துவக்கி வைத்துள்ளார். அவர், தருமபுரத்துக்கு வரக் கூடாது என, கடந்த சில நாட்களாகவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிடர் கழகங்களைச் சேர்ந்தோர், எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர்களுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்களும் சேர்ந்து கொண்டனர்.
கடந்த 18ம் தேதி எதிர்ப்பு குழுவினர், 'கவர்னர் ரவியை வைத்து ஞான ரத துவக்க நிகழ்ச்சியை நடத்தக் கூடாது' என, தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகளை, நேரில் சந்தித்து கடிதம் கொடுக்கச் சென்றனர்; அவர்களை சந்திக்க ஆதீனம் மறுத்து விட்டார்.இதையடுத்து, ஆதீன மடத்தின் நிர்வாக அலுவலகத்தில் கடிதம் கொடுத்து திரும்பினர்.
ஆதிக்கம்:
கவர்னர் ரவி திட்டமிட்டபடி நிகழ்ச்சியில் பங்கேற்க, போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர், கவர்னர் ரவி வந்த காரை நோக்கி, கற்கள் வீசியதாகவும் தகவல். போராட்டக்காரர்களுக்கு கடைசி வரை அனுமதி அளிக்காத போலீசார், அவர்களை சம்பிரதாயத்துக்கு கைது செய்து, பின் விடுவித்தனர்.
கவர்னர் ரவிக்கு காட்டப்பட்ட எதிர்ப்பு குறித்து, தருமபுரம் ஆதீன மடத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, ஆதீன மடங்களுக்கு சிக்கல் தான். ஆதீன மடங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. அவற்றை காலம் காலமாக ஆதீனகர்த்தர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். அந்த சொத்துக்கள் மீது, அரசியல்வாதிகளுக்கு அதீத ஆர்வம் உண்டு. ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை வைத்து, சொத்துக்களை மடக்கி விட, அரசியல்வாதிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.
ஹிந்து அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் ஆதீன மடங்கள் இல்லாவிட்டாலும், மடத்துக்கு சொந்தமான கோவில்களின் நிர்வாகத்துக்குத் தேவையான உத்தரவுகளை, அறநிலையத் துறையிடம் இருந்து தான் பெற்றாக வேண்டும். இது சட்ட நடைமுறை. அதனால், ஆதீன மடங்களிலும், மடங்களுக்குச் சொந்தமான கோவில்களிலும், அறநிலையத் துறை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
கோவில்களை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது வரை எல்லா பணிகளையும் ஆதீனகர்த்தர்கள் செய்கின்றனர். ஆனால், கோவில் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்து, அதற்கான அனுமதி பெறுவதில் துவங்கி, பல விஷயங்களிலும் தொடர் இன்னல்களை ஆதீன மடங்கள் சந்தித்து வருகின்றன.
பின்னடைவு:
ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், ஆண்டுதோறும் ஒரு நிகழ்ச்சி நடக்கும். ஆதீனகர்த்தர் பல்லக்கில் அமர்ந்து கொள்வர். அந்த பல்லக்கு, அங்கேயே இருக்கும் மடத்தையோ அல்லது மடத்துக்கு சொந்தமான கோவில் பிரகாரங்களையோ சுற்றி வரும்.ஆதீனகர்த்தர் வீற்றிருக்க, ஒவ்வொரு வீட்டு முன்பும் பல்லக்கு நிறுத்தப்படும்; அவருக்கு பூஜைகள் செய்யப்படும்.
ஆதீன மடத்துக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு பெற்று இருக்கும் விவசாயிகளும், சொத்துக்களை வாடகைக்குப் பெற்று இருப்போரும், ஆதீனகர்த்தருக்கு காணிக்கை செலுத்துவர்; சொத்துக்களுக்கான வரியை செலுத்துவர். இதற்கு, பட்டின பிரவேச நிகழ்ச்சி என்று பெயர். இது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு முதல், திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் திராவிட கழகத்தினர், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஒன்று சேர்ந்து, 'பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது' என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருப்பனந்தாள் ஆதீனம் முத்துகுமரசாமி தம்பிரான், பட்டின பிரவேசத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். உடனே, போராட்டக் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு தரப்பிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வராமல் இருக்க, நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறினர். அதன் அடிப்படையில் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது. அதே போல், திருவாரூர் வேலுக்குறிச்சி மடத்திலும் ரத்து செய்யப்பட்டது.
கடந்த டிசம்பரில், தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட, அங்கும் போராட்டக் குழுவினர் திரண்டனர். கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தருமபுர ஆதீனம் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். இது, போராட்டக் குழுவினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
உறுதி:
கடந்த பிப்., 7ல், திருவாவடுதுறை ஆதீன மடத்தில், பட்டின பிரவேசம் நடக்கும் என அறிவிப்பு வெளியானது. உடனே, அங்கு போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிக பரமாச்சாரியர் நிகழ்ச்சியை நடத்தினார். போராட்டக்காரர்களுக்கு பின்னணியில் அரசு தரப்பும், தி.மு.க.,வும் உள்ளனர் என்பதை ஆதீனகர்த்தர்கள் அறிந்து கொண்டனர்.
தங்களுக்குள் பேச துவங்கினர்; மறைமுகமாக ஆதீனகர்த்தர்களின் எதிர்ப்பை அரசு தரப்பிடம் பதிவு செய்ய வேண்டும் என, முடிவு எடுத்தனர். அதன் ஒரு கட்டமாக, தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு, கவர்னர் ரவியை அழைத்தனர். நேரம் இல்லாததால், மற்றொரு நாளில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவதாக கவர்னர் உறுதி அளித்தார்.
இதையடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரத்தில் நடக்கும் புஷ்கரம் விழாவுக்கு யாத்திரை செல்வது என, தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகள் முடிவு எடுத்தார். இதற்காக, ஞான ரத யாத்திரையை அறிவித்தார். இந்த நிகழ்ச்சியை துவக்கி வைக்க, நேற்று முன்தினம் சென்ற கவர்னர் ரவிக்கு எதிராக, போராட்டக் குழுக்கள் கறுப்புக் கொடி காட்டினர். சிலர், கவர்னர் காரை நோக்கி கல் வீசினர். தருமபுரம் வந்த கவர்னர் ரவி, அருகில் இருக்கும் திருவாவடுதுறைக்கு சென்று, அங்குள்ள ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகளை சந்தித்துப் பேசினார்.
தி.மு.க., தரப்பில், கவர்னர் எதிர்ப்பு போராட்டங்களுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறி வருகின்றனர்; அதை ஆதீனகர்த்தர்கள் நம்ப தயாரில்லை. மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பிரிந்து கிடந்த ஆதீனகர்த்தர்கள், கவர்னருக்கு எதிர்ப்பு போராட்டம் நடந்ததன் வாயிலாக, ஒன்று சேர்ந்து விட்டனர். இனி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆதீனங்களுக்கு அரசு தரப்பிலான கட்டுப்பாடுகள்!
* மடத்துக்கு சொந்தமான கோவில்கள் என்றாலும், கும்பாபிஷேகம் உள்ளிட்ட எந்த திருப்பணியானாலும், அறநிலையத் துறை அனுமதி பெற்று தான் நடத்த முடியும். திருப்பணி தொடர்பான கணக்குகளை, அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
* முன்கூட்டியே ஹிந்து அறநிலையத் துறைக்கு தெரிவித்து, ஒப்புதல் பெற்ற பின், மடத்துக்கு சொந்தமான கோவில்களில் சாதாரண உற்சவங்களை கூட நடத்த முடியும்
* கோவில் காணிக்கைகள், நன்கொடைகள் என எல்லாவற்றுக்கும் முறையாக கணக்குகள் இருக்க வேண்டும். அது தொடர்பான விபரங்களை அவ்வப்போது அறநிலையத் துறைக்கு கோவில் அல்லது மடத்து நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்
* ஆதீனகர்த்தர் தலைவராக இருந்து மடத்து நிர்வாகத்தை நடத்தலாம். ஆனால், பொது மேலாளர் அந்தஸ்தில் ஒருவரை, ஒவ்வொரு மடமும் நியமிக்க வேண்டும். மடம் சார்பில் தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது அறநிலையத் துறை உத்தரவு. அதுவும், வருவாய் துறையில் அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்றவர்களையே அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும்
* மடத்து நிர்வாகத்தில் ஆதீனகர்த்தர்கள் என்ன நிலை எடுத்து செயல்பட்டாலும், அது ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிந்து விடும். இப்படி பொது மேலாளர்கள் வாயிலாக, ஆதீனகர்த்தர்களை கண்காணிக்கிறது ஹிந்து சமய அறநிலையத் துறை
* மடமும், மடத்துக்கு சொந்தமான கோவில்களும் சீரான இடைவெளியில், அரசு தரப்பில் தணிக்கை செய்யப்படும். மடத்துக்கு சொந்தமானதாக இருக்கும் நகைகளை, உற்சவங்களின் போது ஆதீனகர்த்தர்கள் அணிவர். அந்த நகைகளுக்கு கூட அவ்வப்போது தணிக்கை உண்டு
* மடத்துக்கு சொந்தமான நிலங்களை, 99 ஆண்டுகள் வரை யாருக்கு வேண்டுமானாலும் குத்தகைக்கு விடும் அதிகாரம் ஆதீனகர்த்தர்களுக்கு இருந்தது. அதை, ஆறு ஆண்டுகளாக அறநிலையத் துறை குறைத்து விட்டது. இதனால், ஆதீனகர்த்தர்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்து, கல்வி நிலையங்கள் நடத்தவோ, தொழிற்சாலைகள் நடத்தவோ, நீண்ட கால குத்தகைக்கு யாராவது நிலம் கேட்டு வந்தால், கொடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இப்படி ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏராளமான கட்டுப்பாடுகள் இருப்பதாலேயே, தமிழக அரசு மீது ஆதீனகர்த்தகர்கள் கோபமாக உள்ளனர்.
No comments:
Post a Comment