Thursday, April 21, 2022

பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட விருத்தகிரீஸ்வரர் கோவில்.

 கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார்.

பிரம்மனும், அகத்தியரும் வழிபட்ட விருத்தகிரீஸ்வரர் கோவில்
விருத்தகிரீஸ்வரர் கோவில்


















நடுநாடு என்று அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இங்குள்ள இறைவனுக்கு பழமலைநாதர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. சமய குறவர்களால் பாடல் பெற்று இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் 9-வது திருத்தலமாக விளங்குகிறது.

பிரம்மனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது மேலும் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இங்கு எழுந்தருளி இருக்கும் பழமலைநாதர் என்னும் விருத்தகிரீஸ்வரர் முன்காலத்தில் மலையாய் காட்சி கொடுத்துள்ளார். இதனால் விருத்தாசலத்துக்கு திருமுதுகுன்றம் என்கிற பெயரும் உண்டு.

மலையாய் காட்சி கொடுத்த இங்குள்ள மூர்த்திக்கு பழமலைநாதர், முதுகுன்றீஸ்வரர், பெரியநாயகர், விருத்தகிரீஸ்வரர் என பெயர் அமைந்துள்ளது. அம்மையை பெரியநாயகி, விருத்தாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். குருநமச்சிவாயத்துக்கு இளமையாக காட்சி கொடுத்ததால் பாலாம்பிகை என்றும் இளையநாயகி என்றும் அழைக்கின்றனர்.

புண்ணிய தலம், முக்திதலம் என்று போற்றப்படும் இந்த தல புராணத்தில், ‘இத்தலம் விட்டுக் காசியில் ஏகினும் இல்லை, தவப்பயன் முத்தியும் இல்லையே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் காசிக்கு மேல் வீசம் என்பதால் விருத்தகாசி எனவும் அழைக்கிறார்கள். இந்த தலத்தில் இறக்கின்ற எல்லா உயிர்களுக்கும் பழமலைநாதர் ஐந்தெழுத்து ஓதி முக்தி கொடுப்பதாகவும், பெரியநாயகி முந்தானையால் வீசி பிறப்பை அகற்றுவதாகவும் கச்சியப்பர் கந்தபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். கோவிலின் நான்கு புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலைகளை உடைய பெரிய கோபுரங்கள் நிற்கிறது. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகபெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த வரலாறு உண்டு. இந்த 28 லிங்கங்கள் தனி சன்னதியாக கோவிலில் அமைய பெற்றுள்ளது. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகனும் காட்சி அளிக்கிறார்கள். உலகில் எந்த கோவிலிலும் இல்லாத பெருமையாக இது பார்க்கப்படுகிது. இக்கோவிலில் பலவித சிறப்புகளுக்கு உரியவர் பெரியநாயகர் என்று அழைக்கப்படும் விருத்தகிரீஸ்வரருக்கு பவுர்ணமி அன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.

கோவிலில் முதன் முதலில் திருப்பணி செய்த விபசித்து முனிவருக்காக காட்சி கொடுக்கும் ஐதீக பெருவிழா மாசி மகப்பெருவிழாவின் 6-ம் நாள் நடைபெறுகிறது.

பஞ்சமூர்த்திகள் என்று கூறியவுடன் நினைவுக்கு வருவது விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேசுவரர் ஆவார்கள். மாசி மக பெருவிழாவின் போது இந்த உற்சவ மூர்த்திகள் காலை, மாலை இரு வேளையும் எட்டு வீதிகளிலும் உலாவருவதை தற்போதும் காணலாம்.

கோவிலுக்கு உள்ளே பஞ்ச லிங்கமும் அமைந்துள்ளது. சிவபெருமான் பஞ்ச பூத வடிவில் உள்ளார் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டி இங்கு பஞ்ச லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.

இந்த கோவில் வன்னியடி திருச்சுற்றின் தென்மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 திருத்தலங்களும் சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிப்பட்டால், ஒவ்வொரு தலத்திலும் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது பக்தர்கள் இடையே நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார். பைரவர் கையில் வில் உள்ளது மற்றொரு தனி சிறப்பு ஆகும். அருணகிரியாரால் 3 பாடல்கள் பாடப்பட்ட முருக பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.

இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட இந்த தலத்தை ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...