Monday, December 12, 2022

இது தான் அகடிதகடனா சாமர்த்தியம்.

 சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.” இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு சொல்கிறார் என்று தோன்றும்.

“நீ ஏதோ டபாய்க்கிற” என்பேன்
“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்” என்பார். அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும் போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக் கொள்ளச் சொல்ல மாட்டார். அவர் வேண்டிக் கொள்ளச் சொல்லுவது, நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ என்பார். இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது. சின்ன வயதில்
அவர் சொன்னது சில வருடங்கள் முன்
புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது. புளி டப்பாவைத் திறந்த போது, அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது. ஏர்-டைட் டப்பர் வேர் புளி டப்பா, மூடியிருக்கிறது. அதற்குள் பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன்.
நான் சொறிந்து கொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா என்றார்கள். தலையில் பேன் எப்படி உற்பத்தி ஆகியது என்று மேலும்
பலமாகச் சொறிந்து. கொண்டேன். ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். குளித்து விட்டு பெருமாள் சேவிக்கும் போது சாளரத்தைப் பார்த்தேன்.
எப்படியொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும் என்று யோசித்தேன். மீண்டும் குழப்பம்.
கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பதே தெரியாமல் இருக்க,
தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்! பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு நரசிம்மருக்கு யார் தாய் என்று புரிந்து கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு ஆழ்வார் பாசுரங்களையும் ஸ்வாமி தேசிகனையும் நாடினேன். ஸ்வாமி தேசிகன் நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், அதனால் அவருடைய தாய் அந்தத் தூண் தான் என்கிறார். தேசிகன் கூறிய பிறகு அதை மறுத்துப் பேச முடியுமா?
(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறோமோ அதே போல் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எது செய்தாலும் அதில் தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். ஆசாரியன் கூறிய பிறகு அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் ஞானம்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார்.
எந்தப் பொருளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு. அதாவது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.
ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும். எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்து கொள்வதே அறிவு என்கிறார் நம்மாழ்வார். கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள் பற்றிப் பேசுகிறேன் என்று அவர்களின் பி.எச்.டியை வைத்துக் கொண்டு கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். நம் சிறிய அறிவை வைத்துக் கொண்டு அவனை அளக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாது. நம் அறிவு என்பது எவ்வளவு சின்னது என்று ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிறேன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré, சிந்தனைப் பரிசோதனை என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார். இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. அதனால், நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் இன்று தூங்கி நாளை எழுந்து கொள்ளும் போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் உங்கள் அப்பா, அம்மா, நாய்குட்டி, வீடு, கோயில், செடி, தட்டு, அரிசி, பேனா, பென்சில், சட்டை, அணுக்கள், நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், ஏன், நீங்கள் என உங்களைச் சுற்றியுள்ள அனைத்துமே பெரிதாகி விடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை நீங்கள் எழுந்த பிறகு எல்லாம் பெரிசாகி விட்டது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்றால் முடியாது என்கிறார் Jules henri. அவ்வளவு தான் நம் அறிவு.
சாதாரணமாக இதையே அளக்க முடியாத போது பெருமாளை இப்படித் தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.
ஆலமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான், கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
- திருப்பாணாழ்வார்
எழு உலகையும் உண்டு
ஒரு குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்ட பெருமாள் என்று சொல்லும்போது, உலகை உண்ட பிறகு அந்த இலையில் எப்படிப் படுத்துக்கொள்வான் என்று கேள்வி எழும். கோவர்த்தன மலையைத் திருப்பிக் குடையாய் பிடித்த போது அதில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் கீழே சிந்தவில்லையாம்.
அதே போல மரங்கள் எல்லாம் எப்போதும் போலச் சாதாரணமாக இருந்ததாம்
(உடனே புவியீர்ப்பு தத்துவம் உங்களுக்கு ஞாபகம் வந்தால்
நீங்க இன்னும் கடவுளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை!) எப்படி என்று இதை எல்லாம் யோசிக்கவே முடியாது. முயற்சியும் செய்யாதீர்கள்! இது தான் அகடிதகடனா சாமர்த்தியம்.
(லிஃப்கோ தமிழ் அகராதியில் -“perfectly accomplishing even the impossible” என்று கொடுத்திருக்கிறார்கள்.)
நம் இரைப்பையில் ‘ஹைட்ரோ குளோரிக் அமிலம்’ இருக்கிறது என்றால் நம்புவீர்களா? அதை ஒரு பாட்டிலில் பிடித்து அடித்தால் ரவுடிகள் வீசும் ஆசிட் தோற்றுவிடும். அந்த அமிலம் கையில் பட்டால் நம் கை ஓட்டையாகும். ஹார்பிக் என்ற நம் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வஸ்துவில் 10% இந்த அமிலம்தான் இருக்கிறது. நம் வயிறு, ஆசிட் வைத்திருக்கும் ரவுடி.! இவ்வளவு மோசான ஆசிட் உள்ளே இருக்க நம் வயிறு ஏன் இன்னும் பஞ்சராகவில்லை? பேன் தலையில் இருந்தால் அந்த ‘இச்சிங்’ உணர்வை நாம் எப்படி உணர்கிறோம். இச்சிங்கோ, டச்சிங்கோ நாம் அதை உணர்வது எப்படி? உணர்த்துவது யார் என்று கேட்கும் கேள்விகளுக்கு விடை ஆழ்வார் பாசுரங்களில் எங்கோ புதைந்து இருக்கிறது. நாம் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறோம். பதவி உயர்வு, பணம், வீடு வாசல் வேண்டும். தேர்வில் மதிப்பெண், கல்யாணம், வெளிநாட்டு வீசா, சில சமயம் காகிதத்தில் எழுதி ஆஞ்சநேயர் கழுத்தில் கூட மாட்டி விடுகிறோம். ‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் சொல்லுவது போல் ஓடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் என்றாவது எனக்கு அறிவு இல்லை, அது வேண்டும் என்று பெருமாளிடம் கேட்டிருக்கிறோமா? கேட்டதில்லை, காரணம் நம்மை நாமே அறிவுஜீவி என்று நினைத்துக் கொள்கிறோம்.
யாதுமாகி நிற்பவன் அவனே.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
May be an image of flower

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...