திருப்பதிக்குப் போகவேண்டும் என்ற ஆசை, நம் மனதில் எழும்போதெல்லாம், 'இடங்கள் தெரிந்த யாராவது நமக்குத் துணைக்கு வந்தால், நன்றாக இருக்குமே' என்று தோன்றும்.
இல்லாவிட்டால், `பாஷை தெரியாத ஊரில் நாம் எங்கு, எதை விசாரிப்பது' என்ற வழக்கமான குழப்பம் வருவது இயற்கை.
திருமலைக்குச் செல்லும்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...
சி.ஆர்.ஓ ஆபீஸ்
திருமலையில் (மேல்திருப்பதி) பஸ்-ஸ்டாண்டுக்கு எதிர்ப்புறம் சென்றால், 200 அடி தொலைவில் இருப்பதுதான் சி.ஆர்.ஓ ஆபீஸ்.
இந்த அலுவலகம் இங்குள்ள முக்கியமான மையம் என்று சொல்லலாம்.
இந்த அலுவலகத்தில் திருமலை பற்றிய சகல விவரங்களையும் நீங்கள் கேட்டு அறியலாம்.
ஆன்லைனில், அறைகள் முன்பதிவு செய்திருப்பவர்களுக்கு இங்குதான் அறைகள் ஒதுக்கப்படும்.
சி.ஆர்.ஓ ஆபீஸ் பின்புறம் எஸ்.எஸ்.டி எனப்படும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட தரிசனத்துக்கு உங்களின் ஆதார் கார்டை காண்பித்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
லாக்கர் அறை !!
நீங்கள் கொண்டுவரும் பை, ஃப்ளாஸ்க், செல்போன் முதலிய பொருள்களைப் பத்திரமாக வைத்துப் பூட்டிவிட்டுச் செல்வதற்கு லாக்கர் அறைகள் உண்டு.
அவற்றை விசாரணை மையத்தில் தொடர்புகொண்டு அங்குச் சென்று வைத்துக்கொள்ளலாம்.
உங்கள் பெயர், தொலைபேசி எண், ஆதார் அட்டையைக் காண்பித்தால் உங்களுக்கு கோத்ரேஜ் பூட்டுடன் ஒரு லாக்கர் தருவார்கள்.
அதில் உங்கள் உடைமைகளை வைத்துவிட்டு திருமலையில் எங்கு வேண்டுமானாலும் சுற்றி வரலாம்.
மீண்டும் உங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பூட்டையும், சாவியையும் ஒப்படைத்து விட வேண்டும்.
செல்போனுக்குத் தடை !!
சுவாமி தரிசனம் செய்யப் போகும்போது, செல்போனை `சைலன்ட் மோடி'ல் போட்டுவிட்டு லாக்கரில் வைத்து விட்டுச்செல்லுங்கள்.
சுவாமி தரிசனம் செய்யும்போது செல்போன் உங்களிடம் இருந்தால், அதைப் பாதுகாவலர்கள் கைப்பற்றி, செல்போன் பாதுகாக்கும் இடத்துக்கு அனுப்பிவிடுவார்கள். பிறகு, அதை வாங்குவதற்கு நீங்கள் அலைய வேண்டியிருக்கும்.
கல்யாண கட்டா!!
`கல்யாண கட்டா' முடிக்காணிக்கை செலுத்தும் இடம்.
திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் செல்பவர்களில் பலரும் மொட்டை போட்டு முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம்.
`கல்யாணகட்டா' என்னும் 5 அடுக்கு மாடிக்கட்டடம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு எதிரே மிகப்பெரிய அளவில் உள்ளது.
முடிக்காணிக்கையை இந்த இடத்தில்தான் செலுத்தவேண்டும் என்பதில்லை.
பக்தர்கள் தங்கும் வராகசாமி கெஸ்ட் ஹவுஸ், மாதவ நிலையம், கருடாத்திரி கெஸ்ட் ஹவுஸுக்குப் பின்புறம் உள்ள பஸ் டெர்மினஸ் எனப் பல இடங்களில் முடியைக் காணிக்கையாகச் செலுத்தலாம்.
இதற்கு எந்தவிதக் கட்டணமோ, பணமோ எவருக்கும் தரத் தேவையில்லை.
சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு !!
சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி எனும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் இந்த நிலையத்தைத்தான் வந்தடையும்.
இங்குள்ள முன்பதிவு அலுவலகத்தில் நாம் புறப்படும் வசதிக்கு ஏற்ப முன்பதிவும் செய்து கொள்ளலாம்.
இந்தப் பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் திருமலையில் இருக்கும் பாபநாச தீர்த்தம், ஆகாஷ் கங்கா, ஜபாலி ஆகிய இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் புறப்படும்.
பேருந்தில் ஏறும்போதே ரிட்டர்ன் டிக்கெட்டும் சேர்த்தே எடுத்துக்கொள்ளலாம்.
புஷ்கரணி, கோயில் திருக்குளம்!!
முடிக் காணிக்கை செய்ததும் அங்குள்ள குளியலறைகளில் நீங்கள் குளித்திருந்தாலும், சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக கோயிலுக்கு அருகில் இருக்கும் திருக்குளத்தில் ஒருமுறை நீராடி விட்டோ, தண்ணீரை அள்ளி தலையில் தெளித்துக் கொண்டோ சுவாமி தரிசனம் செய்வது நல்லது.
வராகசுவாமி கோயில்!!
திருக்குளத்தில் நீராடி முடித்ததும் அதன் கரையிலேயே இருக்கும் வராகசாமி கோயிலில் சுவாமியை வணங்க வேண்டும்.
அதன் பின்னரே வேங்கடேசப் பெருமாளை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.
ஏனென்றால், திருமலையில் முதலில் எழுந்தருளியவர் வராக சுவாமிதான்.
அதன் பின்னர்தான் சீனிவாசன் எனும் வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டார். அதனால் முதல் வணக்கம் வராக சுவாமிக்குத்தான்.
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் - 2
300 ரூபாய் சிறப்புத் தரிசனம் தவிர, சர்வதரிசனம், திவ்ய தரிசனம் (மலைப்பாதை வழியாக நடந்து வந்து தரிசிப்பவர்கள்) நேர ஒதுக்கீட்டுத் தரிசனம் என அனைத்து வகையினரும் இந்த வழியாகத்தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த இடத்தை அடைய நாம் பெரிதாகச் சிரமப்படத்தேவையில்லை.
மலை முழுவதும் வலம் வரும் `தர்மரதம்' என்னும் ஆரஞ்சு வண்ணப் பேருந்தில் நீங்கள் பயணித்தால், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் என்று சொல்லியே இறக்கி விடுவார்கள்.
பகல், இரவு பாராமல் இந்த பேருந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை புறப்படும்.
ஆனந்த நிலையம்!!
வேங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் ஆனந்த நிலையம். இங்குதான், சர்வ தரிசனம், திவ்ய தரிசனம், சிறப்பு தரிசனம் எனப் பல்வகையான வழிமுறைகளில் வரும் பக்தர்கள் ஒரு சேர தரிசனம் செய்வார்கள்.
தரிகொண்ட வெங்கமாம்பாள் அன்னதானக்கூடம் !!
சுவாமி தரிசனம் முடிந்ததும், கோயிலுக்கு இடதுபுறம் இருக்கிறது இந்த அன்னதானக்கூடம்.
இங்கு ஒரே சமயத்தில் 4 ஆயிரம்பேர் சாப்பிடும் விதமாக 1000 பேருக்கு ஒரு கூடம் என 4 கூடங்கள் உள்ளன.
இங்குச் சுடச்சுட தலைவாழை இலையில் வேண்டுமளவு உணவு வழங்கப்படுகிறது.
பெருமாள் பிரசாதம் என்பதால் பக்தர்கள் பலரும் இங்கு வந்து சாப்பிட்டுச்செல்வார்கள்.
சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், துவையல் ஆகியவற்றுடன் உணவு வழங்கப்படும்.
லட்டு கவுன்டர்!!
அன்னதானக் கூடத்திலிருந்து கோயிலின் மதில்சுவரையொட்டி நடந்து சென்றால் வலதுபுறம் லட்டுகள் வழங்கும் மிகப்பெரிய கட்டடம் உள்ளது
இங்கு 50-க்கும் மேற்பட்ட கவுன்டர்களில் லட்டுகள் வழங்கப்படும்.
தரிசனத்துக்கு முன்பாகவே லட்டு டோக்கன் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.
அந்த லட்டு டோக்கனைக் காண்பித்து நீங்கள் இங்கு உங்களுக்கு உரிய லட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஓம் நமோ வேங்கடேசாய நமஹ!!
No comments:
Post a Comment