கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.
அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு.
ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.
பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்.
ஏன்?
கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று.
குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.
அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.
விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,
பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.
பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது.
இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.
ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.
அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை.
கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.
ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.
அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.
அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.
இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான்.
இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது.
அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள்.
அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.
ஆமாம். நம் பகவான் அண்ணாமலையார் தான் அந்த இளைஞன்!
எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.
கால்கள் கொடுத்தவர் இறைவன் தான்.
கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?
அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் அண்ணாமலையாரின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் இறைவன்.......
No comments:
Post a Comment