Thursday, December 1, 2022

இனி இட்லி செய்ய அரிசி உளுந்து எதுவுமே தேவையில்லை கொஞ்சம் பாசிப்பருப்பு இருந்தால் போதும் சுவையான இட்லி ரெடி. ஒருமுறை செய்து பாருங்க இனி அடிக்கடி இந்த இட்லி தான் செய்விங்க.

 தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவே இந்த இட்லி தான். குழந்தைக்கு கொடுக்கும் முதல் உணவில் இருந்து வயதானவர்கள் கொடுக்கும் உணவு வரை எல்லாவற்றிலும் முதலிடம் இந்த இட்லிக்கு தான் உண்டு. இட்லியை வேக வைத்து உண்பதால் ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் எளிதில் ஜீரணமாக கூடியதாகவும் இருக்கும். இந்த இட்லியை இப்பொழுதெல்லாம் ஜவ்வரிசி, ரவை, சேமியா, இதெல்லாம் கூட செய்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுது நாம் பாசிப்பருப்பை வைத்து செய்யும் இட்லியை தான் பார்க்க போகிறோம். இட்லி என்றாலே அரிசி ,உளுந்து இரண்டையும் ஊற வைத்து, அதன் பிறகு அரைத்து புளிக்க வைத்து செய்வது தான் நம் பாரம்பரியமான முறை. இந்த முறையில் அப்படி ஏதும் செய்யாமல் வெறும் பாசிப்பருப்பை மட்டுமே வைத்து சில மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தயார் செய்து விடலாம். அந்த முறையை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் வாங்க. தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 1 கப், தயிர் – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, கடுகு – 1/4 ஸ்பூன், கேரட் துருவியது – 1/4 கப், இஞ்சி – 1 துண்டு, கருவேப்பிலை – 1 கொத்து, நெய் – 1டேபிள் ஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன். இந்த இட்லி செய்வதற்கு முன் பாசிப்பருப்பை மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்து அதன் பிறகு கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் தனியாக ஊற்றி இத்துடன் தயிர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து அதில் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்த உடன், பச்சை மிளகாயும், இஞ்சியும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு துருவிய கேரட்டை சேர்த்து அதையும் லேசாக வதக்கி அரைத்து வைத்த பாசிப்பருப்பு மாவில் சேர்த்து கலந்து கொஞ்சம் ஈனோ உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைத்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து அடுப்பை பற்று வைத்து இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் சூடானவுடன் நீங்கள் எப்போதும் போல இட்லி ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு எந்த வகை சட்னி என்றாலும் நன்றாகவே இருக்கும். பருப்பு,காய் சேர்த்து செய்யும் இந்த இட்லி குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு. இதை சைட் டிஷ் இல்லாமல் வெறும் இட்லியாக சாப்பிட்டால் கூட நன்றாக தான் இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இது போல உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...