கழைக்கூத்தாடி ஒருவன், ஊர் ஊராகச் சென்று வித்தை செய்து காட்டுவான். அதில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தான்.
ஒரு நாள் ஓர் ஊரில், மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் கயிற்றின் மீது நடந்து வித்தை காட்டினான். மக்கள் கை தட்டினார்கள். பின் கீழே இறங்கி, ஒரு இரும்பு வளையத்தை எடுத்தான்.
"இந்த வளையத்திற்குள் இப்போது நான் நுழையப் போகிறேன்!'' என்றான்.
மக்களோ, ""இந்த இரும்பு வளையத்திற்குள் இவனால் கஷ்டப்பட்டுத்தான் நுழைய முடியும்,'' என்று நினைத்தார்கள்.
மக்களோ, ""இந்த இரும்பு வளையத்திற்குள் இவனால் கஷ்டப்பட்டுத்தான் நுழைய முடியும்,'' என்று நினைத்தார்கள்.
அப்போது கழைக்கூத்தாடி, "எல்லாரும் நன்றாகக் கை தட்டுங்கள்!''என்றான்.
மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்துகொண்டிருக்கும் போதே, அவன் வளையத்திற்குள் திடீரென்று நுழைந்து வெளியே வந்துவிட்டான்!
பிறகு அவன், வேறு ஒரு கம்பி வளையம் எடுத்தான். அது, சற்று முன்பு அவன் நுழைந்து வெளியே வந்த வளையத்தை விடவும் சிறியதாக இருந்தது.
அவன், "நான் இப்போது இந்த வளையத்திற்குள் நுழையப் போகிறேன். எல்லாரும் கை தட்டுங்கள்!'' என்று கூவினான்.
அதைப் பார்த்த மக்கள், "இந்தச் சிறிய வளையத்திற்குள் இவன் எப்படி உள்ளே நுழைந்து வெளியே வருவான்?' என்று ஆச்சரியப்பட்டார்கள். என்றாலும், ஆரவாரம் செய்து கை தட்டினார்கள்.
கழைக்கூத்தாடி வளையத்திற்குள் நுழைய முயற்சி செய்தான். ஆனால், அவனால் முடியவில்லை. என்றாலும் ஏதேதோ முயற்சி செய்து, வளையத்திற்குள் நுழைந்து வெளியே வந்துவிட்டான்!
அதன்பின் அதையும் விட சிறிய வளையத்திற்குள், மக்கள் கை தட்ட, நார் போல் உள்ளே நுழைந்து வெளியேறினான்.
பார்வையாளர்கள் கூட்டத்தில் திருடன் ஒருவன் இருந்தான். அவன் கழைக்கூத்தாடி மூன்றாவது கம்பி வளையத்தில் நுழைந்து வெளியே வந்ததைப் பார்த்து, மிகவும் ஆச்சரியப்பட்டான்.
அதைத் தொடர்ந்து திருடன், "நான் பணக்காரர்கள் வீடுகளுக்குத் திருடச் செல்கிறேன். அந்த வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் உள்ள இடைவெளி, இவன் இப்போது நுழைந்து வெளியே வந்த மூன்றாவது கம்பி வளையத்தைவிட அதிகமாக இருக்கிறது. எனவே நான் திருட நினைக்கும் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு இடையில் இந்த கழைக்கூத்தாடி நுழைந்து, வீட்டுக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்துவிட்டால் போதும்! நான் வீட்டிற்குள் சுலபமாக நுழைந்து நிறைய திருட முடியும்!' என்று நினைத்தான்.
அவன் கழைக்கூத்தாடியை அணுகி, "உங்களுக்கு இந்தத் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கிறதா?'' என்று கேட்டான்.
"இதில் என்ன எனக்குப் பெரிய வருமானம் கிடைக்கிறது! மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்து பாராட்டுவதோடு சரி ... அவர்கள் எங்கே எனக்குக் காசு போடுகிறார்கள்? என் வாழ்க்கை ஏதோ நடக்கிறது...'' என்று சலித்துக்கொண்டே கூறினான்.
அவனிடம் திருடன், "நான் உனக்கு ஒரு நாளில் சிறிய ஒரு வேலை மட்டும் தருகிறேன். அதை நீ செய்தால், உனக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன். சம்மதமா?'' என்றான்.
கழைக்கூத்தாடி ஆவலுடன் அவனைப் பார்க்கவே, "நான் ஒரு திருடன். திருடச் செல்லும் வீடுகளில், ஜன்னல் கம்பியை வளைத்துத் திருட வேண்டியிருக்கிறது. நான் திருட நினைக்கும் வீட்டு ஜன்னல் அருகில் உன்னைக் கொண்டுபோய் விடுகிறேன் அங்கு நீ ஜன்னல் கம்பிக்குள் புகுந்து கதவைத் திறந்து விட வேண்டும். சம்மதமா?'' என்று வினவினான்.
கழைக்கூத்தாடி சம்மதித்தான்.
அன்றைய தினம் அமாவாசை, நள்ளிரவு நேரம். ஒரு பங்களாவிற்கு இருவரும் சென்றனர்.
கழைக்கூத்தாடி, திருடன் காட்டிய ஜன்னல் கம்பிகளுக்கிடையில் நுழைவதற்கு முயற்சி செய்தான். ஆனால், பலமுறை முயற்சித்தும் அவனால் அதில் நுழைய முடியவில்லை.
அதைக் கண்ட திருடன், "இதைவிடச் சிறிய கம்பி வளையத்திற்குள், நீ நுழைந்து வெளியே வந்ததை நானே பார்த்தேனே! அப்படியிருக்கும்போது, இப்போது இந்த வளையத்திற்குள் நுழைய முடியவில்லை என்கிறாயே? ஏன் இப்படி?'' என்று கேட்டான்.
கழைக்கூத்தாடி, ""ஐயா! இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. ஒரு பத்து பேரை அழைத்து வந்து, இப்போது இங்கு கை தட்டச் சொல்லுங்கள். உடனே நான் இந்த ஜன்னல் கம்பி இடைவெளிக்குள் நுழைந்துவிடுகிறேன்!'' என்றான்.
அதைக் கேட்ட திருடன், ""சரியான ஆளய்யா நீ! நான் இங்கு பத்து பேரை அழைத்து வந்து கை தட்டச் செய்தால், வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பவர்கள் விழித்துக்கொள்வார்கள்! அதன்பிறகு இந்த வீட்டில் நான் எப்படி திருட முடியும்?'' என்று கேட்டான்.
அதற்கு கழைக்கூத்தாடி, "ஐயா, நானும் உங்களைப் போன்றவன் தான். உங்களால் என்ன என்ன செய்ய முடியுமோ, அதைத்தான் என்னாலும் செய்ய முடியும். நான் ஒரு சராசரி மனிதன் தான், ஒரு சாதாரண மனிதன் தான்.
"நான் மக்கள் குழுமியிருக்கும் கூட்டத்தில் வித்தை செய்து காட்டுகிறேன். அதைப் பார்க்கும் மக்கள் கை தட்டி என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும் என் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, என்னை அரிய செயலைச் செய்யும்படிச் செய்து விடுகிறது... அவ்வளவுதான் விஷயம்'' என்றான்.
"நான் மக்கள் குழுமியிருக்கும் கூட்டத்தில் வித்தை செய்து காட்டுகிறேன். அதைப் பார்க்கும் மக்கள் கை தட்டி என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும் என் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி, என்னை அரிய செயலைச் செய்யும்படிச் செய்து விடுகிறது... அவ்வளவுதான் விஷயம்'' என்றான்.
அது கேட்ட திருடன், "இந்தக் கழைக்கூத்தாடி என்னுடைய தொழிலுக்கு சிறிதும் உதவாதவன்!' என்று புரிந்துகொண்டான்.
இந்தக் கதை உணர்த்தும் நீதி என்ன?
மக்களில் பெரும்பாலானவர்கள் சாதாரணமானவர்கள் தான், சாராசரி மனிதர்கள் தான். இப்படிப்பட்ட சாதாரணமானவர்கள் கூட, சரியான முறையில் ஊக்கமும் உற்சாகமும் அங்கீகாரமும் கிடைத்தால் பெரிய சாதனைகள் செய்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.
எனவே நல்ல செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, நாம் சரியான முறையில் ஊக்கமும் உற்சாகமும் தர வேண்டும். அது போலவே பிறரிடமிருந்து நாமும் ஊக்கமும் உற்சாகமும் பெற வேண்டும்.
இதைத்தான் நம் பெரியோர்கள், ""எரியும் விளக்கிற்கும் ஒரு தூண்டுகோல் தேவை'' என்று சூத்திரம் போன்று ரத்தினச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர், "ஒரு துளி நீரில், கடலையே பார்ப்பவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்'' என்று கூறியிருக்கிறார்.
சுவாமி விவேகானந்தர், "ஒரு துளி நீரில், கடலையே பார்ப்பவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்'' என்று கூறியிருக்கிறார்.
அதாவது, "ஒருவரிடம் இருக்கும் சிறிய நல்ல குணத்தையும் பெரிதாகப் பாராட்டி ஊக்குவிப்பவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்' என்பது இதன் பொருள்.
No comments:
Post a Comment