உலகில் மனித இனம் தோன்றிய போதே இறை ஞானமும் ஏற்பட்டு விட்டது. மனிதன் பரிணாம வளர்ச்சிப் பெற்று, ஆறு அறிவையும் பயன்படுத்தியபோது, கோவில்களுக்கான அவசியம் தானாகவே உருவாகியது. இறைவனை சரண் அடைய, சரியான இடம் கோவில்தான் என்பதை உணர்ந்தான்.
ஆனால் இந்த உணர்தல் என்பது நம் மூதாதையர்களிடம் உடனே ஏற்பட்ட ஒன்றல்ல. பழந்தமிழகத்தில் இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறையே இறைவழிபாட்டின் தொடக்க நிலையாக இருந்தது. முதலில் சூரியன் உதிப்பதை கண்டு பயந்து அதை பார்த்து கையெடுத்து கும்பிட்டனர். பிறகு எதைப் பார்த்தாலும் புனிதமாக வணங்கத்தக்கவையாக கருதினார்கள்.
மலை, ஆறு, கடல், குளம், மரம், செடி, கொடி, சூரியன், சந்திரன், காற்று, தீ, வெயில், மழை, கால் நடைகள்... என எல்லாமே இறைவனது அம்சம் என்று நம்பினார்கள். இந்த இயற்கை வழிபாட்டின் பரிணாம வளர்ச்சியே, பிற்காலத்தில் பஞ்ச பூதத் தலங்களாக ஆங்காங்கே மாறின என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
நீர் நிலை ஓரங்களிலும், மலைகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில் அதிக சக்தி கிடைப்பதாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர். அந்த வகையில் பழந் தமிழர்கள் முதலில் மரங்களையே தெய்வமாகப் போற்றி வணங்கினார்கள். மரங்களில் தெய்வங்கள் குடி கொண்டிருப்பதாக நம்பினார்கள்.
சங்க கால இலக்கியங்களில் இதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலங்களுக்கும் உரிய மரங்கள் தங்களை பாதுகாப்பதாக ஆதி தமிழர்கள் உறுதியாக நம்பினார்கள். மரங்கள் அழிந்தபோது, அதில் உறைந்துள்ள தெய்வங்களும் இல்லாமல் போய் விடுமோ என்று ஒரு கட்டத்தில் பயந்தனர்.
எனவே மரங்களில் இருந்து கடவுளை பிரிக்கும் முடிவுக்கு வந்தனர். அதன்படி மரம், செடி கொடிகளின் அடியில் கடவுள் உறைந்துள்ளார் என்ற நம்பிக்கையை பரவச் செய்தனர். இதனால் காடுகள் கடவுள் நிறைந்துள்ள பகுதி என்று பழந் தமிழர்களிடம் கருத்து பரவியது. இவைதான் இன்றும் ஆரண்ய (கானகம்) தலங்களாக உள்ளன என்கிறார்கள்.
ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு மரங்களின் அடியில் தங்களுக்கு பிடித்த கடவுள் திருவுருங்களை அமைத்து வழிபட தொடங்கினார்கள். இந்த காலக் கட்டம்தான் இந்து மதத்தின் தலையாய மாற்றமாக கருதப்படுகிறது. ஒன்றுமே இல்லாத காலத்தில், இறைவனை அருவமாக வழிபட்டு வந்த அவர்களுக்கு, தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் வடிவமாக மாற்றி, பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தத் தொடங்கினார்கள்.
அந்த தெய்வ உருவங்களைப் பார்த்ததும் புலவர்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. மன்னனை புகழ்ந்து பாடிய புலவர்கள், இறை வடிவங்களையும் புகழ்ந்து பாட ஆரம்பித்தனர். மன்னனை புகழ்ந்து பாடினால் உணவும், பொருளும்தான் கிடைக்கும். இறைவனை புகழ்ந்து பாடினால் நமக்கு எல்லாம் கிடைக்கும் என்று நினைத்தனர்.
சில நூற்றாண்டுகளில், இறைவனை பாடினால் ஆன்ம பலம் உண்டாகும். ஆத்மாவுக்கு உயர்வு கிடைக்கும் என்ற உண்மை பழந்தமிழர்களுக்கு புரிய வந்தது. தெய்வ திருவுருவங்கள் மழையில் நனைவதும், வெயிலில் காய்வதையும் கண்ட நம் முன்னோர்கள், மர இலை, தழைகளைக் கொண்டு பந்தல் அமைத்தனர்.
மரத்தை சுற்றி இலை பந்தல் இருந்தால் அங்கு கடவுள் இருக்கிறார். அது வழிபட வேண்டிய இடம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கற்கோவில்கள் அமைக்கப்படுவதற்கு இவைதான் முன்னோடியாக இருந்தன. இவைதான் கோவில்கள் தோன்ற காரணமாக இருந்தன. மக்களின் சிந்தனை வட்டம் விரிவடைய, விரிவடைய இலை பந்தல் ஆலய வழிபாட்டிலும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின.
தங்களுக்கு விருப்பமான இடங்களில் எல்லாம் இறை உருவங்களை அமைத்தனர். மலைகள், கடலோரங்கள், ஏரிக்கரை ஓரங்கள், அடர்ந்த காடுகளுக்கும் சென்று இறைவன் உருவங்களை அமைத்தனர். இதற்கு பிறகுதான் இறை வழிபாட்டில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. மலை, காடு, ஏரி, குளம், கடலோரம் போன்ற பகுதிகளில் உள்ள கடவுளை ஊருக்குள் அழைத்து வந்து எழுந்தருள செய்ய விரும்பினார்கள்.
இந்த வழிபாடு மாற்றத்துக்கான குறிப்புகள் சங்ககால பாடல்களில் உள்ளன. இது ஊர்கள் தோறும் இறை வழிபாட்டை வியாபிக்கச் செய்தது. எங்கெல்லாம் இறை திருவுருவங்களை பிரதிஷ்டை செய்தார்களோ, அங்கெல்லாம் கோவில் கட்டினார்கள். அந்த கோவில்களில் எழுந்தருளி உள்ள கடவுளுக்கு தினம், தினம் தடபுடல் விருந்து கொடுத்து வழிபட்டனர்.
உயிர்களை பலியிடுதல் என்பது இதில் இருந்துதான் தோன்றியது. பின்னர் இறை வழிபாடுகளில் போட்டியும், புதுமையும் சேர்ந்தன. பலியிடுதல், மலர் தூவுதல், நைவேத்தியம் படைத்தல், பண் இசைத்து பாடுதல், வெறியாட்டு நடத்துதல் என்று தங்களது விருப்பங்களை எல்லாம் இறை வழிபாட்டில் புகுத்தினார்கள்.
பிறகு ஒரு காலக் கட்டத்தில் கடவுள் வடிவங்களை வீதி, வீதியாக எடுத்துச் செல்லும் பழக்கம் தோன்றியது. மக்கள் தங்கள் வீடு முன்பு நின்று கடவுளை வரவேற்று, உபசரித்து மனநிறைவு பெற்றனர். இதைத் தொடர்ந்து வந்த காலங்களில் மக்கள் சிந்தனை பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப சுயநலமாக மாறி இருந்தது.
தெருவில் வந்து செல்லும் இறைவன் நிரந்தரமாக தம் வீட்டுக்குள்ளேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தனர். அதன் விளைவு மரத்தில் தோன்றி, மலைக்காடுகளில் தவழ்ந்து, ஊருக்குள் புகுந்த தெய்வம், வீடுகளுக்குள்ளும் வந்து விட்டது. அப்படி வந்த இறை திருவுருங்களை அரசர்கள், வசதி உள்ளவர்கள் வெளியில் அனுப்ப சம்மதிக்கவில்லை.
காலம் செல்ல.... செல்ல.... இது எங்கள் குல தெய்வம் என்று வரையறுத்துக் கொண்டனர். இதனால்தான் பல நூறு ஆண்டுகள் கடந்தும், பல தலைமுறைகளை கண்ட பிறகும் பல ஊர்களில் இன்றும் குல தெய்வ வழிபாடு உச்சத்தில் இருப்பதை பார்க்க முடியும். ஆக, இயற்கையோடு இயைந்த நம் முன்னோர்கள் வழிபாடு, மாறி, மாறி, அருவம், உருவ நிலைக்கு வந்து, அந்த உருவத்தை சுற்றி கோவில் எழுந்ததை புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஐ வகை நிலங்களுக்கும் தனி தனி தெய்வங்கள் இருந்ததை சங்க காலத்தில் உறுதி செய்தனர். காலம் மாறியது. சங்க காலம் மறைந்து, சங்கம் மருவிய காலம் உதயமானது. இந்த மாற்றத்தால் இறை உருவம் தரும் சக்தியால் கடவுள் தங்களிடம் பேசுவதாக மக்கள் கருதினார்கள். அந்த கால புலவர்கள் இவற்றை சற்று கற்பனை சேர்த்து சுவைபட பாடினார்கள்.
இதற்கிடையே வேத சடங்குகள் எனும் வேள்வி முறை தோன்றியது. காடுகளிலும், நீர் நிலை ஓரங்களிலும் வேள்விகள் நடத்தப்பட்டன. வேள்வி நடத்தப்பட்ட இடங்கள் புனித பகுதிகளாக கருதப்பட்டன. அந்த இடங்களில் எல்லாம் பழந்தமிழர்கள் கோவில்களை கட்டினார்கள். அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் கோவில்களாக உள்ளது.
உலகில் உள்ள கோவில்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் உள்ள கோவில்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. சமீபத்திய ஒரு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் அரசு சார்பு புராதன கோவில்கள் 34 ஆயிரத்து 491 உள்ளன. தனியார் பராமரிக்கும் பழைய ஆலயங்களையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் பழைய ஆலயங்கள் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பழந்தமிழர்கள் தாங்கள் அறிந்திருந்த நடனம், இசை, ஓவியம் உள்ளிட்ட எல்லா நுண்கலைகளை கோவிலோடு தொடர்புபடுத்தி யதால்தான், கோவில்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு பெருகி விட்டது. சமூக அமைதி, நிலையான, மகிழ்ச்சியான வாழ்வு, நேர்மையான அரசாட்சி, கலை உணர்வு, திட்டமிட்ட சுகாதாரமான வாழ்க்கை நெறிமுறை போன்றவை தமிழர்களின் கோவில் கட்டும் ஆர்வத்துக்கு உறுதுணையாக இருந்தன.
மன்னர்கள், குறுநில மன்னர்கள் போட்டி போட்டு ஆலயங்களை பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டினார்கள். அரசனுக்கு செய்யப்படும் எல்லா உபாசாரங்களும் கோவில்களுக்கு இடம் மாறின.
இதனால்தான் கடவுளை பூபாளம் பாடி துயில் எழுப்புவதும், நீராடி, அபிஷேகம் செய்து ஆராதனைகள் புரிவதும், பிறகு மன்னன் நகர் உலா போவது போல கடவுளும் வீதி உலா எழுந்தருள்வதும், இரவில் நீலாம்பரி பாடி இறைவனை தூங்க வைப்பது போன்றவை நடைமுறைக்கு வந்தன. அந்த காலத்தில் அரசனின் முடிசூட்டு விழா, திருமண விழா பிரமாண்டமாக நடைபெறும்.
இறை உருவங்களுக்கும் இவை செய்யப்பட்டன. மன்னருக்கு தேர் இருப்பது போல கடவுளுக்கும் தேர் செய்யப்பட்டது. கோவில்கள் பெருகிய பிறகு வேள்வி மத சடங்குகள் முக்கியத்துவம் இழந்தன. விக்கிரக வழிபாட்டுக்கான ஆகம சடங்குகள் முன்னிலைப் பெற்றன. நியமம், கோட்டம், நகரம், பள்ளி என்ற பெயர்களில் எல்லாம் அழைக்கப்பட்டு வந்த வழிபட்டுத் தலங்கள் கோவில்கள் என்று மாறின.
மாட வீதிகள், பிரகாரங்கள் தோன்றின. தினசரி பூஜை வழிபாடுகள், சிறப்பு விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவாரம், திருவாசம், நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் மத புராணங்கள் உருவாகின. கடவுளையும், ஆலயங்களையும் புகழ்ந்து எழுதப்பட்ட இந்த இலக்கியப் பாடல்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள்.
இதன் மூலம் உலகில் முதன் முதலாக மக்களை கோவிலுக்கு அழைத்து வந்து, கடவுளை வழிபட வைத்தது, இந்து மதம்தான் என்பது உறுதியாகிறது. அது மட்டுமின்றி இந்த இலக்கியங்கள் உருவாவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வளமான ஆலய வழிபாடு இருந்தது என்பதும் உறுதியாகிறது. இந்த ஆலயங்களை எல்லாம் நம் முன்னோர்கள், சும்மா இஷ்டப்படி கட்டி விடவில்லை.
ஒவ்வொரு ஆலயத்துக்குள்ளும், ஒவ்வொரு வித ஆகம, ஐதீக ரகசியங்களை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக ஆலய அமைப்பில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ராமாயணம் எழுதப்படுவதற்கு முன்பே இருந்த ராமேசுவரம் கோவிலை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆகம விதிப்படியிலான கோவில்கள் அதிகரித்தன.
அவை, 'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்' என்பதாக உள்ளன. அதாவது நம் முன்னோர்கள் நம் உடலே கோவில் என்றனர்.
No comments:
Post a Comment