Tuesday, December 5, 2017

தமிழகத்தை காப்பாற்ற கோபப்படுங்கள்!

இந்தியாவில், 2.50 லட்சம் ஏரிகள் உள்ளன; அதில், 1.66 லட்சம் ஏரிகள் தமிழகம், கர்நாடகா, ஆந்திரத்தில் உள்ளன. இதில், 39,200 ஏரிகள் தமிழகத்தில் உள்ளன. பெய்யும் மழையின் அளவும், தமிழகத்தில் தான் அதிகம்!இப்படி இருந்தும், சென்னைவாசிகளின் தாகத்தைப் போக்க, ஆந்திராவிடமும், தஞ்சை விவசாயிகளின் வறுமையைப் போக்க, கர்நாடகாவிடமும், கொங்குமண்டலம் பாலைவனம் ஆகாமல் இருக்க, கேரளாவிடமும், ஆண்டுதோறும் தண்ணீர் கேட்டு போராடுகிறோம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், 51-ஏ பிரிவு, இயற்கை வளங்களை பாதுகாக்க இயற்றப்பட்டன. ஆனால், 1972க்குப் பின், தமிழகத்தை ஆட்சி செய்துவரும் திராவிடக் கட்சிகளின் கண்களில் பட்ட முதல் இடமே, ஏரிகளும், குளங்களும் தான். அதில் தான், சுரண்டி கொழுத்தனர் திராவிட கட்சிகளின் தலைவர்கள்! இன்று, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் என, பல கட்டடங்கள் ஏரிகளை அழித்து தான் கட்டப்பட்டுள்ளன; ஏன், சில நீதிமன்ற கட்டடங்கள் கூட, ஏரியை அழித்து தான் கட்டப்பட்டுள்ளன! முன்னர், நம் நாட்டின் மீது படையெடுத்த அந்நியர்களால், நகரங்கள், கோவில்கள், சிற்பங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், எப்படிப்பட்ட கொடுங்கோலனாலும் ஏரிகளோ, குளங்களோ அழிக்கப்பட்டதாக சரித்திரம் உண்டா? அதை, சுதந்திர இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் செய்கின்றனர்; நாம் வேடிக்கை பார்க்கிறோம்! நம் முன்னோர், வீறுநடை போட்டு பாயும், காட்டாற்று வெள்ளத்தின் போக்கை அறிந்து, அது செல்லும் வழி நெடுகிலும், ஏரிகளையும், குளங்களையும், ஆங்காங்கே ஏற்படுத்தி, வெள்ளத்தின் கோபத்தை குறைத்தனர். அதனால் தான், மூன்று மாதங்கள் தொடர் மழை பெய்தாலும், எந்த நகரமும், கிராமமும் கடல் போல் காட்சி அளிக்கவில்லை.அந்த ஏரிகளையும், குளங்களையும் அழித்தால், சென்னை, கடலுார் கதி தான் தமிழகம் எங்கும்!கோதாவரி, கிருஷ்ணா போன்ற மிகப்பெரிய நதிகள் உள்ள ஆந்திராவில், எவரும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம், மணலை அள்ள முடியாது. அதேபோல், 45 ஆறுகள் கரை புரண்டு ஓடும் கேரளாவிலும், ஒரு பிடி மணலை அள்ள முடியாது. ஆனால் இங்கு, அரசே ராட்சத இயந்திரங்கள் மூலம், ஆறுகளை, 'படுகொலை' செய்கிறதே! கர்நாடகா அரசு, 11.20 லட்சம் ஏக்கரில் இருந்த தன் பாசன விவசாயப் பரப்பை, 21.71 லட்சம் ஏக்கராக உயர்த்தியுள்ளது. 28 லட்சம் ஏக்கராக இருந்த நம் பாசன பரப்பை, இப்போது, 21 லட்சமாக சுருக்கி விட்டோம். ஓட்டு போட்டதுடன் கடமை முடிந்ததென, கோபத்தை மூட்டைக் கட்டும் தமிழர்களே... தமிழகத்தை காப்பாற்ற கோபப்படுங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...