Saturday, February 16, 2019

நாடாளுமன்ற தேர்தல்... கூட்டணிகள்... ??? நமது பார்வையில் .... பகுதி - 07.

வேலி தாண்ட காத்திருக்கும் வெள்ளாடுகள்.. விடுதலை சிறுத்தைகள்...
••••••••••••••••••••••••••••••••••••••••••••••
நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 4 முனைப்போட்டிக்கு வாய்ப்புள்ளதால், கூட்டணி அமைப்பதில் தி.மு.க., அ.தி.மு.க தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், எதிர்க்கட்சிகள் பிரமாண்ட வியூகம் அமைத்து செயல்படுகின்றன. இந்த தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தின் பிரதான கட்சிகள் அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவை கூட்டணி அமைப்பதில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் தேசிய கட்சிகள் பலமில்லாமல் இருப்பதால், மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளன. அ.தி.மு.க., பா.ஜ.க தலைமையில் ஒரு அணியும், தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.
இதேபோல் டி.டி.வி தினகரன் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதாவது அதிமுக.. திமுக... கூட்டணி யில் நிராகரிக்கப்பட்ட
சில கட்சிகளுக்கு... வாட்டம் பார்த்து வலைவீசி வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனித்து தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் 4 முனைப்போட்டி உருவாகும் என தெரிகிறது.
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில்,
1.பா.ஜ.க.,
2.பா.ம.க.,
3.தே.மு.தி.க.,
4.புதிய தமிழகம்,
5.கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,
6.இந்திய ஜனநாயக கட்சி,
7. புதிய நீதிக்கட்சி ஆகிய கட்டுரைகளும்...
தி.மு.க தலைமையிலான கூட்டணியில்
1.காங்கிரஸ்,
2.ம.தி.மு.க.,
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
4.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
5.விடுதலை சிறுத்தைகள் கட்சி,
6.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
7.மனித நேய மக்கள் கட்சி ஆகியவையும் இடம்பெறும் என தெரிகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு தலைமை தாங்கும், அ.தி.மு.க., தி.மு.க ஆகிய 2 கட்சிகளும் குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் தங்களது கூட்டணிகளில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் உத்வேகம் காட்டுகின்றன. ஆனாலும், 2 கட்சிகளுக்குமே அவை வகிக்கும் கூட்டணிகளில் அதிகபட்சமாக தலா 8 தொகுதிகளே ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க. திருச்சி, ஈரோடு, விருதுநகர், தென்காசி ஆகிய 4 தொகுதிகளை கேட்கிறது. ஆனால், தி.மு.க. தரப்பில் இன்னும் உறுதியான பதில் அளிக்கப்படவில்லை. இதனால், ம.தி.மு.க. தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திருச்சி தொகுதிக்கு வைகோவும், திருநாவுக்கரசரும் குறி வைப்பதால், குழப்பமான நிலை நிலவுகிறது. இந்த கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், வழங்கப்படும் தொகுதிகளை ஏற்கும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளை தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. மனிதநேய மக்கள் கட்சி ராமநாதபுரம், வேலூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றை கேட்கிறது. இதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒரு தொகுதி வழங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற பல சூழல்களால் தி.மு.க கூட்டணி இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை.
இதேநிலைமை தான் அ.தி.மு.க கூட்டணியில் நீடிக்கிறது. பா.ஜ.கவுக்கு 8
, பா.ம.கவுக்கு 4, தே.மு.தி.கவுக்கு 2 தொகுதியும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. பா.ம.க, தே.மு.தி.க ஆகிய இரு கட்சிகளும் இதற்கு இசைவு தெரிவிக்காமல், கூடுதல் தொகுதி கேட்டு வருவதால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக உடன்பாடு எட்டவில்லை.
அமெரிக்கா சென்றுள்ள தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்பிய பிறகு இறுதி முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியையும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருப்பூர் தொகுதியையும் கேட்டு வருகிறது. ஆனால், இன்னும் அது இறுதி செய்யப்படவில்லை.
தொகுதி பிரிப்பதில், நீடிக்கும் இழுபறியால், அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் தங்களது தேர்தல் கூட்டணியை இறுதி செய்யவில்லை. நாளை முதல் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள இந்த இரு கட்சிகளும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணியை அறிவிக்கவும் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் திமுகவுடன் தோழமைக் கட்சியாக இருந்த விடுதலை சிறுத்தைகள், அக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தினகரன் கும்பலால் பரப்பப்படுகிறது..
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளை சேர்ப்பதற்கு, திமுகவின் மூத்த நிர்வாகிகளும், வட மாவட்ட நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன.
இந் நிலையில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்பில்லை என்று திருமாவளவன் தொடர்ந்து சொல்லி வந்தாலும், அதுகுறித்து திமுக தரப்பில்
எந்த பதிலும் அளிக்கப்பட வில்லை.
இதற்கிடையில் திருமாவின் மனசாட்சி என்று சொல்லப்படும் வன்னியரசு, அவரது ட்விட்டர் பக்கத்தில், திமுக கூட்டணி குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில் மற்றவர்களை மதிக்காமல், தன் வலிமை உணராமல் இருப்பவர்கள் கெட்டுத் தொலைவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதேபோல், திருமாவளவனும் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று நான் உத்தரவாதம் தரமுடியாது என்று கூறியிருந்தார்.
இந்தப் பேட்டி ஸ்டாலின் தரப்புக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்ததாகவும், இவரது பேட்டியால் திமுகவுக்கு வாக்களிக்க சிறுபான்மையினர் தயக்கம் காட்டும் மனநிலைக்கு வருவார்கள் என்றும், உயிருள்ளவரை பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று அடிக்கடி சொல்லி வரும் டிடிவி தினகரன் பக்கம் சிறுபானமையினர் வாக்குகள் சாய்ந்துவிடும் நிலை ஏற்படும் என்று திமுக தரப்பில் கருதுவதாகவும்....
இந் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவன் முடிவு செய்துவிட்டதாகவும், அதற்கு மாற்றாக டிடிவி தினகரன் அணியில் சேர்வதற்கு அவர் தயாராகிவிட்டதாகவும் தற்போது பரபரப்பாக தினகரன் அணியினர் தகவல் பரப்புகிறார்கள்....
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அனைத்து பொய்களும்... உண்மை களும்... வெளிச்சமாகிவிடும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...