Monday, February 18, 2019

ரஜினி அவர்களின் அறிவிப்பும் , முடிவும் எப்படியானது?

1) "பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு". ஏன் ரஜினி அவர்கள் நேரடியாக சட்டமன்றத் தேர்தல் தான் சரி என்று நினைக்கிறார்?
முதலில் அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த அன்றே சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என்று தெளிவாகக் கூறிவிட்டார். அது ஏன் என்றால்
2008ல் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை மதிப்பிற்குரிய சிரஞ்சீவி அவர்கள் அறிவித்துத் தேர்தலை சந்திக்கத்தயார் ஆனார். 2009ல் மாநிலத் தேர்தலோடு பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்றது. கட்சி அறிவித்த நாள் ஆகஸ்ட் 26,2008. அறிவிப்புக்கு அடுத்த மாதம் மாநில மக்கள் மத்தியில் எடுக்கபட்ட கருத்துகணிப்புகள், சிரஞ்சீவி அவர்களின் கட்சி சுமார் 20 முதல் 25 பாராளுமன்றத் தொகுதிகளையும், 180 முதல் 190 சட்டமன்றத்தொகுதிகளையும் கைப்பற்றுவார்கள் என்ற அறிவிப்பை வெளிப்படுத்தியது.
1982 மார்ச் மாதம் மதிப்பிற்குரிய என்.டி.ஆர் அவர்கள் தெலுங்கு தேசம் கட்சியை அறிவித்த போதும் இதே அதிர்வலைகளைத்தான் பெற்றார். மக்களிடம் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை பெறுவார். காங்கிரஸ் வீழ்ச்சியை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கணிப்புப்படியே அந்த வருடத்தின் இறுதியில் நடந்த மாநில தேர்தலில் வெற்றி பெற்று என்.டி.ஆர் அவர்கள் 1983ம் ஆண்டு ஜனவரியில் ஆட்சியைப் பிடித்தார்.
ஆனால் சிரஞ்சீவி அவர்களுக்கு அது போல் அமையவில்லை. 2009 தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்குக் கிடைத்த வாக்குகள் 18%. அத்துடன் அவர் 18 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார். இது ஒவ்வொரு அரசியல்வாதிக்கும், முக்கியமாக திரைத்துறையில் இருந்து அரசியல் உள்ளே நுழைபவர்களுக்கும் முக்கிய பாடமாக அமைந்தது. அதாவது உறுதியாக வெற்றி என்ற கருத்து கணிப்புகள் கூற, மக்கள் மத்தியில் மிக பெரிய அதிர்வு இருந்த நிலையில், எதனால் தேர்தலில் வாக்குகளாக மாற்ற முடியவில்லை? காரணங்கள்
1.கட்சியும் கட்டமைப்பும். 2.சிரஞ்சீவி என்ற பிரபலம் தாண்டி கட்சிக்கு போதுமான வலுபெருக்கும் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்கள் இல்லாதது. 3.குறைந்த கால இடைவெளியில் தேர்தலை சந்திக்க வேண்டும். (மக்களிடம் அந்த வரவேற்பு உள்ளபோதே தேர்தலை சந்தித்து அதை வாக்காக மாற்ற வேண்டும். ஆனால் சிறிது காலம் தள்ளி சென்றது) இவை எல்லாம் முக்கிய காரணங்கள் என்றால் இவை எதையும் விட மிக மிக முக்கியமான ஒன்று பாராளுமன்றத் தேர்தலுடன், மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது.
என்.டி.ஆர் அவர்கள் அரசியலில் நுழையும் போது அந்தக் குழப்பம் ஏற்படவில்லை. நேரடியாக மாநில சட்டமன்றத் தேர்தலை மட்டுமே சந்தித்தார். சிரஞ்சீவி அவர்கள் போட்டியிடும் பொழுது பாராளுமன்ற தேர்தலும் அதனுடன் நடைபெற்றதால் , மக்கள் மத்தியில் கூடுதல் குழப்பத்தை உருவாக்கிச் சென்றது.
இதில் உணரவேண்டிய உண்மை இதுவே
"ஒரு மாநில கட்சிக்கு, ஆட்சி மாற்றத்தை கொடுக்க முயற்சிக்கும் கட்சியின் முதல் தேர்தல் மாநில சட்டமன்ற தேர்தலாக இருக்க வேண்டும்" அது தான் அந்தக் கட்சிக்கு ஆரோக்கியமானது என்பதை கடந்தகால அரசியல் ஆய்வுகள் கூறும் உண்மை. தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, நாங்கள் வெளிப்படையான நேர்மையான நிர்வாகத்தை கொடுப்போம் என்று ரஜினி அவர்கள் கூறியிருக்கின்றார். அப்படி இருக்கும் பொழுது அவர்கள் சந்திக்க வேண்டிய முதல் தேர்தல் மாநில முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் சட்டமன்ற தேர்தலாக இருக்க வேண்டுமே அன்றி நாட்டின் பிரதமர் யார் என்ற தேர்தலாக இருக்கக் கூடாது".
அந்த வகையில் ரஜினி அவர்களின் இந்த முடிவு மிகச் சரியானதே. சட்டமன்ற தேர்தலுக்குக் கூடுதலாக சில மாதங்கள் காத்திருப்பதில் தவறே இல்லை. இது புத்திசாலித்தனமான முடிவு தான். இந்திய மக்கள் மற்றும் இந்திய அரசியல் சரியாக புரிந்த எவருக்கும் இது புரியும். (முக்கியமாக ஆந்திரா தமிழகம் இரு மாநில தேர்தல் வரலாறு புரிந்தவருக்கு.)
--------------------------------
2)"வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனது ஆதரவு கிடையாது". என்று கூறியுள்ளாரே?
ஆதரவு கொடுப்பது தான் குழப்பத்தையும், தேவை இல்லாத சிக்கலையும் உருவாக்கும். தேர்தலில் போட்டி இல்லை என்றால் எதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். முழுவதும் விலகி நின்றுவிடுவது தான் அரசியல் நாகரீகம். அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை மக்களையும், தன் கட்சி நிர்வாகிகளையும் பத்திரிக்கையாளர்கள் குழப்பாமல் இருக்க , தேர்தலுக்கு முன்பே இதனைத் தெளிவுப்படுத்தி இருப்பது ஆரோக்கியமான விஷயம்.
--------------------------------------------------------------------
3)"தமிழகத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர் தட்டுப்பாடு. அதற்கு தீர்வு கொடுக்கும் கட்சியை மக்கள் ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டும்". என்று ரஜினி அவர்களின் இந்த அறிவுரை எதனால்?
தமிழகத்தின் தேவைகளில் மிக முக்கியமானது தண்ணீர். ஏறக்குறைய மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நகரங்கள் ஆரம்பித்து கிராமங்கள் வரை, வீடுகள் ஆரம்பித்து விவசாயம் வரை நம்மை மிரட்டும் விஷயம் தண்ணீர். அந்த பிரதான பிரச்சனையைத் தீர்க்க எவரிடம் திட்டமுள்ளது? அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு, ரசிகர்களுக்கு ரஜினி அவர்கள் வழிகாட்டியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்:
இந்த அறிவிப்பு வழியாக, வரும் தேர்தல் பிரச்சாரங்களில் தண்ணீர் பிரச்சனையைப் பற்றி மாநில மத்திய கட்சிகள் பேச வேண்டிய நிர்பந்தத்தை ரஜினி அவர்கள் உருவாக்கியுள்ளார். அப்படி பேசினால் தான் ரஜினி ரசிகர்களின் வாக்கை பெற முடியும். ஆக அரசியல் உள்ளே வராமலேயே அதே நேரம் மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய கட்சிகளுக்குக் கொடுக்கும் அழுத்தமாக இந்த வாசகத்தை இணைத்துள்ளார். இது பாராட்டபட வேண்டிய விசயம்.
ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக இதை செய்துள்ளார் , இது அப்பட்டமான அரசியல் அழுத்தம் கொடுக்கும் வேலை தான் என்றாலும் ஒரு ஆரோக்கியமான அரசியல் என்றே சொல்லலாம்.
(என் மட்டத்தில் இந்த இடத்தில் நான் கூறவேண்டிய தகவல், நரேந்திர மோடி அவர்கள்தான் நதிநீர் இணைப்பு சார்ந்து பேசி வருகிறார். அதற்காக நாடு முழுவதும் பல கட்டப் பணிகளை பல இடங்களில் செய்துள்ளார். தென் இந்தியாவில் 60,000 கோடி செலவீட்டில் கோதாவரி- கிருஷ்ணா - பென்னர் - காவேரி நதிநீர் இணைப்பு அறிவிக்கப்பட்டு தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வழி 1100 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலப்பதை நிறுத்தி, அதை நான்கு மாநிலமும் பயன்படுத்தும் சூழலை உருவாக்க விரும்புகிறார்கள். இதன் மூலம் தமிழகத்திற்கு, முக்கியமாக காவேரி டெல்டா பகுதி மக்களுக்கு கூடுதலாக 200 டி.எம்.சிக்கு மேல் தண்ணீர் கிடைக்கும் என்பது மக்களுக்கு சந்தோசம் தரும் செய்தி. அந்த வகையில் இது பிஜேபி கூட்டணிக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும் சாதகமாக இருக்கிறது.
காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு இது அழுத்தத்தை உருவாக்கும். அவர்களும் தற்பொழுது இதற்கு ஏற்றவாறு தக்க தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டும். 50 ஆண்டுகளாக திமுக கொடுத்து வரும் தேர்தல் வாக்குறுதிகளை யாரும் நம்ப போவது இல்லை என்றாலும் , ரஜினி அவர்களின் அறிவிப்பு ஒரு பெரும் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. அத்துடன் கேரளாவில் கம்யுனிஸ்ட் ஆட்சி. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி. எனவே இது மேலும் அதிக அழுத்தத்தை காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நதிநீர் இணைப்பு சாத்தியம் இல்லை என்று ராகுல் தன் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார். ஆனால் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பிஜேபி அரசின் நோக்கமே நதிநீர் இணைப்பு தான் என்பது கூடுதல் தகவல்.)
வரும் தேர்தலில் பிரச்சாரத்தில் தண்ணீர் பிரச்சனையும் , நதிநீர் இணைப்பும் பிரதானமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் ரஜினி அவர்களின் இந்த அறிக்கையாக தான் இருக்கும்.
-----------------------------------
4)"மத்தியில் நிலையான வழுவான ஆட்சியை அமைக்கக் கூடிய நபர் யார் என்று சிந்தித்து ஆய்வு செய்து வாக்கு செலுத்துங்கள் " என்கிறார்.
நாட்டில் வலுவான அரசு அமைக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விஷயம். இல்லை தொங்கு பாராளுமன்றம் அமைந்து விடும். அது நாட்டிற்கும் நல்லது அல்ல. ஆட்சியாளர்களுக்கும் நல்லது அல்ல. ஆட்சியாளர்களுக்குக் கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்வதே வேலையாகிப் போய்விடும் . இன்னொரு பக்கம் வலுவான முடிவுகளை எடுக்க முடியாது. அந்த வகையில், வரும் தேர்தலில் எவர் இந்த நாட்டை வலிமையாக ஆட்சி செய்வார் என்று சிந்தித்து வாக்களிக்கவும் என்று கேட்டுள்ளார்.
---------------------------------------------------------------------
இறுதியாக :
அனைவரும் கட்டாயம் வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதை ஒரு ஜனநாயக நாட்டின் மக்கள் அனைவரும் செய்ய வேண்டியக் கடமையாகக் கொள்ளவேண்டும். எவர் ஆட்சிக்கு வந்தால் என்ன ஓட்டு போட்டு என்ன நடக்கப் போகிறது என்ற சிந்தனை தவறானது. கட்டாயம் உனக்கு இருக்கும் கடமையை செய்தே ஆகவேண்டும். அதில் மிக முக்கியமான கடமை வாக்களிப்பது. அதை அனைவரும் செய்யுங்கள் என்று கேட்டுகொண்டிருக்கின்றார்.
தன் களம் எது , அதற்கான நேரம் எது , அதற்கு வேண்டிய பொறுமை அனைத்தும் தெளிவாக கணக்கிட்டே செயல்படுகிறார் ரஜினி அவர்கள்.
ரஜினி அவர்கள் இந்த அறிக்கையில் ஒரு அரசியல்வாதியாக , ஒரு பொறுப்பான பிரபலமாக மட்டும் அல்லாது ஒரு குடிமகனாகவும் தனது அறிக்கையில் தெளிவாக வெளியிட்டுள்ளார். தண்ணீர் பிரச்சனையை இணைத்து அறிக்கை வெளியிட்டதற்காக ரஜினி அவர்களுக்கு மிக்க நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...