தி.மு.க, கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு, நேற்று அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியுடன் சேர்த்து, 10 லோக்சபா தொகுதிகள், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், த.மா.கா., உள்ளிட்ட, கூடுதல் கட்சிகளை சேர்ப்பதிலும், ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், முகுல் வாஸ்னிக், பொதுச் செயலர், வேணுகோபால் ஆகியோர், நேற்று மாலை, 3:30 மணிக்கு, டில்லியில்இருந்து சென்னை வந்தனர். அவர்களை, கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் செயலர், சஞ்சய் தத் மற்றும் செயல் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் வரவேற்றனர்.
ஆலோசனை
பின், சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில், காங்கிரசார் தனியாக ஆலோசித்தனர். அப்போது, கோஷ்டி தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலர், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிளை, தி.மு.க.,விடம் கேட்கும்படி வலியுறுத்தினர். பின், டில்லியில் இருந்து எடுத்து வரப்பட்ட, 18 தொகுதிகளின் பட்டியல் குறித்து, கோஷ்டி தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது.
விவாதம்
இந்த பட்டியலில், அரக்கோணம், விழுப்புரம், தென் சென்னை, சிவகங்கை, திருச்சி, ஈரோடு, சேலம், ஆரணி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, ராமநாதபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட, 18 தொகுதிகள் இடம்பெற்று இருந்தன.
இந்நிலையில், மாலை, 6:30 மணியளவில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஸ்டாலின் வீட்டில், தி.மு.க., தொகுதி பங்கீடு குழு கூட்டம் துவங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில், ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் குறித்து, விரிவாக விவாதிக்கப் பட்டது.
மேலும், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், த.மா.கா., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ப்பது பற்றியும், அக்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், த.மா.கா., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ப்பது பற்றியும், அக்கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.
உடன்பாடு
அதன்பின், இரவு, 8:05 மணிக்கு, சென்னை, அறிவாலயத்திற்கு, ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு,பொன்முடி உள்ளிட்டோர் வந்தனர். காங்கிரஸ் தலைவர்கள், முகுல் வாஸ்னிக், வேணுகோபால், சஞ்சய் தத், கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோரும் வந்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே, தொகுதி பங்கீடு பேச்சு நடந்தது. இதில், புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகளை, காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய முடிவானது. அதற்கான ஒப்பந்தத்தில், ஸ்டாலினும், அழகிரியும் கையெழுத்திட்டனர்.
தி.மு.க., - காங்., கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:
எத்தனை தொகுதிகள் என்பது, தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில கட்சி களுடன், எண்ணிக்கை அடிப்படையில் பேச வேண்டி உள்ளது. அப்பணி முடிந்த பின்,தொகுதிகள் எவை என்பது, முடிவு செய்யப்படும். தொகுதிகளை ஆய்வு செய்ய, தி.மு.க.,வில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு, கூட்டணி கட்சிகளின் குழுக்களுடன் பேசி, தொகுதிகளை முடிவு செய்யும். நாங்கள், ஓட்டலில் ரகசியமாக கூடாமல், தி.மு.க., தலைமை அலுவலகத்தில், வெளிப்படையாகக் கூடி, முடிவெடுத்துள்ளோம்.இன்று முதல், எங்களது தோழமை கட்சிகளுடன் பேசஉள்ளோம். தே.மு.தி.க.,வுடன், இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த தொகுதிகள் போக, மீதி உள்ளவற்றில், தி.மு.க., போட்டியிடும்.
சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து, முடிவு செய்வோம். அ.தி.மு.க., கூட்டணியை, மக்கள் நலக் கூட்டணி என, அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது, பண நல கூட்டணி என, மக்கள் கூறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
காங்., திருப்தி
''தொகுதி பங்கீடு திருப்தியாக உள்ளது; தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அனைத்து தொகுதிகளிலும், காங்., - தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்,'' என, காங்., பொதுச் செயலர், வேணுகோபால் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், அ.தி.மு.க., அரசால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். தி.மு.க., - காங்., நீண்ட கால நண்பர்கள். தொகுதி பங்கீடு திருப்தியாக உள்ளது. நாங்கள், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment