Monday, August 19, 2019

பிரம்மபுரீஸ்வரர்_கோவில்_சிறப்புகள்.


குறைகளே இல்லாமல் வாழ்பவர்கள் என்று இவ்வுலகில் எவரையுமே நாம் கூற இயலாது. செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் கூட பேதமில்லாமல் குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அப்படி மனிதர்களின் குறைகள் மட்டுமல்லாமல் படைப்பு கடவுளான பிரம்மாவின் குறையையே நீக்கிய ஒரு கோவில் தான் “பிரம்மபுரீஸ்வரர் கோவில்”. மிக ஆற்றல் மிக்க அக்கோயிலை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
இது மிக பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் இறைவன் “பிரம்மபுரீஸ்வரர்” என்றும் அம்பாள் “பிரம்மநாயகி” எனவும் அழைக்கப்படுகிறார்கள். ஐந்து தலை கொண்ட பிரம்மனின் ஒரு தலையை கொய்து, அவரின் கர்வத்தை அடக்கினார் சிவபெருமான். தனது தவறை உணர்ந்து சிவனை சரணடைந்த பிரம்மனை, இந்த தலத்தில் 12 லிங்கங்களை வைத்து வழிபட்டால் பிரம்மன் பழைய நிலையை அடைய முடியும் என கூறி அருளினார் சிவபெருமான். அதன் படியே செய்து தன் பழைய சக்திகளை மீண்டும் அடைந்தார் பிரம்ம தேவன்.
அனைத்தையும் படைக்கும் கடவுளான பிரம்மாவின் தலையெழுத்தையே மாற்றியதால் இத்தல இறைவனான சிவபெருமானை “பிரம்மபுரீஸ்வர்” என அழைக்கலாயினர். இக்கோவிலில் பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கிருக்கும் பிரம்மதேவன் வழிபட்ட ஷோதஷ லிங்கம் 16 கோணங்களை கொண்டதாக இருக்கிறது. யோகக்கலையை உலகிற்கு கற்றுத்தந்தவரான “பதஞ்சலி முனிவர்” சித்தியடைய வழிபட்ட கோவில்களில் இதுவும் ஒன்று. இன்றும் இத்தலத்தில் பதஞ்சலி முனிவர் சூட்சமமாக வாழ்ந்து யோகசூத்திரங்களை எழுதிக்கொண்டிருப்பதாகவும், ஆன்மீக நூல்கள் எழுதுபவர்களை ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார்கள். இங்கிருக்கும் நரசிம்ம அவதார சிலை மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்குள் ஒருவர் வந்தாலே அவருக்கு அனைத்து நன்மைகளும் ஏற்பட தொடங்கும். இங்கு முதலில் பிரம்மா, இரண்டாவதாக விஷ்ணு மூன்றாவதாக சிவன் என்கிற முறையில் வணங்குகிறார்கள். பிரம்மனுக்கு சிலை மற்றும் வழிபாடு இருக்கும் கோவில்களில் இதுவும் ஒன்று. வியாழக்கிழமைகளில் பிரம்மன் மஞ்சளால் அலங்காரம் செய்யப்படுகிறார். நவகிரகங்களில் குரு பகவான் பிரம்ம தேவனின் மற்றொரு அவதாரமாக கருதப்படுகிறார். இங்கு வந்து வழிபாடு செய்பவர்களில், பாபம் செய்பவர்களின் தன்மையை பொறுத்து அவர்களுக்கு பிரம்ம தேவன் அருள்புரிவதாக கூறுகிறார்கள்.
இங்கு வேண்டும் கர்பிணிகளுக்கு சுக பிரசவங்கள் ஏற்படுகின்றன.குழந்தை பேறில்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கின்றன. கல்வியில் பின்தங்கும் மாணவர்கள் இங்கு வழிபட்ட பின்பு கல்வியில் சிறக்கிறார்கள், வீண் செலவீனங்கள் ஏற்படுவது குறைகிறது. அதே நேரத்தில் தீய நோக்கங்களை கொண்டு மனதில் வேண்டுபவர்களுக்கு எதிர்மறையான பலன் ஏற்படும் என கூறப்படுகிறது. இங்கிருக்கும் பிரம்மதேவனை வழிபட 36 தீபங்கள் ஏற்றி, 108 புளியோதரை சாத உருண்டைகளை நிவேதித்து வழிபடுகின்றனர். அதன் பின்பு இக்கோவிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை நிறைவு செய்கின்றனர். இக்கோவிலிலிருக்கும் பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களை வழிபடுவதால் 12 ஜோதிர்லிங்கங்களை வழிபட்ட பலனை ஒருவர் பெறுகிறார். இந்த கோவிலில் இருக்கும் நந்தியை நம் கைகளால் தொடும் போது நிஜமான ஒரு காளையை தொடுவது போன்ற ஒரு உணர்வை தருவதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.
#கோவில்_அமைவிடம்
அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருப்பட்டூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு திருச்சியிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...