மாஜிஸ்திரேட்டுகளுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்!
சென்னை: 'ஒரு கைதியை, போலீஸ் காவலுக்கு அனுப்ப, உரிய முகாந்திரம் இருப்பதில் திருப்தி அடைந்தால் மட்டுமே, அதற்கானஉத்தரவை, மாஜிஸ்திரேட் பிறப்பிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
முக்கிய அம்சங்கள்
முக்கிய அம்சங்கள்
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, குற்றவியல் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளை, சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. இந்த விதிகள், 2020 ஜன., 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.
- ஒரு வழக்கில், முதல் தகவல் அறிக்கை, கைது, நீதிமன்ற காவல், போலீஸ் காவல், 'சம்மன்' நடைமுறை, அடையாள அணிவகுப்பு என, ஒவ்வொரு விஷயத்திலும், குற்றவியல் நீதிமன்றம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், விதிகளில் கூறப்பட்டுள்ளன.
விதிகளில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
- ஒரு வழக்கில், எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை, போலீசாரால் பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும்.
- அதை பெற்ற உடன், முதல் தகவல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், நீதிபதியின் முழு கையெழுத்து இடம் பெற வேண்டும்.
- எப்.ஐ.ஆர்., பெற்ற தேதி, நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.எப்.ஐ.ஆர்., கொண்டு வந்தவரின் பெயரையும், பதிவு செய்ய வேண்டும்.
- தபாலில் பெற்றிருந்தால், தபால் உறையில்,'இனிஷியல்' இட்டு, அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
- பிரேத பரிசோதனை அறிக்கையின், ஒவ்வொரு பக்கத்திலும், இனிஷியல் மற்றும் தேதி இட வேண்டும்.
- முதன் முதலாக கைது செய்யப்படுபவரை, நேரில் ஆஜர்படுத்தாமல், அவரை காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிடக் கூடாது.
- ஒருவரை காவலில் வைக்க உத்தரவிடும் போது, அவரது உடலில் காயம் ஏதும் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். காயம் இருந்தால், அதை உத்தரவில் பதிவு செய்ய வேண்டும்.
- காவல் நீட்டிப்பை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக மேற்கொள்ளலாம்.
- மருத்துவமனையில் கைதி அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்பதற்கு, தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ ஆவணங்களில் திருப்தி அடைந்தால், மருத்துவமனைக்கு, மாஜிஸ்திரேட் நேரில் சென்று, காவல்நீட்டிப்பு செய்யலாம்.
- கைது செய்யப்பட்டவரை காவலில் வைப்பதற்காக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, கைது, 'மெமோ' நகலை, அவருக்கு வழங்க வேண்டும்.
- வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள வசதியில்லை என்றால், சட்ட உதவி பெற உரிமை உள்ளது என்ற தகவலை, அவருக்கு, மாஜிஸ்திரேட்தெரிவிக்க வேண்டும்.
- போலீஸ் காவலுக்கு கைதியை அனுப்ப, உரிய முகாந்திரம் உள்ளது என்பதில், திருப்தி அடைந்தால் தான், அதற்கான உத்தரவை, மாஜிஸ்திரேட் பிறப்பிக்க வேண்டும்.
- போலீஸ் காவல் கோரும் மனுவில், விசாரணையின் சுருக்கம், மேற்கொண்டு தகவல் கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு பற்றி குறிப்பிட வேண்டும்.
- இந்த மனுவை பரிசீலித்த பின், மாஜிஸ்திரேட் முடிவு செய்ய வேண்டும்.
- போலீஸ் காவலில் ஒப்படைக்கும் முன், உடல் ரீதியாக, மன ரீதியாக, நல்ல நிலையில் கைதி உள்ளார் என்பதை நேரில் பார்த்து, திருப்தி அடைய வேண்டும்.
- நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்போது, போலீஸ் காவலில்குறுக்கீடு ஏதும் இருந்ததா என்பதை, கைதியிடம் கேட்க வேண்டும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
- மூன்றாம் பாலினத்தவர் கைது செய்யப்பட்டு, ஆஜர்படுத்தப்படும்போது, அவரை மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.
- மருத்துவ அறிக்கை அடிப்படையில், ஆண்கள் சிறையில் அடைப்பதா; மகளிர் சிறையில் அடைப்பதா என,உத்தரவிட வேண்டும்.
- சக கைதிகளால், எந்த அசவுகரியம் ஏற்படாத வகையில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
- மாவட்ட மருத்துவஅதிகாரியின் அறிக்கை வரும் வரை, அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில், உரிய பாதுகாப்புடன் சேர்க்க உத்தரவிட வேண்டும்.
- ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தையுடன், பெண் கைது செய்யப்பட்டால், குழந்தையை, அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் ஒப்படைக்க முயற்சிக்க வேண்டும்.
- உறவினர்கள் இல்லை என்றால், காவல் உத்தரவில், குழந்தை பற்றி குறிப்பிட வேண்டும்.
- ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தை என்றால், உறவினர் அல்லது குழந்தை நல குழுவிடம், ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு, விதிகளில் கூறப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment