Tuesday, January 14, 2020

ஐயப்பன் திரு ஆபரணம்.

ஐயப்பன் திரு ஆபரணம்
15-1-2020 மகர ஜோதி தரிசனம்

சபரிமலையில் வீற்றிருக்கு ஐயப்பனின் பிறப்பு, வளர்ப்பு குறித்து பல்வேறு புராணங்களும், கதைகளும் கூறப்படுகின்றன. இருப்பினும் ஐயப்பன், சிவபெருமானுக்கும், மோகினியாக உருவெடுத்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர் என்றும், கழுத்தில் மணியோடு பம்பை நதிக்கரையில் விடப்பட்ட ஐயப்பனை, பந்தளத்தின் மகாராஜா ராஜசேகரன் கண்டெடுத்து, அரண்மனைக்குக் கொண்டு வந்து தன்னுடைய வாரிசாக ஆக்கிக்கொண்டார் என்பதே பொதுவாக அறியப்படும் ஐயப்பனின் வரலாறாக இருக்கிறது.

பந்தளத்தில் வளர்ந்து வந்த ஐயப்பனுக்கு 12 வயதானபோது, சிலரது சதியால் காட்டிற்கு சென்று புலியின் பால் கொண்டுவரும் சூழ்நிலை உருவானது. தெய்வ பிறப்பின் ரகசியமே, அந்த காட்டிற்குச் சென்று அங்கு வசிக்கும் மகிஷியை வதம் செய்வதுதானே. ஐயப்பனும் காட்டிற்குச் சென்று, மகிஷியை வதம் செய்து, புலியோடு பந்தள அரண்மனை நோக்கி வந்தார்.

அதைக் கண்டதும்தான், அவர் ஒரு தெய்வப்பிறவி என்பதை அனைவரும் உணர்ந்தனர். இதையடுத்து ஐயப்பன், தன் அவதார நோக்கம் நிறைவடைந்ததாகவும், தான் வசிக்கப்போகும் இடத்தில் வந்து அனைவரும் தன்னை தரிசிக்கும்படியும் கூறினார். மேலும் ஆண்டிற்கு ஒரு முறை ஜோதி வடிவில் அனைவருக்கும் காட்சி தருவேன் என்றும் அருள்புரிந்தார். அதன்படி இன்றளவும் ஐயப்பன் ஜோதி வடிவில் தோன்றுவதை, சபரிமலை யில் தரிசிக்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந் தேதி சபரிமலையில் எழுந்தருளியுள்ள சுவாமி ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலை வேளையில் தெரியும், மகர ஜோதி தரிசனமும் மிக மிக பிரசித்திப் பெற்றதாகும்.

சுவாமி ஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு, அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்படும். பந்தளத்தில் அச்சன்கோவில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் ‘வலிய கோயிக்கால்’ என்றழைக்கப்படும் கோவிலுக்கு அருகில் உள்ள பந்தளராஜாவின் அரண்மனையில் இருந்து திருஆபரணம் கால்நடையாகவே சபரி மலைக்கு கொண்டு செல்லப்படும்.

மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும், ஐயப்பன் வளர்ந்த இடமான பந்தளத்திற்கு வந்து, அங்குள்ள கோவிலில் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துவிட்டுச் செல்வார்கள்.

கார்த்திகை முதல் நாளில் இருந்து இரண்டு மாத காலத்திற்கு, ஐயப்பனுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் திரு ஆபரணம், மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வலிய கோயிக்கால் சாஸ்தா கோவிலில் இருந்து சபரிமலையை நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருஆபரணத்தை பந்தளராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலைமையில் கொண்டு சொல்வார்கள்.

பந்தளம் கோவிலில் இருந்து திருஆபரண ஊர்வலம் புறப்படும்போது, வானத்தில் அன்று மட்டும் ஒரு பருந்து தோன்றும். திருஆபரணம் கொண்டு செல்லப்படும் ஊர்வலப் பாதையில் வானில் அந்தப் பருந்து தொடர்ந்து பறந்து வருவது இன்றுவரை நடந்துவரும் ஓர் அதிசய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...