Wednesday, March 18, 2020

ரூ.3.00! தமிழகத்தில் முட்டை விலை குறைந்தது.

'கொரோனா' வைரஸ் தாக்கும் என்ற வதந்தியால், தமிழகத்தில், கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவதை, மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், முட்டை விலை, 3 ரூபாயாகவும், கிலோ கோழி இறைச்சி, 60 ரூபாயாகவும் சரிவடைந்து, கோழி பண்ணையாளர்களுக்கு, 1,350 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்தைத் தெளிய வைக்கும் வகையில், 'கோழி இறைச்சி சாப்பிடுவதால் எந்த பிரச்னையும் வராது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம்; நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில், 3,500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. அங்கிருந்து, தினமும் சராசரியாக, 30 லட்சம் கிலோ, கறிக்கோழிகள் விற்பனைக்காக, உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், 900 பண்ணைகளில், ஐந்து கோடி கோழிகள் வாயிலாக, தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

வதந்தி


பல்லடம், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து, பிற மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு தினமும், லாரிகளில், கறிக்கோழிகளும், முட்டை களும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.கொரோனா வைரஸ், இந்தியாவில், வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சில விஷமிகள், கறிக்கோழி வாயிலாக, கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் பரவுவதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதனால், பலர், கோழி இறைச்சி வாங்குவதை தவிர்த்து உள்ளனர்.

ஓட்டல்களிலும், கோழி இறைச்சியில் செய்யப்படும், 'சிக்கன் 65, சிக்கன் ரைஸ்' உள்ளிட்ட உணவு வகைகளின் விற்பனை முடங்கியுள்ளது. இதையடுத்து, மொத்த விலை சந்தையில், பிப்ர வரியில், கிலோ, 80 ரூபாய்க்கு மேல் விற்பனையான கறிக்கோழி விலை, தற்போது, 30 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளது.

விழிப்புணர்வு
சில்லரை விற்பனையில், கிலோ, 160 ரூபாய் வரை விற்கப்பட்ட, தோல் உரிக்கப்படாத கோழி இறைச்சி கிலோ, தற்போது, 60 முதல், 70 ரூபாய் என, குறைந்து உள்ளது. மேலும், 180 ரூபாய் வரை விற்கப்பட்ட தோல் உரிக்கப்பட்ட கோழி இறைச்சி விலை, தற்போது, 80 முதல், 90 ரூபாய் என, சரிவடைந்துள்ளது.இதனால், பண்ணைகளில், பல லட்சம் கிலோ கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படாமல் உள்ளன. அவற்றை பாதுகாக்க முடியாமல், பண்ணை உரிமையாளர்கள், உள்ளூர் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

முட்டைகள் வாங்குவதையும், மக்கள் தவிர்த்து வருவதால், பண்ணைகளில், 20 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேங்கியுள்ளன. அவற்றையும் பாதுகாக்க முடியாமல், வியாபாரிகள், மண்ணில் புதைத்து வருகின்றனர்.'மக்களிடம் கோழி இறைச்சி சாப்பிட்டால் எந்த பாதிப்பும் வராது' என, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, '1 கிலோ கோழி இறைச்சி வாங்கினால், அரை கிலோ இலவசம் அல்லது 10 முட்டைகள் இலவசம்' என, வியாபாரிகள், பல சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

அப்படி இருந்தும், யாரும், கோழி இறைச்சி, முட்டை வாங்க முன்வரவில்லை. இதனால், சில்லரை விற்பனையில், இம்மாத துவக்கத்தில், 4.50 ரூபாய்க்கு விற்பனையான முட்டை விலை, தற்போது, 3 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துஉள்ளது.

முடக்கம்
கறிக்கோழி மற்றும் முட்டை விற்பனை முடங்கியுள்ளதால், கோழி பண்ணை உரிமையாளர் களுக்கு, 10 நாட்களில் மட்டும், 1,350 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. பலர் கோழி பண்ணைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, நாமக்கல் மண்டலத் தலைவர் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின், நாமக்கல் மண்டல முட்டை விலை நிர்ணய ஆலோசனைக் குழு உறுப்பினர்களின், அவசர கூட்டம், 16ல், நடத்தப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, 2.65 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட முட்டை கொள்முதல் விலையை, 70 காசு குறைத்து, 1.95 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. வங்கிகளை அணுகி, கடன் திருப்பி செலுத்துவதற்கான காலக் கெடுவை, ஓராண்டுக்கு நீட்டிக்க கேட்டுக் கொள்வது; புதிய, 'வொர்க்கிங் கேபிடல்' கேட்டுப் பெறுவது என, தீர்மானிக்கப்பட்டது.

முட்டை மற்றும் இறைச்சி மிகவும் பாதுகாப்பானது; இது குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் தெளிவு பெறும் வகையில், பல்வேறு வகையில், விளம்பரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை மொத்த கோழி வியாபாரிகள் சங்க பொது செயலர் ஞான செல்வம் கூறிய தாவது:கோழி இறைச்சி சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது; கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க தேவையான சத்து கோழி இறைச்சியில் இருக்கிறது என, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், யாரும் வாங்க வரவில்லை. முட்டை விலை குறைந்தும், விற்பனையாகாமல் உள்ளது.

இதனால், கறிக்கோழி உற்பத்தி மற்றும் கோழி இறைச்சி விற்பனை வாயிலாக, நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள, ஒரு கோடி பேருக்கு, வேலை இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மக்களின் மனநிலை மாறினால் மட்டும், கோழி இறைச்சி விற்பனையில், இயல்பு நிலை திரும்பும். இவ்வாறு அவர் கூறினார்.

வதந்தியை நம்பாதீர்


இதனிடையே, 'சிக்கன் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு வருமா?' என்று, நாமக்கல் எம்.எல்.ஏ., பாஸ்கர், சட்டசபையில், நேற்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய, கால்நடைத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன், ''சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவதால், கொரோனா பாதிப்பு வராது; வதந்தியை நம்ப வேண்டாம்; கோழி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...