Friday, March 6, 2020

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் வாழ்க்கை வரலாறு.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் வாழ்க்கை வரலாறு
க.அன்பழகன் - முக கருணாநிதி
















தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.

மறைந்த க. அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19ம் தேதி, 1922 ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் ராமையா.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தமிழ் (ஹானர்ஸ்) படித்தார். 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.

1945-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி வெற்றிச்செல்வி என்பவரை தனது இல்லற வாழ்க்கை துணையாக ஏற்றார். இவர்களுக்கு அன்புசெல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வெற்றிச்செல்வி மறைவிற்கு பிறகு சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி எனும் மகளும் உள்ளனர்.

திராவிட சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். இவரை அண்ணா 'பேராசிரியர் தம்பி' என அழைத்தார். அன்பழகன், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார். 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார். 1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.

1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1989-1991, 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

1977-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவினார். அவரது அரசியல் வாழ்வில் ஒரு முறை மேல் சபை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராக 8 முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளார்.

எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும், நூல்களையும் க.அன்பழகன் எழுதி உள்ளார். இன-மொழி வாழ்வுரிமை போர், உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழின காவலர் கலைஞர், தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் உள்பட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்.

இவரது மறைவு தி.மு.க., தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...