Sunday, June 14, 2020

பொதுமக்களின் நலனை விட அரசியல் சித்து விளையாட்டு நடைபெறுகிறது.ஸ்ரண்சிங் போன்ற ஆட்சியர், கமிஷனர் வரவேண்டும்.

கள்ளிக்குடி மார்க்கெட் வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்ட 288 கடைகளின் அனுமதி ரத்து: சாவியை உடனடியாக ஒப்படைக்குமாறு உத்தரவு.
திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடைகளைப் பெற்று 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்ததால் வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்ட 288 கடைகளின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிரந்தரக் கடைகள், தரைக்கடைகள், மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் என சுமார் 3,000 கடைகளுக்கு மேல் செயல்படுகின்றன. இங்கு வந்து செல்லும் வாகனங்களால் மாநகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
இதைக் குறைப்பதற்காக மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77.6 கோடி செலவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் அமைக்க, கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாகவும், முதல்வருமாக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். உழவர்கள், உற்பத்தியாளர்களுக்கு 207 கடைகளும், வியாபாரிகளுக்கு 623 கடைகளும் கட்டப்பட்டன.
இதற்கான கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், 2017-ம் ஆண்டு செப்.5-ம் தேதி முதல்வர் பழனிசாமி இதனைத் திறந்து வைத்தார். ஆனால் இடவசதி உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளிக்குடி மார்க்கெட்டில் கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டு, வியாபாரிகளுக்குக் கடைகள் ஒப்படைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடந்த 30.6.2018-ல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரால் முதல் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், 5 வியாபாரிகள் மட்டுமே அங்கு கடை திறந்தனர். காந்தி மார்க்கெட்டிலுள்ள மற்ற வியாபாரிகளைக் கள்ளிக்குடிக்கு மாற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வியாபாரமின்றி நஷ்டம் ஏற்பட்டு, அங்கிருந்த 5 வியாபாரிகளும் கடையை மூடிவிட்டு, மீண்டும் காந்தி மார்க்கெட்டுக்கே வந்துவிட்டனர். இதனால் ரூ.77 கோடி செலவில் கட்டப்பட்ட கள்ளிக்குடி வணிக வளாகம் மூடப்பட்டு, பயன்பாடற்றுக் கிடக்கிறது.
இதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் செயல்படும் திருச்சி மாவட்ட மனிதவளர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடைகளை வாடகைக்குப் பெற்று 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாத நிலையில் இருப்பதால், அவற்றுக்கான உரிமத்தை ரத்துசெய்து, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் திருச்சி மாவட்ட விற்பனைக் குழு தற்போது உத்தரவிட்டுள்ளது.
அதில், ''கடைகளைப் பெற்று 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும், வாடகை செலுத்தாமலும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் உள்ளதும், ஒப்பந்த ஆவண நிபந்தனைகளுக்கு எதிரானது. எனவே கள்ளிக்குடி வணிக வளாகத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. கடையின் சாவி மற்றும் கடையுடன் ஒப்படைக்கப்பட்ட தளவாடங்களை நல்ல முறையில் வணிக வளாகப் பொறுப்பாளரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு வட்டாரத்தில் விசாரித்தபோது, "கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடைகளைப் பெற்றவர்கள் அவற்றைத் திறக்க வேண்டுமென என இதற்கு முன் ஆட்சியராக இருந்த கு.ராசாமணி தலைமையில் 3 முறையும், தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ள சு.சிவராசு தலைமையில் 2 முறையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் சிரு தலைமையில் ஒரு முறையும் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்துத் தேவையான வசதிகளும் செய்து தரப்பட்டன.
அதற்குப் பின்பும் கடைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது ஒப்பந்த நிபந்தனைகளுக்கு என்பது எதிரானது என்பதால் தற்போது 288 பேருக்கு அளிக்கப்பட்ட 288 கடைகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுக் கடிதம் வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப, விரைவில் மீண்டும் மறு ஒப்பந்தம் கோரப்பட்டு கடைகள் ஒப்படைக்கப்படும்" என்றனர்.
கள்ளிக்குடி மார்க்கெட்டைத் திறக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை, வரும் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், வேளாண் விற்பனைக் குழுவின் இந்த அதிரடி முடிவு திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...