காங்கிரசுக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், சோனியா குடும்பத்துக்கு நெருக்கடி கொடுக்க, கட்சியில், 23 பேர் அடங்கிய அதிருப்தி தலைவர்கள் குழு திட்டமிட்டுள்ளது. இதனால், காங்கிரசில் நிச்சயம் பிளவு ஏற்படும் என, அஞ்சப்படுகிறது.
ராகுல் மறுப்பு
தற்போது காங்., தற்காலிக தலைவராக, சோனியா உள்ளார். அதே நேரத்தில், நிரந்தர தலைவராக பொறுப்பேற்கும்படி, பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தியும், அதை ஏற்க, ராகுல் மறுத்துள்ளார். ராகுலின் சகோதரி பிரியங்கா, பொதுச் செயலராக உள்ளார்.'கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட, 23 மூத்த தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, சோனியாவுக்கு அவர்கள் கடிதம் அனுப்பினர். அதைத் தொடர்ந்து, அந்த மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.இந்நிலையில், தங்கள்நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், குலாம் நபி ஆசாத் தலைமையில், 23 மூத்த தலைவர்கள், மே, 17ல், சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தற்போது, ஐந்து மாநில சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. வரும் மே, 2ல், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அதன் பின், கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில், செயற்குழுவுக்கு தேர்தல்நடத்த, இவர்கள் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், காங்.,குக்கு பலத்த அடி விழும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
கட்சியை வலுப்படுத்துவோம்
லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ளன. தற்போதில் இருந்து திட்டமிட்டு, கட்சியை வலுப்படுத்தினால் தான், 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராக முடியும். ஆனால், கட்சிக்குள் மூத்தவர்கள், இளையோர் என பிரித்து பார்க்கப்படுகிறது. நாங்கள் காங்.,குக்கு எதிரானவர்கள் அல்ல. கட்சியை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரு பக்கம், தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை, காங்.,கில் இணையச் செய்து, அவரை தலைவராக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதை, சோனியா குடும்பம் ரசிக்கவில்லை.மற்றொரு புறம், ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தயாராக இல்லை.
அதே நேரத்தில், 'ராகுல்தான் கட்சியின் தலைவர், பிரதமர் வேட்பாளர்' என, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட சில தலைவர்கள் கூறி வருகின்றனர். 'சோனியாவின் உடல்நலம் தான் முக்கியம்' என, அம்பிகா சோனி போன்றோர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், குலாம் நபி ஆசாத் தலைமையிலான, 23 அதிருப்தி தலைவர்கள், செயற்குழுவுக்கு தேர்தல் நடத்த நெருக்கடி கொடுக்க உள்ளனர். அவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, மூன்று எம்.பி.,க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கட்சியில் பலரும், பல திசைகளை நோக்கி ஓடுகின்றனர். அதனால், காங்கிரசில் பிளவு என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது. அடுத்த மாதம் நடக்கும்அதிருப்தி தலைவர்கள் கூட்டத்தின் முடிவில், அது தெரியவரும் என, பரபரப்பாக பேசப்படுகிறது.
No comments:
Post a Comment