'மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள்; சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டோம். வருமான வரித் துறை வாயிலாக சோதனை நடத்தினால், நாங்கள் பயந்து விடுவோமா?' என, ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டத்தில் கொந்தளித்திருக்கிறார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.
அவரது மருமகன் சபரீசன் மற்றும் அவரின் நண்பர்கள் அண்ணா நகர் எம்.எல்.ஏ.,வின் மகன் கார்த்திக் மற்றும், 'ஜீ ஸ்கொயர்' நிறுவனத்தின் பாலா ஆகியோரின், இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் தகவல் தான், ஸ்டாலினை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
வருமான வரித் துறையினர் எந்த அடிப்படையில், சபரீசனை குறி வைத்தனர் என்று விசாரித்த போது, சுவாரசியமான தகவல்கள் வந்து விழுந்தன. சபரீசன் வசிப்பது, கிழக்கு கடற்கரை சாலையில், ஒன்றரை ஏக்கர் பரப்பில், பிரமாண்டமாக கட்டப்பட்ட மாளிகையில். அது, ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கு சொந்தமானது. சபரீசன் இங்கிருந்து தான், தமிழகம் கடந்தும் அரசியல் ரீதியில் செயல்படுகிறார்.
தி.மு.க.,வின் வெற்றிக்காக, பிரஷாந்த் கிஷோரின், 'ஐ - பேக் டீமோடு' ஒப்பந்தம் போட்டு, ஓராண்டாக அவர்களை தமிழகத்தில் களம் இறக்கி விட்டதில் துவங்கி, கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை இறுதி செய்தது வரை எல்லாமே, சபரீசன் இங்கிருந்து செய்த பணிகள்.
அவரது நெருங்கிய நண்பர் அண்ணா நகர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., மோகனின் மகன் கார்த்திக். இன்னொருவர், 'ஜீ ஸ்கொயர்' என்ற, நிறுவனத்தின் அதிபர் பாலா. தி.மு.க.,வில் இவர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலைக்கு சென்றது தான், இப்போது வருமான வரி சோதனை நடப்பதன் பின்னணி என்கிறார்கள், கட்சி நிர்வாகிகள் சிலர்.
தமிழகத்தில், பெரிய தொழில் நிறுவனங்கள், ஆலைகள் அல்லது கம்பெனிகள் அமைக்க இடம் தேவைப்பட்டால், 'ஜீ ஸ்கொயர்' நிறுவனத்தை அணுகுவர். நிறுவனத்துக்கு சொந்தமாகவே, சென்னையிலும், சுற்றியுள்ள ஊர்களிலும் எக்கச்சக்கமான நிலங்கள் உள்ளன. தேவையான இடத்தில், தேவையான அளவு நிலம் வாங்கித் தர முடிகிறது என்பதால், இந்த நிறுவனத்துடன் நுாற்றுக்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்பில் இருக்கின்றன.
இதனால், பெரிய தொழில் அதிபர்களை, சபரீசனும், அவரின் நண்பர்களும் சுலபமாக சந்தித்து, கட்சிக்கு தேர்தல் நிதி திரட்ட முடிகிறது. அவ்வாறு குவிந்த நிதியை, சபரீசன் வீட்டில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் பிரித்து அனுப்பி உள்ளனர். அதுபோக, கணிசமாக மீதி இருக்கும் நிதி, இந்த மூவருக்கும் சொந்தமான இடங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என முகவரி, போகும் வழி, 'மேப்' எல்லாம் போட்டு வரித் துறைக்கு தகவல்கள் போயிருக்கின்றன.
அதன் அடிப்படையில், ஒரு வாரமாக மூவரையும் கண்காணித்த பிறகே, ரெய்டுக்கு உத்தரவு பெறப்பட்டது என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தல் நேரமாக இருப்பதால், இந்த ரெய்டுக்கு அரசியல் சாயம் பூசப்படும் என்பதும், உயர் அதிகாரிகளுக்கு தெரியும். என்றாலும், கருப்புப் பண நடமாட்டமும், தேர்தல் சார்ந்ததாக இருப்பதால், ரெய்டு போவதை தள்ளிப்போட முடியாது என, அவர்கள் தீர்மானித்தனர்.
சபரீசனும், அவரது நண்பர்களும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, பெங்களூரு, மும்பை, டில்லி, நாக்பூர் போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் சென்று வந்துள்ளனர். அங்கெல்லாம், அவர்கள் எங்கே தங்கினார்கள், யார் யாரை சந்தித்தார்கள் என்ற தகவல்களும் வரித் துறைக்கு கிடைத்துள்ளன.
சபரீசன் ஏழு கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார். அவரது உறவினர் பிரவீன் கணேஷ், 12 கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார். அந்த நிறுவனங்கள் பெரும்பாலும் மின் உற்பத்தி, தாமிர உற்பத்தி, நிதி, கல்வி சம்பந்தமான தொழில்களில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில், சபரீசனும், அவரது ஆட்களும் சாதாரண தொழில் அதிபர்களிடம் கூட, 25 முதல்,- 50 லட்சம் வரை நிதி வசூல் செய்துள்ளனர். 'அடுத்து ஆட்சிக்கு வருவது நாங்கள் தான்; நல்லபடி தொழில் நடக்க வேண்டும் என்று தானே விரும்புவீர்கள்?' என்ற, இரண்டே வாக்கியங்கள், தொழிலதிபர்களை பணிய வைத்து விடும் என, நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டார்.
இதில் என்ன பிரச்னை என்றால், அந்த தொழில் அதிபர்களில் பலரிடமும், இதற்கு முன் தேர்தல் நிதி வசூல் செய்தது உள்ளூர் கட்சி நிர்வாகிகள் தான். இப்போது சபரீசன் வாயிலாக, நேரடியாக தலைமையே வசூலில் இறங்கியதால், அந்த, 'லோக்கல்' புள்ளிகளுக்கு பெரும் இழப்பு. இதை அவமதிப்பாகவும் பார்க்கின்றனர். அவர்களும் வரித்துறைக்கு போட்டுக் கொடுத்திருக்கலாம் என, நம்பப்படுகிறது.
இந்த சோதனைகளை நடத்துவதால், வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள பணத்தையும் எடுக்க முடியாத அளவுக்கு சிக்கல் உருவாகி விடும். பதற்றத்தில் பணத்தை வெளியே எடுக்க மாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை, அது கட்டுப்படுத்தும் என்ற அளவில் தேர்தல் கமிஷனுக்கு அதுவே திருப்தியாக இருக்கும்.
No comments:
Post a Comment