'கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தலில் அ.தி.மு.க., படு தோல்வியைத் தழுவினால் அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாத நிலை உருவாகும்' என, அரசியல் வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும், அவ்வாறான தோல்வி, சசிகலா மற்றும் தினகரன் வசம் அ.தி.மு.க.,வை கொண்டு சேர்த்துவிடும் எனவும் கூறி வந்தனர். ஆனால், தற்போதையை தேர்தல் முடிவுகள் தோல்வி இந்த கணிப்பை தவிடுபொடியாக்கி உள்ளன.
ஜெயலலிதா இல்லையென்றாலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியையும் ஆட்சியையும் திறப்பட வழிநடத்தியதோடு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதனால் தற்போது அவருக்கு கிடைத்திருப்பது கவுரவமான தோல்வியாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.
இந்த கவுரவத் தோல்வியைப் பெற்றிருப்பதால், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் இனியொரு தலைவர் உருவாவதற்கான வாய்ப்பு குறைத்துள்ளது. 'இந்த தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு தோல்வியைத் தந்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றியையே தந்திருக்கிறது' என, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும், ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையை எட்டவேண்டும் என்ற கனவுடன் களமிறங்கிய கட்சிகளை, அ.தி.மு.க.,வின் தற்போதைய கவுரவத் தோல்வி ஓரங்கட்டியுள்ளது. மேலும், தமிழகத்தில் இனி வரும் காலங்களிலும் தி.மு.க.,வா அ.தி.மு.க.,வா என்ற நிலை தொடர்வதையே இந்த தேர்தல் முடிவு உறுதிப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment