திடீரென ஒரு அறிக்கை
------------------
இன்று மதியம் 3 மணி முதல் 9 மணி வரை மற்றும் நாளை முழுவதும் கடை திறப்பு.
அதன் பின்னர் ஒரு வாரம் கடை அடைப்பு. ஆனாலும் அத்தியாவசிய பால் காய்கறி விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடு.
இந்த செய்தியை தற்செயலாக 3:15 PM - க்கே தெரிந்து கொண்டேன். செய்தி அதிகம் பரவும் முன் திறந்திருக்கும் ஏதாவது ஒரு கடையில் அடிப்படை தேவையான காய்கறிகளை வாங்கி விடலாம் என்று சென்றேன். அதற்குள் எப்படி தான் செய்தி பரவுகிறதோ தெரியவில்லை. 3:30 PM ஏறத்தாழ 75% பல்பொருள் அங்காடிகள் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.
நான் போகும் போது மணி 4:30 இருக்கும். அதற்குள் ஒவ்வொரு காய்கறி கடையிலும் பெருங்கூட்டம்.
சரி என்னைப் போலவே அனைவரும் கூட்டம் சேரும் முன் வாங்க நினைத்திருக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
உள்ளே சென்று பார்த்தால் அவர்கள் வாங்கும் அளவும் விதமும் பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது. எதோ இன்று, அதுவும் இப்போதே வாங்கினால் மட்டுமே உயிர் வாழ முடியும் அல்லது வாழ்நாள் முழுவதும் எதுவுமே வாங்க முடியாது என்பது போல் வாங்கிக் குவித்தார்கள். எனக்குத் தெரிந்து ஓய்வு பெற்ற தம்பதியாக இருவர் மட்டுமே வீட்டில் இருக்கும் அவர் எதோ வீட்டில் விசேஷத்துக்கு வாங்குவது போல வாங்குகிறார். சத்தியமாக இப்படி கடைக்கு நான்கு பேர் வாங்கினால் பின்னால் வருபவர்களுக்கு எதுவுமே கிடைக்காது. சரி அதுவாவது அவருக்காவது பயன்படுமா என்றால் பிரிட்ஜ் உள்ளே வைத்தால் கூட 6 பேர் உள்ள ஒரு சிறிய குடும்பத்துக்கே 10 நாட்களுக்கு வரும். கண்ண்டிப்பாக அவர் வாங்கியதில் பெரும்பாலும் வீணாகிவிடும்.
ஒரே ஒரு பொருள் வாங்க பல் பொருள் அங்காடிக்குச் சென்றேன். அங்கே உள்ள கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்த பொருள் இல்லாமலேயே ஒரு வாரம் சமாளித்து விடலாம் என்று திரும்பிவிட்டேன். அப்போது தான் பார்த்தேன் ஒருவர் stainless steel பாத்திரங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் என எதை எதை எல்லாமோ வாங்கிச் செல்கிறார். இது அவ்வளவு அவசரமான பொருளா என்று தெரியவில்லை.
இன்னும் ஒரு கூடுதல் தகவல் - வந்தவர்களும் அந்த கடைகள் இருந்த இடமும் படித்தவர்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் நிறைந்த பகுதி. எனக்குத் தெரிந்து கிராமத்தில் அதிகம் படிக்காமல் இருப்பவர்களுக்கு இருக்கும் விழிப்புணர்வு கூட படித்த நகர்வாசிகளிடம் இல்லை.
*நாளை ஒரு நாள்*
அத்தியாவசியத் தேவை என்றல் மட்டும் பொருள் வாங்க நாளை கடைக்குச் செல்லுங்கள்.
பால் போன்ற பொருட்களுக்குத் தடை இல்லை.
மருந்து கடைகளுக்குத் தடை இல்லை.
காய்கறிகள் பழங்கள் போன்றவை தள்ளுவண்டியில் மூலம் உங்கள் தெருவுக்கே வரும்.
வெளியில் சென்று வாங்கிவரும் சொகுசான உணவை விட வீட்டில் இருக்கும் சாதாரண உணவை உண்ணுங்கள்.
அத்தியாவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம்.
தேவை இல்லாமல் நாளை கூட்ட நெரிசலுக்குள் சென்று பொருளோடு *கொரோனாவையும்* சேர்த்து வாங்கி வர வேண்டாம்,
------------------------------
பொது மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல்
எந்த ஒரு அரசும் எதையும் சாதிக்க முடியாது.
------------------------------
எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவு .
No comments:
Post a Comment