Saturday, November 6, 2021

முதல்வர் பதவியின் மாட்சி!

 இந்தியாவின் எதிரிகளான சீன அதிபர், பாகிஸ்தான் பிரதமர், ஆப்கானிஸ்தான் கொலை கூட்டமான தலிபான் தலைவன் ஆகியோருடன், நம் முதல்வரின் பெயரையும் சேர்த்து சமூக ஊடகத்தில் ஒரு பதிவு பார்த்தேன்; அதிர்ச்சியாகி படித்தேன்.


'தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத தலைவர்கள், இந்த நால்வர் தான்' என்று, யாரோ ஒருவர் எழுதி இருந்தார்.அந்த கொடியோரோடு, முதல்வர் ஸ்டாலினின் பெயரை சேர்த்ததில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அப்படி விமர்சனம் செய்தவரின் மன வேதனையை என்னால் உணர முடிகிறது.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லை என்பதற்காக, உலகில் எங்கேயும் தீபாவளி கொண்டாட்டம் சோடை போகவில்லை. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த தீபாவளி பல மடங்கு களைகட்டி இருந்தது உண்மை.நம் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்று, கட்சிக்காரர்கள் தான் கவலைப்பட வேண்டும்.

ஆனால் ஸ்டாலினை இப்போது, 'தி.மு.க., தலைவர்' என உலகம் அழைக்கவில்லை. 'தமிழக முதல்வர்' என்றே அவர் அறியப்படுகிறார். ஏழரை கோடி மக்களுக்கு, அவர் முதல்வர். அவருடைய விருப்பு, வெறுப்பு ஒவ்வொன்றும் அத்தனை மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.பதவிப் பிரமாணம் எடுக்கும் போதே, 'பாரபட்சமாக நடக்க மாட்டேன்' என்று உறுதி அளித்தவர், அதன்படி செயல்படுகிறாரா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு, தமிழக மக்களுக்கு இருக்கிறது.

'மத சார்பற்ற அரசு' என்ற பெயரால், எந்த மதத்தை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் எதுவும் பேசாமல் இருந்தால், எவரும் கேள்வி எழுப்ப போவது இல்லை. ஆனால் ஹிந்து மதத்தை மட்டும் உதாசீனம் செய்து, பிற மதங்களை கொண்டாடுவது எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று!இது ஏதோ தவறுதலாக, எப்போதாவது நடக்கும் நிகழ்வு அல்ல. எப்போதும் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அவமதிப்பு என்றே ஹிந்துக்கள் கருதுகின்றனர்.

'நாமும் ஓட்டு போட்டு தானே, இவரை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தோம்; பின் ஏன் இப்படி நம்மை மட்டும் எப்போதும் மட்டம் தட்டுகிறார்' என்ற கேள்வி, ஒவ்வொரு ஹிந்துவின் மனதிலும் உறைந்திருக்கிறது.'எவ்வளவு அடித்தாலும் ஹிந்துக்கள் தாங்குவர்' என்ற எண்ணத்தில் தொடர்ந்து செயல்படுவது முதல்வருக்கு அழகல்ல!


latest tamil news


'மற்ற மத பண்டிகைகளை போல, ஹிந்து பண்டிகைக்கும் வாழ்த்து சொன்னால், உங்களை திராவிட பாரம்பரியம் மற்றும் பகுத்தறிவு பாசறையில் இருந்து விலக்கி விடுவர்' என, யாராவது மூளைச்சலவை செய்துள்ளனரா என்று தெரியவில்லை.நமக்கு தெரிந்தது ஒன்று தான்... வகிக்கும் பதவிக்கு பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டியது, ஒவ்வொருவரின் கடமை. பல மதங்கள் உடைய நாட்டில், அனைவரையும் சமமாக பாவிப்பது ஆட்சியாளரின் மாட்சி.அந்த வழியில், ஹிந்துக்களையும் அரவணைத்து செல்ல வேண்டியது, முதல்வர் ஸ்டாலினின் பொறுப்பு.யார் என்ன சொல்வரோ என்ற பயத்தில் பொறுப்பை தட்டிக் கழிப்பது, கோழையின் மரபணு

.'கொள்கை, சித்தாந்தம், விருப்பு, வெறுப்பு எதுவாயினும் சரி, என் மக்களின் மகிழ்ச்சியே பிரதானம்' என்று நம்பும் மன்னனின் மாண்பு, முதலவர் ஸ்டாலினுக்கு வர வேண்டும்.மூகாம்பிகை கோவிலுக்கு செல்ல, எம்.ஜி.ஆர்., எவரிடமும் அனுமதி கோரவில்லை.

'ஆமாம், நான் பாப்பாத்தி தான்' என்று சட்டசபையில் முழங்க, ஜெயலலிதா தயங்கவில்லை.திருத்திக் கொள்ளுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே... நீங்கள் இன்னும் போக வேண்டிய துாரம் அதிகம் இருக்கிறது. சுமைகளை இறக்கி வைத்தால், பயணம் சுகமாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...