இங்கே நிறைய முட்டாக் கூவைகள் அன்பு ஒன்றுதான் அனாதை என்று அடிக்கடி பிதற்றிக் கொண்டிருப்பதை காண நேரிடுகிறது
உள்ளே தன்னைப் பிச்சைக்காரனாய் உணரும் ஒருவன்தான் வெளியே கையேந்தி நிற்பான்
நீங்கள் உங்கள் உள்ளே வெறுமையை இயலாமையை தோல்வியை காயங்களை வலிகளை ஏமாற்றங்களை என இத்தனைக் குப்பைக் கூளங்களை சுமந்து அலைந்து கொண்டிருக்கிறீர்கள் பிறகு என் மீது யாரும் அன்பு செலுத்தவில்லை என்று பிச்சையெடுக்கக் கிளம்பி விடுகிறீர்கள்
உங்கள் உள்ளே இருப்பது வைரம் என்பதையறியாமல் கூழாங்கற்களாய் எண்ணி தூக்கி வீசிவிடுகிறீர்கள்
முதலில் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதைப் பகிர்ந்து கொள்ள முயலுங்கள் பணம் இருந்தால் பணம்
பொருள் இருந்தால் பொருள்
இவை எதுவும் இல்லையென்றாலும் கூட
நட்பு காதல் அன்பு நம்பிக்கை புன்னகை மகிழ்ச்சி என மனித உணர்வுகளில் இத்தனை பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கிறது
ஆனால் நீங்களோ இவற்றின் மீது மண்ணை வாரியிறைத்துவிட்டு சதா சர்வ காலமும் புலம்பிக் கொண்டே திரிகிறீர்கள் என்ன ஒரு கேவலமான ஜென்மங்கள் நீங்கள்
சாப்டியானு கேட்கக் கூட ஆளில்லை என்று புலம்புகிறீர்கள்
அதுசரி நீங்கள் இதுவரை எத்தனை பேரை சாப்ட்டியா என்று கேட்டிருக்கிறீர்கள்
முதலில் உங்களில் இருந்து தொடங்குங்கள் அது பல்கிப் பெருகி பன்மடங்காகும்
எதையும் எதிர்பார்த்துச் செய்யாதீர்கள்
முதலில் கொடுக்கும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு மலரைப் பரிசளித்தால் அது ஓராயிரம் மலராக திரும்பி வரும் இதுவே பிரபஞ்ச விதி
எதைக் கொடுக்கிறீர்களோ அதையே திரும்பப் பெறுவீர்கள்
நீங்கள் வெறுப்பை விதைத்தால் வெறுப்பையே மீண்டும் அறுவடை செய்வீர்கள்
மனிதனைத் தவிர எந்த உயிரினமும் அன்பிற்க்காக பிச்சையெடுப்பதில்லை
கேட்டுப் பெறுவதற்கு அன்பு வெறும் யாசகம் அல்ல
முதலில் கொடுத்துப் பழகுங்கள்
அன்பு கொடுக்கக் கொடுக்கப் பெருகுமே தவிர ஒருபோதும் குறையாது
அதுவே அன்பின் மகத்துவம்
அப்படிக் கொடுப்பதற்கு உங்களை நீங்கள் பேரரசனாக உணர வேண்டும்
இதுவரை பிரபஞ்சம் உங்களுக்கு
வாரி வழங்கியவற்றுக்கு நன்றி சொல்லிப் பழக வேண்டும்
இந்த சூரியன் யாருக்காக உதிக்கிறது இந்த நிலா யாருக்காக ஒளி வீசுகிறது
இந்த மழை யாருக்காக பொழிகிறது
இந்தத் தென்றல் யாருக்காக வீசுகிறது
ஒரு மலர் மலர்ந்து மணம் பரப்புவது யாருக்காக
அந்தக் குயில் கானம் இசைப்பது எதற்க்காக
ஒரு ஆடை தயாரிக்க எத்தனை மனிதர்கள் உழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா
ஒரு கவளம் உணவு உங்கள் கைகளுக்கு வந்து சேர்வதற்குள் எத்தனை விவசாயி மடிந்து சாகிறான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா
உங்கள் உடல் ஒருநாளைக்கு எத்தனை விதமான பணிகளைச் செய்கிறது என்பது உங்களுக்குப் புரிகிறதா
எத்தனை முறை இதயம் துடிக்கிறது என்பதை அறிவீர்களா
நீங்கள் கருவாய் உருவாய் உயிராய் உருவெடுத்து இந்த பூமியை முத்தமிட உங்கள் தாய் எத்தனை இரவு உறங்காமல் கண் விழித்திருக்கிறார் என்பதை கேட்டறிந்திருக்கிறீர்களா
உங்கள் தகப்பன் எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பான் என்பது தெரியுமா
இந்தப் பிரபஞ்ச விதியில் எதுவும் அனாதையில்லை
எல்லாம் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கிறது இயங்குகிறது
கூட்டிலிருந்து புறப்படும் பறவைக்கு அடுத்த வேளை உணவு எந்தத் திசையில் இருக்கிறது என்பது தெரியாது
திரும்பி வரும் வரை தனது குஞ்சுகள் உயிரோடிருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது
எறும்புக்கும் உணவை வைத்துப் படைத்தே இருக்கிறது இயற்கை
உங்கள் மொழியில் இறைவன் என்று வேண்டுமானால் புரிந்து கொள்ளுங்கள்
பறவையிடம் நாயிடம் கிளியிடம்
மழலையிடம் ஏன் ஒரு கிழவியிடம் கூட காதலின் ஸ்பரிசத்தையும் அன்பின் உன்னதத்தையும் உணர முடியும்
நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று உளறிக் கொண்டிருக்கும்வரை நீங்கள் அநாதைதான்
அன்பு என்றுமே அநாதையில்லை
அதன் சாறை அள்ளிப் பருகத் தெரியாத நீங்கள்தான் அநாதை.
No comments:
Post a Comment