உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் இடப்பங்கீடு பேச்சு நடத்துவதற்கு முன், அதிக இடங்களை கேட்டு, 'செக்' வைக்கும் வகையில், விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று(நவ., 18) அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவி பங்கீடு குறித்து தி.மு.க.,விடம் ம.தி.மு.க., இன்னும் அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்தவில்லை. ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதை விட, அதிக இடங்களில் ம.தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது. போட்டியிட விரும்பும் ம.தி.மு.க.,வினரிடமிருந்து, விருப்ப மனுக்கள் அதிக அளவில் பெற்று விட்டால், அதை காரணம் காட்டி, அதிக இடங்களை தி.மு.க.,விடம் கேட்கலாம் என்று வைகோ கருதுகிறார்.
மேலும், ம.தி.மு.க.,வுக்கு குறைந்த இடங்களை கொடுத்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, கட்சியினரிடம் விருப்ப மனுக்களை வாங்க துவங்கி விட்டார். விருப்ப மனுக்கள் எண்ணிக்கையை காட்டி, கட்சிக்கு இவ்வளவு இடங்கள் வேண்டும் என, தி.மு.க.,விடம் பேரம் பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார்.அவரது அறிக்கை:நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம், விருப்ப மனுக்களை பெற தலைமை நிலைய பிரதிநிதிகள், வரும் 29ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
வேட்புமனு கட்டணமாக, மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ௧,௦௦௦ ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 500 ரூபாயும், பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 250 ரூபாயும் செலுத்த வேண்டும். ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினராகவும், சங்கொலி பத்திரிகை சந்தாதாரராகவும் இல்லாதவர்கள், விருப்பு மனுவுடன் வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் 500 ரூபாயும், சங்கொலி பத்திரிகை ஆண்டு சந்தா 550 ரூபாயும் செலுத்த வேண்டும். இவ்வாறு, வைகோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment