தமிழக அரசில், நிதித்துறை செயலர் உட்பட அரசு துறை செயலர்கள், 10 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், நிதித்துறை செயலராக இருந்தவரே தி.மு.க., ஆட்சியிலும் தொடர்ந்தார். 'அ.தி.மு.க., ஆட்சியில் நிதி மேலாண்மையை சிறப்பாக செய்யவில்லை' என்று அவரை அருகில் வைத்துக் கொண்டே, நிதித்துறை அமைச்சர் குற்றம் சாட்டியபோது, செயலர் தர்மசங்கடமாக தவித்தார். இதனால், அவர் வேறு துறைக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கும் அவரை வைத்துக் கொண்டு, பழைய குறைகளை கண்டறிந்து கூறுவதில் சிக்கல் இருந்ததால், அவர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு, முக்கிய துறைகளை ஒதுக்கப்பட்டது, மற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம், புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
சத்துணவில் பொரியல்?
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் துவக்கி வைத்தார். இதற்காக மரக்காணம் செல்லும் வழியில், கடப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில், அவர் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது, சத்துணவு கூடத்திற்கு சென்ற அவர், 'என்ன உணவு தயாராகிறது' என ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். அப்போது, 'சத்துணவில் கூட்டு, பொரியல் ஏதும் இல்லையே...' என யோசித்த முதல்வர், அதுகுறித்தும் விசாரித்துள்ளார்.
இதனால், சத்துணவில் ஏற்கனவே முட்டை, சுண்டல் வழங்கப்படுகிறது. சத்துணவுடன் கூட்டு அல்லது பொரியல் வழங்கினால் என்ன என்று முதல்வர் ஆலோசித்துள்ளார். சத்துணவில் கூட்டு, பொரியல் அறிவிப்பு விரைவில் வரலாம் என்கின்றனர் அதிகாரிகள்.
அமைச்சர் 'மிஸ்சிங்' என்னமோ 'சம்திங்!'
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலின், 6ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு ஆகியோர் பங்கேற்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை.
அவர் ஊரில் இருப்பதால் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.சென்னையில் கன மழை கொட்டி தீர்த்ததும், மழை நீர் தேங்கியிருந்த பகுதிகளுக்கு, முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அதன்பின், மாநில பேரிடர் மேலாண்மை அலுவலகம் சென்று ஆய்வு செய்தார். அப்போதும் துறை அமைச்சர் ராமச்சந்திரன் இல்லை. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment