காஞ்சிபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும், தொண்டை மண்டல ஆதீனத்தின், 233வது குருமஹா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தன் மடாதிபதி பொறுப்பை துறக்க முடிவெடுத்து, ஆதீன மடத்துக்கான ஆலோசனைக் குழுவிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தது, ஆதீன பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்பிரச்னை குறித்து, மடத்தின் தொடர்பில் இருந்து பணியாற்றும் பக்தர்கள் கூறியதாவது: தொண்டை மண்டல ஆதீன மடம், 600 ஆண்டுகள் பழமையானது. இந்த மடத்துக்கு, நாடு முழுதும் 82 இடங்களில், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன. மடத்திற்கென கோவில்களும் உள்ளன. ஆனால், பெரிதாக வருமானம் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன், மடத்தின் ஆதீன கர்த்தராக, 233வது குருமஹா சன்னிதானமாக, ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றார்.
இவர் அரசு பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆதீன மடத்தின் தீவிர பக்தர்; அவரது இயற்பெயர் நடராஜன். ஆதீன கர்த்தராக பொறுப்பேற்ற பின், மடத்தின் நிர்வாகத்தை செம்மைப்படுத்தினார். மடத்துக்கு வருவாய் ஈட்டும் முயற்சியில் களம் இறங்கினார். ஆதீன கர்த்தர்கள் மடத்தின் முழு நிர்வாக பொறுப்பையும் ஏற்று நடத்த வேண்டும் என்பது தான், தொண்டை மண்டல ஆதீன மடம் அமைக்கப்பட்டபோது ஏற்படுத்தப்பட்ட மரபு. கடந்த 1952ம் ஆண்டு, 227 வது ஆதீன கர்த்தர் காலத்தில், மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. அதன் மேலாளர் ஆதீன கர்த்தருக்கு உதவ வேண்டும் என்பது தான் அப்போதைய விதிமுறை
கடந்த 1975ம் ஆண்டு, நிர்வாக குழு மேலாளர், நிர்வாக குழுத் தலைவராக மாற்றப்பட்டார். மடத்தின் சொத்துக்கள் நிர்வாகம் குழு வசம் வந்தது. ஆதீனகர்த்தர் 'டம்மி'யாக்கப்பட்டார். இதனால், பிரச்னை பெரிதாகி, 230 ஆதீனகர்த்தர் காலத்தில், 1978ம் ஆண்டு மீண்டும் மடத்தின் நிர்வாகம் அனைத்தும் ஆதீனகர்த்தருக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு ஆலோசனை கூற, ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் பதவி காலம் மூன்று ஆண்டுகள்.அமைச்சரின் உறவினர் தற்போது, தொண்டை மண்டல ஆதீன மடத்தின் ஆலோசனை குழுவில் ஐந்து பேர் உறுப்பினர்கள். மதுரையைச் சேர்ந்த விஜயராஜன் தலைவராக உள்ளார்.ஈரோடு பாலசுப்பிரமணியன், மயிலாடுதுறை ஞானசம்பந்தம், திருச்சி ராமச்சந்திரன், காஞ்சிபுரம் குப்புசாமி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.விஜயராஜன் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனின் அண்ணன் மகன்.ஒரு கட்டத்தில், குழு உறுப்பினர்களுக்கு, நேரடியாக மடத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் ஆசை வந்துவிட்டது. அதனால், ஆதீனகர்த்தருக்கு நெருக்கடி கொடுத்து, அவர் பதவியை துறக்க வைக்க நினைக்கின்றனர்.
திருநெல்வேலி நகரின் மையப்பகுதியில், மடத்துக்கு சொந்தமான 6,000 சதுர அடி இடம் உள்ளது. அதை ஹோட்டல் நடத்தும் நபருக்கு, 80 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தோம். வாடகை குறைவு என்பதால், நெல்லைக்கு நேரில் சென்ற ஆதீனகர்த்தர், ஹோட்டல் உரிமையாளரிடம் பேசி, மாத வாடகையை 2.6 லட்சம் ரூபாயாக உயர்த்தினார்.தொடர் நெருக்கடி அதற்கு முன், ஆலோசனை குழுவினர் மாத வாடகையாக, பல லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தவே, ஹோட்டல் உரிமையாளர், கோர்ட்டுக்கு செல்ல முடிவெடுத்தார்.கோர்ட்டுக்கு போனால் பிரச்னை முடிவுக்கு வராது என்பதால், ஓட்டல் உரிமையாளரிடம் நேரடியாக பேசி தீர்வு கண்டார்
இதனால், ஆலோசனைக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆதீன கர்த்தருக்கு கூடுதல் குடைச்சல் கொடுத்தனர்.நெருக்கடி அதிகமானதால், தன் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு, விலகி இருக்க ஆதீனகர்த்தர் முடிவு எடுத்தார். ஆதீன மடத்துக்குள் நடக்கும் உள் விவகாரங்களை வெளிப்படையாக வெளியில் பேச முடியாமல், ஆதீனகர்த்தர் தடுமாற, அரசியல் அழுத்தங்கள் தான் காரணம்.ஏற்க முடியாதுஆதீனத்துக்கு உதவியாக இருப்பதற்காகவே ஆலோசனை குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்த குழு ஒட்டுமொத்த மடத்தின் நிர்வாகத்தையும் கையில் எடுத்து செயல்படுவதை ஏற்க முடியாது. மடத்தை பொறுத்த வரை, ஆதீனம் தான் பெரியவர். ஆலோசனைக் குழு மீது ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு புகார் அளித்து, குழுவை கலைக்க உத்தரவிட்டால், குழுவே இல்லாமல் போய் விடும். அதே நேரம், ஆதீனத்தை யாரும் மடத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியாது. ஆதீனம், தனியாக அறக்கட்டளை வைத்து, நிறைய அறப்பணிகளை செய்து வருகிறார். மடத்துக்கு வரும் பணத்தை அறக்கட்டளைக்கு திருப்பி விடுவது போல சொல்வது தவறு. பிரச்னை என்றதும் ஆதீனகர்த்தர் ஒதுங்கி விடுவார் என்று நினைத்து தான், அவர் மீது ஆலோசனை குழுவினர் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்.
இத்தனையும் நடந்த பின், இனி ஆதீனம் ஒதுங்க மாட்டார்; எந்த சவாலையும் ஏற்பார். இவ்வாறு அவர்கள் கூறினர். 'நிதி அமைச்சரை வம்புக்கு இழுப்பது சரியல்ல!'ஆலோசனைக் குழு தலைவர் விஜயராஜன் கூறியதாவது: ஆலோசனைக் குழு அரசு அனுமதியோடு, சட்டப்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது. துவக்கத்தில் இருந்தே, ஆதீனகர்த்தரின் நடவடிக்கைகள் சரியில்லை. ஆலோசனை குழு என்ற கடிவாளம் இருக்கையில் சரியாகத்தான் இருப்பார் என நினைத்தோம். ஆனால், அவர் நடவடிக்கைகள் அனைத்தும் பணத்தை நோக்கியே உள்ளன. அவர் தனியாக ஒரு அறக்கட்டளை நடத்துகிறார். மடத்துக்கு வரும் நன்கொடைகளை, தன் அறக்கட்டளைக்கு திருப்புகிறார். இது சரியல்ல என கூறியதும், நிர்வாக ஆலோசனை குழு மீது கோபம் அடைந்தார். எனினும், அவரையும் அழைத்து சென்று, வாடகை பாக்கி வசூல் செய்வது, வாடகையை உயர்த்தி, வருமானத்தை அதிகரிக்கும் வேலைகளில் இறங்கினோம். நெல்லையில் சரவணன் என்பவர் நடத்திய ஹோட்டலுக்கு, வாடகையாக 12 லட்சம் ரூபாய் நிர்ணயித்தோம். சரவணன் ஒப்பு கொண்டார்.
ஆனால், ஆதீனகர்த்தர் அவருடன் பேசி, வாடகையை 2.6 லட்சம் ரூபாய் என தீர்மானித்து, ஒப்பந்தம் போட்டு, அதை பதிவும் செய்து விட்டார். பின், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தோம். சென்னை புரசைவாக்கத்தில், மடத்துக்கு சொந்தமாக இருக்கும், 22 கிரவுண்டு நிலத்தில், சட்ட விரோதமாக ஒருவர் கட்டடம் கட்ட முயன்றார்; தடுத்தோம். அதன் பின்னணியிலும் ஆதீனம் இருப்பது தெரிந்து அதிர்ந்தோம். கட்டடம் கட்ட விடாமல் செய்து விட்டோம். இதனால், ஆதீனத்துக்கு எங்கள் மீது கோபம். அவரிடமே கேட்டோம். உடனே ராஜினாமா நாடகம் போடுகிறார். என் உறவினர், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரை சம்பந்தமில்லாமல் இந்த விவகாரத்தில் இழுத்து விடுகிறார். அவ்வாறு அவதுாறு பரப்புவதன் வாயிலாக அமைச்சருக்கு சிக்கல் வரும்; அவர் என்னை அழைத்து கடிந்து கொண்டு, குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து, என்னை விலக சொல்வார் என, ஆதீனகர்த்தர் இந்த பிரச்னைகளில் அமைச்சரை உள்ளே இழுத்து விடுகிறார். இதை அரசியல் ஆக்கினால், தேவையில்லாத வம்பு என நாங்கள் ஓடி ஒளிவோம் என நினைத்து, பொய் தகவல்களை பரப்புகிறார். தற்போதைய ஆதீனத்தை, பொறுப்பில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, புதியவரை நியமிப்போம். அதற்கான சட்ட போராட்டமும் நடத்துவோம். இவ்வாறு விஜயராஜன் கூறினார்.
No comments:
Post a Comment