மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், அவர்கள் பரவசம் அடைந்தனர்.மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்., 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.ஊரடங்கு தளர்வுகொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கோவிலுக்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டன. இந்தாண்டு ஊரடங்கு தளர்வால், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருவிழாவின் 10ம் நாளான நேற்று, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. முன்னதாக, சித்திரை வீதிகளில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்து, காலை 8:30 மணிக்கு முத்துராமய்யர் மண்டபத்தில் பொன்னுாஞ்சலில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். காலை 10:10 மணிக்கு 10 ஆயிரம் கிலோ மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் தங்க அங்கி, பொன்னிற பட்டாடை அணிந்த மீனாட்சியுடன், சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளினர்.
திருவிழாவுக்காக காப்பு கட்டியவிக்ரம் பட்டர் தலைமையில், அம்மன் சார்பில் ஹாலாஷ் பட்டரும், சுவாமி சார்பில் சிவேஷ் பட்டரும் திருமண சடங்குகளை செய்தனர். காலை 10:51 மணிக்கு நாதஸ்வரம், மேளம் முழங்க, மீனாட்சி அம்மன் கழுத்தில் சுவாமி சுந்தரேஸ்வரர் வைரத்தாலி அணிவிக்க, கோலாகலமாக திருக்கல்யாணம் நடந்தது. அந்நேரத்தில், பெண்கள் புதிய தாலி கயிறு அணிந்து கொண்டனர்.
தீபாராதனை முடிந்து அம்மனும், சுவாமியும் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் மணக்கோலத்தில் எழுந்தருளினர். தக்கார் கருமுத்து கண்ணன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நேற்றிரவு அம்மன் பூப்பல்லக்கிலும், சுவாமியும், பிரியாவிடையும் தங்க அம்பாரியுடன் யானை வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
சித்திரை திருவிழாவின்உச்ச நிகழ்ச்சியான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி, நாளை காலை 5:50 முதல் 6:20 மணிக்குள் நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை 6:45 மணியளவில் அழகர் கோவிலில் இருந்து சுவாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அதிகாலை தமுக்கம்,கருப்பணசாமி கோவில் முன் ஆயிரம்பொன்சப்பரத்தில் சுவாமிஎழுந்தருளுகிறார் தொடர்ந்து, தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார்.
ஆண்டாள் மாலை
நாளை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கு சூட்ட, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கல பொருட்கள் நேற்று மதுரை கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக, நேற்று மதியம் 3:00 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். நாளை காலை கள்ளழகர், ஆண்டாள் சூடிக் களைந்த மாலை அணிந்து ஆற்றில் இறங்குகிறார்.
No comments:
Post a Comment