காது.. உடலில் மிகச் சிறிய உறுப்புதான். ஒலிகளை உள்வாங்கி அதனை மூளைக்குக் கொண்டு செல்லும் பணியைச் செய்வதுதான் காதின் வேலையாகும்.
ஆனால், இந்த கேட்கும் சக்தி இல்லாமல் போனால்.. நாம் பேசும் சக்தியை பெற முடியாது என்பதுதான் முக்கியமான விஷயம். பல விஷயங்களை நாம் கேட்டுத்தான் தெரிந்து கொள்கிறோம், ஒருவருடன் ஒருவர் பேசிப் பழகும், புரிந்து கொள்ளவும் காது இன்றியமையாததாக உள்ளது.
செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி (நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன. வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதரி ஒலி அலைகளைச் சேர்த்து இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது. புறச்செவியில் மடலும், வெளிக் கால்வாயும் அடங்கும், செவி வெளிக்கால்வாய் காற்றலைகள் அதிர்ச்சிகளை உண்டாக்கும் புனல் போன்ற செவிப்பறையுடன் முடிகிறது. செவிப்பறை காதினை நன்றாக அடைத்து கொண்டிருக்கிறது.
செவிப்பறைச் சவ்வில் உண்டாகும் காற்றலைகள் அதிர்ச்சிகளை மூளை, ஒலி என்று இனம் அறிந்து கொள்கிறது. செவிப்பறையை அடுத்து நடுச்செவி தொடங்குகிறது. நடுச்செவி ஒரு கன சென்டிமீட்டர் பரிமாணம் கொண்ட குழியால் ஆனது. நடுச்செவிக் குழியில் ஆறு சுவர்கள் உள்ளன. செவிப்பறைக்குழி, மூக்கு முன்தொண்டையுடன் நடுச்செவி குழல் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. நடுச்செவி குழல் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமாகவும் இரண்டு மில்லி மீட்டர் துவராமும் கொண்டுள்ளது. நடுச்செவியில் சங்கிலி போன்று அமைந்துள்ள மூன்று எலும்புகள் உள்ளன. இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச் செல்கின்றன.
உட்செவி ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எலும்பு மற்றும் படலத்தாலான இரண்டு வளைந்து செல்லும் அமைப்புகள் (லேபரின்த்) உள்ளன. உட்செவி பாய்மத்தால் (அக நிணநீர் மற்றும் புற நிணநீர்) நிரப்பப்பட்டுள்ளது. பாய்மத்தின் குறுக்கே கேள்விப்புல நரம்பு உள்ளது. கேள்விப்புல நரம்பிற்கு எலும்பின் மூலம்காற்றலைகள் அதிர்ச்சிகள் (ஒலி) கடத்தப்பெறுகின்றது. மூளைக்குச் செல்லும் நரம்பின் வழி மிகவும் குறுகலானது, ஒலித்தூண்டல்கள் பெருமூளைப் புரணியில் உணரப்பட்டு செவியுணர்வுகள் தோன்றுகின்றன.
செவியைப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டியவை
ஒவ்வொரு முறை குளிக்கும் போதும் காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
குளித்த பிறகு காதின் வெளிப்புறத்தை ஈரம் இல்லாமல் துடைத்து எடுக்க வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் காதிற்குள் எதையும் விட்டு சுத்தப்படுத்தக் கூடாது. நீங்கள் சுத்தம் செய்யும் பொருட்களில் இருக்கும் ஏராளமான கிருமிகள் காதுக்குள் செல்ல வழி ஏற்பட்டுவிடும்.
காதுக்குள் இருக்கும் மெழுகு போன்ற பொருளை எடுக்கக் கூடாது. அது செவிப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அமைப்பாகும். செவியைப் பாதுகாக்க அந்த மெழுது மிக முக்கியமானது. அது மிகவும் கசப்பாக இருப்பதால் அதில் எந்த பூச்சியும் காதுக்குள் நுழையாது.
காதிற்குள் ஏதாவது பூச்சி நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெயைக் காதில் விட்டால் அந்தப் பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அந்த பூச்சியை வெளியே எடுத்துவிடலாம்.
அதுவும் பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் அதை எடுத்து விடலாம். இல்லை என்றால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.
காதில் எதையும் போட்டு குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்ப்புண்டு.
காதிலுள்ள உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.
சொத்தைப்பல், கடை வாய்ப்பல், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், உள்நாக்கு சதை வளர்ச்சி, கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.
காதில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருந்து கடைக்காரரிடம் கேட்டு ஒரு மருந்தை வாங்கி காதில் விட்டுக் கொள்வது மிகவும் தவறு. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு மருந்து காதை பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் காது வலிக்கலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காது வலிக்கலாம். எப்போதும் காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.
காது திடீரெனக் கேட்கவில்லையென்றால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது அல்லது உதாசீனமாக விடுவது சிக்கலை ஏற்படுத்தும்.
குடும்பத்தில் பிறவிச் செவிக் குறைபாடு இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிக்க வாய்ப்புண்டு.
பிறந்த குழந்தைக்கு காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் எவ்விதக் குறைபாடு இல்லை என்றாலும் பாதிக்கக்கூடும். எனவே, பிறந்த குழந்தை ஏதேனும் சத்தம் கேட்டாலும் அப்படியே இருப்பது, நீங்கள் கூப்பிட்டாலும் தலை திரும்பாமல் இருந்தால் குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும்.
சில மருந்துகளின் பக்கவிளைவாக செவிட்டுத் தன்மையை ஏற்படுத்தி விடும். ஆகையால் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள்க்கூடாது.
அதிக இரைச்சலான இடங்களில் வேலை செய்வோர் செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
சுவாசிப்பதில் பிரச்சினை அல்லது தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். சுவாச உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.
காது கேட்காதவர்கள், தாங்களாகச் சென்று ஒரு காது கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்திக் கொள்ளக் கூடாது. மற்றவரது கருவியையும் வாங்கிப் பொருத்திக் கொள்ளக் கூடாது. செவித்திறன் குறைவின் அளவைப் பொறுத்து அதற்கேற்ற கருவியையே பயன்படுத்த வேண்டும்.
உணர்வு நரம்பின் செவிட்டுத் தன்மைக்கேற்ற பொறியை மருத்துவரின் பரிந்துரைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும்.
கேட்கும் தன்மையைப் பொருத்துத்தான் பேச்சுத் திறன் அமைகிறது. எனவே காது கேளாமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.
மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.
No comments:
Post a Comment